இதுஅறிவியல்‌ விதிப்படி சரிதான்‌. கர்ப்பிணி மல்லாந்து படுக்‌கக்கூடாது. அப்படி படுக்கும்போது வளர்ந்து வரும்‌ கருப்பை அம்மாவின்‌ இதயத்துக்கு ரத்தம்‌ எடுத்துச்செல்லும்‌ ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும்‌. இதனால்‌ அம்மாவின்‌ இதயத்துக்குத் தேவையான ரத்தம்‌ போகாமல்‌, ரத்த அழுத்தம்‌ இறங்கிவிடும்‌. தலை சுற்றி, மயக்கம்‌ வரும்‌.

இதனைத்‌ தவிர்க்க இடது பக்கம்‌ ஒருக்களித்துப்‌ படுப்பது நல்லது. அப்படிப்‌ படுக்கும்போது, குழந்தைக்குச்‌ சீரான ரத்தம்‌ போகும்‌. இடது பக்கம்‌ படுப்பது அம்மாவுக்கும்‌ கருவில்‌ வளரும் குழந்தைக்கும்‌ பிரச்னை இல்லாமல்‌ ஓய்வெடுக்க வசதியாக இருக்‌கும்‌. என்றாலும்‌, ஓரே பக்கமாகப்‌ படுத்துக்‌ களைப்பாக இருந்தால்‌, சிறிது நேரத்துக்கு வலதுபக்கம்‌ படுத்துக்கொள்ளலாம்‌. தவறில்லை.

கர்ப்பிணிக்கு வயிறு பெரிதாக இருந்தால்‌, பெண்‌ குழந்தை பிறக்கும்‌ என்று கூறுவது உண்மையா?

கர்ப்பிணியின்‌ வயிறு பெரிதாக காணப்பட்டால்‌, பெண்‌ குழந்தை என்றும்‌, சிறிதாக இருந்தால்‌, ஆண்‌ குழந்தை என்றும்‌ கூறுவது வழக்கம்‌. ஆனால்‌, அதில்‌ உண்மையில்லை. குழந்தையின்‌ பாலினத்துக்கும்‌ கர்ப்பிணியின்‌ வயிற்றின்‌ அளவுக்கும்‌ தொடர்‌பில்லை.

வயிறு பெரிதாக இருப்பதற்கு உடல்‌ பருமன்‌, குழந்தையின்‌ எடை, பனிக்குட நீரின்‌ அளவு, இரட்டைக்‌ குழந்தைகள்‌ போன்ற பல காரணங்கள்‌ இருக்கின்றன. தாய்க்கு நீரிழிவு இருக்குமானால்‌, குழந்தையின்‌ பனிக்குட நீர்‌ சற்று அதிகமாகவே இருக்கும்‌. அப்‌போது கர்ப்பிணியின்‌ வயிறு பெரிதாகவே இருக்கும்‌. குழந்தையின்‌ எடை அதிகமாக இருக்கும்போதும்‌ இரட்டைக்‌ குழந்தைகளின்‌ போதும்‌ பனிக்குட நீரில்‌ குழந்தையின்‌ சிறுநீரும்‌ அதிக அளவில்‌ கலப்பதால்‌, தாயின்‌ வயிறு பெரிதாகக்‌ காணப்படும்.