
சீனாவின் போரியல் நிபுணர் சன் சூ எழுதிய போர்க் கலை என்ற நூல் காலத்தைக் கடந்த படைப்பாக இருக்கிறது. ராணுவ உத்திகளைக் கொண்ட இந்த ஆய்வறிக்கை தனி மனித வாழ்க்கைக்கும் பெருநிறுவனங்களுக்கும் பாடமாக இருந்துவருகிறது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல கோடி வாசகர்களால் வாசிக்கப்பட்ட நூல்.
நெப்போலியன், மாவோ, பிடல் காஸ்ட்ரோ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் சன் சூவின் போர்க்கலை உத்திகளைப் பயன்படுத்தி வெற்றிகண்டார்கள். எந்தவொரு நூலும் ராணுவ நிபுணத்துவத்தை இந்த அளவுக்கு மக்களிடம் பிரபலமாக்கியதில்லை. பதிமூன்று அத்தியாயங்களில் போர் நுணுக்கங்களை விரிவாக எழுதியிருக்கிறார்.
சன் சூவின் உத்திகள் தற்கால போட்டிகளுக்கும் பொருத்தமாக இருக்கின்றன. உலக நாடுகளைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்கள், தங்கள் போட்டியாளர்களை வெல்ல சன் சூவின் உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். போருக்கு மட்டுமல்ல, வாழ்வதற்கான வழிகாட்டு நெறியாகவும் சன் சூவின் போர்க்கலை நூல் பயன்படும்.
போர்க் கலை நூலிலிருந்து சில வழிகாட்டும் சூத்திரங்கள்..
கட்டுப்பாடு, ஒழுங்குமுறை என்பது சரியான பாதையில் படையை வழிநடத்துதல், பட்டத்தின் தகுதிக்கேற்ப பணியாளரைக் கையாளுதல், பொருட்கள் சரிவர வந்துசேர சாலைகளைப் பராமரித்தல், ராணுவத்தின் செலவைக் கட்டுப்படுத்துதல்.
சூழ்நிலைக்கேற்ப திட்டங்களை மாற்றி அமைக்கலாம். எல்லாப் போர்களும் தந்திரமானவை. எதிரியின் ஆவலைத் தூண்டவேண்டும். ஒழுங்கற்ற நிலைபோல் காண்பித்து நசுக்கவேண்டும்.
அவன் எல்லாவிதத்திலும் பாதுகாப்பாக இருந்தால், எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். அதிக பலசாலியாக இருந்தால் தவிர்க்கவேண்டும். அவன் அமைதியாக இருந்தால் ஓய்வு தராதே. அவன் அணி ஒன்றாக இருந்தால் பிரித்துவிடு.
எந்த நாடும் நீடிக்கும் போரால் ஆதாயம் பெற்றதாக வரலாற்றில் இல்லை. போரின் பாதிப்புகளை தெளிவாக அறிந்த ஒருவனே, அதை பயனுள்ளதாக கொண்டு செல்லக்கூடிய உத்தியைக் கண்டறியமுடியும்.
நாட்டின் கருவூலம் பற்றாக்குறையைச் சந்தித்தால், தொலைவில் இருந்து உதவி பெற வேண்டியிருக்கும். அந்த நிலை ஏற்பட்டால் படையும் ஏழ்மையாகும். வாழ்வாதாரம் குறைந்தால், மக்களின் வரிப்பணம் அதிகரிக்கும்.
போரிட்டு வெற்றிபெறுவது பெரிய மாண்பல்ல. போரிடாமலேயே எதிரியை பணியவைப்பதுதான் பெருஞ்செயல்.
ஒரு சிறிய படை பிடிவாதமாக சண்டையிட்டாலும்கூட, முடிவில் பெரிய படையிடம் தோற்கத்தான் வேண்டும்.
தேர்ச்சி பெற்ற தலைவன் எதிரியின் படையை சண்டையிடாமல் அடக்கி, யாரையும் முற்றுகையிடாமல் கைப்பற்றி, களத்தில் நீண்ட நேரம் போரிடாமலேயே நாட்டை கவிழ்த்துவிடுவான்.
எப்போது சண்டையிடவேண்டும். எப்போது சண்டையிடக்கூடாது என்று அறிபவன் வெற்றிகொள்வான். உயர்தரப் படையாக இருந்தாலும், தேர்ச்சியற்ற மட்டமான படையாக இருந்தாலும், அவர்களைச் சரிவரக் கையாளத் தெரிந்தவன் வெற்றிபெறுவான்.
தன்னை தயார் நிலையில் வைத்துக்கொண்டு, காத்திருந்து தயார் நிலையில் இல்லாத எதிரியை தாக்குபவன் வெற்றிபெறுவான்.
தன்னையும் எதிரியையும் அறிபவன், நூறு போர்களைக் கூட அஞ்சாமல் வெற்றிகொள்ளலாம். தன்னை அறிந்து எதிரியை அறியாதவன் ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு தோல்வியை சந்திப்பான்.
எல்லாவித சண்டையிலும் நேரடி அணுகுதல் இருக்கவேண்டும். ஆனால் வெற்றிபெற எதிர்மறையான உத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஸ்வரங்கள் ஐந்துதான். ஆனால் சேர்ந்து பயன்படுத்தினால் பல்வேறு இன்னிசை ஒலிக்கும்.
ஒரு படையின் தொடக்கம் பெரும் வேகமான நீரோடையைப் போல. அதன் வழியில் வரும் சிறு கற்களைக்கூட தகர்த்தெறியும் வலிமை உள்ளது.
வலிமை என்பது வில்லை வளைப்பது போலவும், தீர்மானம் என்பது அம்பை எறிவது போலவும் இருக்கவேண்டும்.
புத்திசாலியான வீரன் தன் கட்டுப்பாட்டை எதிரியின் மேல் திணிப்பான். எதிரியின் கட்டு்பபாட்டை தன்மேல் விழவிடமாட்டான். எதிரி எந்த இடத்தில் விரைவாக செல்ல முயற்சிப்பானோ, அந்த இடத்தில் முதலில் இருக்கவேண்டும். அவன் எதிர்பார்க்காத இடத்தில் அணிவகுக்கவேண்டும்.
வெற்றிகண்ட சூழ்ச்சிகளை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது. திட்டங்களை தகுத்த சூழ்நிலைக்கேற்ப அமைத்துக்கொள்ளவேண்டும்.
இடம் சார்ந்த வழிகாட்டி இல்லாவிட்டால், நமக்கு சாதகமாக இருக்காது. போரில் பாசாங்கை பயிற்சி செய்தால் வெற்றி அடையமுடியும். உன் வேகம் காற்றைப் போலவும், இறுக்கம் காட்டைப்போலவும் இருக்கவேண்டும்.
ஒவ்வொரு அசைவுக்கும் முன் நிதானமாக சிந்தித்து செயல்படவேண்டும். எவன் ஒருவன் விலகுதல் கலையை கற்கிறானோ, அவன் வெற்றிபெறுவான். இதுதான் படைத்துறை நடவடிக்கையின் கலையாகும்.
பாசாங்கு செய்து ஓடும் எதிரியை தொடராதே. கூரிய மனநிலை உள்ள வீரனை தாக்காதே. எதிரியின் தூண்டிலில் விழாதே. திரும்பிச் செல்லும் படையை குறுக்கிடாதே.

