
டாக்டர் பா.பாசுமணி
குடல் மற்றும் இரைப்பை நிபுணர்
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று ஒரு மாபெரும் மருத்துவ உண்மையை போகிற போக்கில் கிராமங்களில் சொல்வார்கள்.நமது உடல் ஆரோக்கியம் நாம் சாப்பாட்டில் தான் இருக்கிறது.நல்ல சாப்பாடா இருந்தால் மட்டும் போதாது…நமது செரிமானமும் சரியாக இருக்க வேண்டும்.
செரிமானம் எட்டு கட்டங்களாக நடைபெறும். செரிமானத்தின் முதல் நிலை, உணவை நன்கு மெல்லுவதுதான். உணவு நம் வாயைத் தாண்டிவிட்டால், மற்ற உறுப்புகள் எல்லாம் அனிச்சையாகச் செயல்படும். நன்கு மென்று சாப்பிடுவது மட்டும்தான் நம் கடமை. ‘உணவை ஏன் மெல்லவேண்டும்…? செரிமான மண்டலம்தான் வலிமையானதாயிற்றே… எந்த ஓர் உணவையும் அரைத்துச் சக்கையை வெளியே தள்ளுமே?’ என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம்.
உணவு என்பது பல சங்கிலிகளால் ஆனது. ஒன்றுக்கொன்று வமிகவும் இறுக்கமான பிணைப்பில் இருக்கும்.

மாவுச்சத்து கொஞ்சம் சாதாரணப் பிணைப்பில் இருக்கும்; புரதச்சத்து மிகவும் நெருக்கமான பிணைப்பிலும், கொழுப்புச் சத்து மற்ற இரண்டைவிட மிக நெருக்கமான பிணைப்பிலும் இருக்கும். எனவேதான், மாவுச்சத்து எளிதில் செரிமானம் அடைகிறது.
நன்றாக மெல்லும்போதுதான் உணவின் முழுச்சுவை தெரியும்.உமிழ்நீர் நன்றாகச் சுரக்கும். நாம் பற்களால் கடித்து, அரைத்த உணவை உமிழ்நீர்தான் எளிதாக உணவுக்குழாய் வழியாகத் தள்ளுவதற்கு உறுதுணையாக இருக்கும். உமிழ்நீரோடு கலந்த உணவை இரைப்பை எளிதாக அமிலங்கள் துணையோடு பாகுபோல மாற்றிவிடும். மனிதனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1 – 1.5 லிட்டர் உமிழ் நீர் சுரக்கிறது. நன்றாக மெல்லாமல் விழுங்கும்போது உணவும் அரைபடாது, உமிழ்நீரும் கிடைக்காது என்பதால் உணவுக் குழாய் அடைத்துக்கொள்ளும். இரைப்பை கடினமாக வேலை செய்து, பெப்ஸின் மற்றும் சில அமிலங்களைப் பயன்படுத்தி உணவைச் சிதைத்துக் கூழாக்கும்.
ஏதோ ஓரிருநாள் என்றால் பிரச்னை இல்லை. ஆனால். ஒருவர் எப்போதுமே வேகமாக மெல்லாமல் உணவை விழுங்குகிறார் எனில், செரிமான மண்டலம் எப்போதுமே ஓவர்டைம் வேலை பார்க்கும் நிலை ஏற்படும். இதனால், செரிமான உறுப்புகள் விரைவில் பாதிப்படையும். செரிமான மண்டலத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாது. எனவே, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.அவசர அவசரமாக சாப்பிட்டு வயிற்றை கெடுக்க வேண்டாம்.
எத்தனை முறை மெல்லுவது?
உணவை இப்படித்தான் மெல்லவேண்டும், இத்தனை முறை மெல்ல வேண்டும் என எந்த விதிமுறையும் இல்லை. உணவு உட்கொள்வதை இயல்பாக, நிதானமாக, அமைதியாக அனுபவித்து, ரசித்துச் செய்தாலே போதும்.
‘நொறுக்குத் தீனிகள்’ ஏன் பிரபலம்?
ஆவலாகக் கடிப்பது அன்பின் வெளிப்பாடுகூட. மனிதனின் ஆசையும் ஆவேசமும் பல்லால் நொறுக்குதல், அரைத்தல் போன்றவற்றால் கட்டுப்படுகிறது. சிப்ஸ், முறுக்கை நொறுக்கும்போது அவை எழுப்பும் சில ஒலிகள் மூளைக்கு அமைதி தருகின்றன.
ஆழ்மனக் கோபத்தையும் ஆதங்கத்தையும் மாற்றிட, சிலர் அதீதமாக மெல்லுவார்கள். நொறுக்குத்தீனிகளை நாம் எப்போதும் முற்றாகப் புறக்கணித்துவிட முடியாது. நட்ஸ், சிறுதானிய ஸ்நாக்ஸ் என ஆரோக்கியம் தருவதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அவசரமாய் அள்ளி விழுங்கினால் என்ன ஆகும்?
பல் ஆறினால்தான் பசியாறும்’ என்பார்கள். மாலை வேளையில் பட்டாணி போன்றவற்றை மென்றுகொண்டே இருந்தால், எளிதில் பசி ஆறுவதை நாம் உணர முடியும். அவசரமாகச் சாப்பிட்டால், பசியாறுவதை மூளை உணராமல் இன்னும் சாப்பிடத் தூண்டும். இதனால், அதிகமாகச் சாப்பிடு வதால் செரிமானம் ஆக நேரம் ஆகும். அவசரமாகச் சாப்பிடுவது மூளையையும் பதற்றத்துக்கு தள்ளி, உடல் மற்றும் மனதளவில் உபாதைகளை ஏற்படுத்தும்.

