சத்துக்கள் வீணாகாமல் சமைக்க டிப்ஸ்!

-எம்.ஜெயா

1.காய்கறிகளை வாங்கிய உடன், வாடாமல் செழிப்பாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கலாம். காய்கறிகள் வாடும் போது, அவற்றில் உள்ள வைட்டமின் ‘சி’-யை இழந்துவிடுகின்றன.

2.வைட்டமின்களில் பெரும் பகுதி  காய்கறிகளின் தோலுக்கடியில் உள்ளதால் அவற்றைத் தோலுடன் சமைப்பதே நல்லது. தோலைச் சீவ வேண்டும் என்றால் சிறிதளவே மேலாகச் சீவுவது நல்லது. கிழங்கு வகைகளை முதலில் கழுவித் தோலுடனே வேக வைத்து வெந்தபிறகு அவசியமானால் பின் தோலை நீக்கலாம்.

3.காய்கறிகளை நறுக்குவதற்கு முன் சுத்தமான நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும். நறுக்கிய பின்பு கழுவுவது கூடாது. ஊற வைப்பதும் கூடாது.

4. காய்கறிகளைச் சமைப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்புதான் நறுக்க வேண்டும். வைட்டமின்கள் அழியாமல் இருக்க பெரிய பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.

5.கொதிக்கும் நீரில் காய்கறிகளைச் சேர்த்து வேக வைக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் காய்கறிகள் ருசியிலும் மணத்திலும் நிறத்திலும் நன்கு பக்குவமாக இருக்கும்.

6. சமைக்கும்போது சோடா உப்பைச் சேர்ப்பது தவறு. அது தயாமின் போன்ற உயிர்ச்சத்துகளை அழித்துவிடும். உணவின் நிறத்தையும் கெடுக்கும்.

7. சமைப்பதற்கு மிகக் குறைந்த அளவே தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.  அரிசி சாதத்தை அளவான நீரில் சமைக்க வேண்டும். கஞ்சியை வடிக்கக்கூடாது. அப்படி வடித்தாலும் சமைத்த நீரைக் கொட்டாமல் மற்ற உணவுத் தயாரிப்புகளுக்கு அதாவது, கூட்டு,குழம்பு, ரசம் முதலியவற்றிற்குப் பயன்படுத்த வேண்டும்.

8. இயன்றவரை வாய் அகன்ற பாத்திரத்தில் சமைக்காமல், குறுகிய வாயுள்ள பாத்திரத்தை மூடி வைத்துச் சமைப்பது நல்லது. 

9.சமைக்கும்போதுபாத்திரத்தை அடிக்கடி திறக்கவோ, உணவைக் கிளறுவதோ கூடாது. இதனால் காற்று பட்டு வைட்டமின்கள் அழிந்து விடுகின்றன.

10.சமைப்பதற்கு பித்தளை, அலுமினியம் போன்ற உலோகப் பாத்திரங்களுக்குப் பதில் மண்சட்டிகள், கற்சட்டிகள் போன்றவற்றைப் பயன் படுத்துவது நல்லது. உணவில் உள்ள உப்பு, அமிலங்கள் உலோகங்களுடன் சேர்ந்து உணவின் தன்மையைக் கெடுக்கும்.  ஈயம் பூசாத பித்தளை பாத்திரங்களில் சமைப்பது, பித்தளையுடன் உணவு கலக்கும்போது விஷமாகி ஆபத்தில் முடியும்.

11. உணவுப்பொருட்களை எண்ணெய், நெய் ஆகியவற்றில் மூழ்கிய வண்ணம் வெகுநேரம் வதக்குவதும், வேக வைப்பதும் கூடாது. 

12.உணவிலுள்ள சில வகைப் புரதச்சத்துகள் அதிக வெப்ப நிலையில் கெட்டியாகி இறுகித் தமது தன்மையை இழந்துவிடுகின்றன.எனவே புரோட்டின் சத்துகள் அதிகம் உள்ள இறைச்சி, முட்டை,மீன் போன்ற உணவுகளை இளம் தீயில் மிதமான வெப்பத்தில் தான் வேக வைக்க வேண்டும்.

13. மொச்சை போன்ற பயறு வகைகளை சமைப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்து,ஊற வைத்த நீரிலேயே சமைக்க வேண்டும்.ஊற வைப்பதால் அவை நன்றாக வேகமாக வெந்துவிடும்.

14. உணவை தயாரித்த உடனேயே மிதமான வெப்ப நிலையில் பரிமாற வேண்டும்.ஒரு தடவை சமைத்த உணவை சூடாக நீண்ட நேரம் வைக்கும் போதும் மீண்டும் மீண்டும் சூடாக்கும் போதும் அதில் உள்ள உயிர் சத்துக்களும் மனமும் அழிந்து விடலாம்.