முடி வளர்வதற்கு புரதம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பயாட்டின், வைட்டமின் – சி சத்துகள் தேவை. இவற்றில் ஏதேனும் ஒரு சத்து குறைந்தாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு உதிரத் தொடங்கிவிடும். டைபாய்டு, மன அழுத்தம் போன்ற நோய்கள், சில மருந்துகள், ஹார்மோன் குறைபாடுகள் காரணமாகவும் தலைமுடி உதிர்கிறது.
 
குளித்த பின் ஈரம் காய்வதற்குள் தலை வாருதல், வீரியம் மிகுந்த அல்லது தரம் குறைந்த ஷாம்பூகளைப் பயன்படுத்துதல், அடிக்கடி முடியை பிளீச் செய்தல், தரமற்ற தலைச்சாயங்களைப் பூசுதல், கடினமான சீப்புகளைப் பயன்படுத்துதல், ஹேர் டிரையரை அதிகமாகப் பயன்படுத்துதல், தலைமுடியை இறுக்கமாகக் கட்டுதல் போன்றவை தலைமுடி உதிர்வதற்கு முக்கியக் காரணம்.
 
அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருள்கள், முழுத் தானியங்கள், சோயாபீன்ஸ், காளான், ஆரஞ்சு, முந்திரி, பாதாம், வாழைப்பழம், மீன், ஈரல் போன்ற உணவு வகைகளைச் சேர்த்துக்கொண்டால் தலைமுடி நன்கு வளரும்.