
உடல் பருமனால் உருவாகும் அபாயங்களை சென்ற இதழில் (NOVEMBER 2022) பதிவு செய்திருந்தோம்.உடல் பருமன் நல்லதல்ல. பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆயுளை குறைக்கும் .வாழும் காலம் வரை சிரமப்பட வேண்டும்.எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ என்ன செய்ய வேண்டும்? விவாதிப்போம்.
‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் பார்த்த நகைச்சுவை நடிகர் வடிவேலுவையும், இப்போது திரையில் தோன்றும் வடிவேலுவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவரது தோற்றத்தில்தான் எவ்வளவு பெரிய வித்தியாசம். இந்த வித்தியாசத்துக்கு, அவரின் சந்தோஷமான மனநிலை மட்டும் காரணமல்ல; வசதி வந்ததன் காரணமாக, அவர் நினைத்ததை வாங்கி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட முடிகிறது. வேலைக்கு ஆள் இருப்பதால், உடல் உழைப்பும் குறைந்து விடுகிறது. இதனால், உடல் எடை ஏறிவிடுகிறது.
வடிவேலு என்றில்லை. கமலஹாசன், சூர்யா, அஜீத் ஆகிய முன்னணி நட்சத்திரங்களையும் பாருங்கள். கமல் நினைத்தால், ஆளவந்தானில் முறுக்கேறிய உடலோடு வந்து மிரட்டவும் முடிகிறது. சாதாரண தோற்றத்தில், தெனாலியாக வந்து சிரிக்க வைக்கவும் முடிகிறது. காக்க காக்க படத்தில் டிப்டாப் போலீஸ் அதிகாரியாக வரும் சூர்யா, ஆதவனில் சட்டென சிக்ஸ் பேக்குக்கு மாறிவிடுகிறார். பரமசிவனில் பார்த்த அஜீத்தா இது என பில்லா அஜீத் திகைக்கவைக்கிறார்.
இவர்களால் மட்டும் எப்படி நினைத்தபடி உடல் எடையைக் கூட்டிக் குறைத்துக்கொள்ள முடிகிறது…உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நல்ல மகிழ்ச்சி நிறைந்த மனநிலை, இவைதான் தேவை.
உடல் பருமனுக்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில், அந்தப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும், உடல் பருமன் ஏற்பட்டிருந்தால், அதைக் குறைத்து சீரான எடையைப் பராமரிக்கவும், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டு அஸ்திரங்கள்தான் உங்களுக்குப்
பயன்படும்.
மருத்துவரிடம் சென்று உங்களது பிஎம்ஐ அளவீடு என்ன என்பதை முதலில் சோதனை செய்து கொள்ள வேண்டும். உயரத்திற்கும் வயதுக்கும் ஏற்ற எடையுடன் இருக்க வேண்டும். எவ்வளவு எடை அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு,அதிகப்படியான எடை இருந்தால் குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பட்டியல் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.
உணவின் அளவைக் குறைப்பதன் மூலமும், உடல் உழைப்பையும் உடற்பயிற்சியையும் அதிகப்படுத்துவதன் மூலமும் மட்டுமே, அதிகப்படியான எடையைக் குறைக்க முடியும் என்பதைத் தீர்மானமாக மனத்துக்குள் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.
அதிகப்படியான எடையில் இருந்து 70 சதவீதத்தை உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாகத்தான் குறைக்க முடியும். மீதமுள்ள 30 சதவீதம்தான் உடற்பயிற்சியின் மூலமாகக் குறையும். ஆரம்பக் கட்டத்தில், டயட்டின் (உணவு முறை) மூலமாக மட்டுமே அதிகப் படியான உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ஒரு குறிப்பிட்ட நிலையில், உடல் எடையைக் குறைப்பதில் டயட், உடற்பயிற்சி இரண்டுக்குமே சமமான பங்களிப்பு இருக்கும்.
இதற்கு ஆதாரமாகவும் நடிகர் நடிகைகளைத்தான் நான் உதாரணம் காட்ட முடியும். திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தாயான பிறகும் பல நடிகர், நடிகைகள், உடல் சதை போட்டுவிடாமல் கச்சிதமாகவும் கட்டுக்கோப்பாகவும் தங்களது உடலைப் பராமரிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
குறைக்க வேண்டிய எடை எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியும். அதிகப்படியான எடையை படிப்படியாக எப்படி குறைப்பது என்பதைத் தெளிவாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். நீங்களே உங்களுக்கு ஒரு இலக்கையும் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும், எத்தனை கிலோ எடை குறைக்கப்போகிறீர்கள் என்பதை அட்டவணையாகப் போட்டுக் கொள்ளுங்கள்.
‘ஒரே மாதத்தில் என் உடலின் அதிகப்படியான எடையைக் குறைத்துக்காட்டுகிறேன் பாருங்கள்’ என சவால்விடுகிற வேலையெல்லாம் வேண்டாம். அது நடைமுறையில் சாத்திய மில்லாதது என்பதோடு, அதற்காக நீங்கள் பின்பற்றும் அதிரடியான
முயற்சிகள், எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தி விடலாம்.
முதல் இரண்டு மாதங்களுக்கு இரண்டிரண்டு கிலோவாக எடையைக் குறைப்பது,மெல்ல மெல்ல குறைக்க வேண்டிய எடையை அதிகப்படுத்துவது என்று திட்டமிடுங்கள். உயரத்துக்கு ஏற்ற எடையை அடைவதற்குச் சிலருக்கு மூன்று மாதங்கள் ஆகலாம்; சிலருக்கு ஆறு மாதங்கள் ஆகலாம். சிலருக்கு ஒரு வருடம்கூட ஆகலாம். அதனால், மற்றவர்களோடு எதையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
உங்களுக்கு நீங்களே நிர்ணயித்துக்கொள்ளும் இலக்கு எதுவாக இருந்தாலும், அது நடைமுறைச் சாத்தியம் கொண்டதாக இருக்கு மாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில், மருத்துவரின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் உங்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும்.
உணவின் அளவைக் குறைத்தாலே போதும்; உடலின் எடை குறைந்துவிடும் என்று பொத்தாம் பொதுவான முடிவுக்கு வந்துவிடாதீர்கள். உணவுக் கட்டுப்பாடு என்கிற விஷயத்தில்தான் மிக நுணுக்கமான சங்கதிகள் இருக்கின்றன. எந்த உணவைக் குறைக்க வேண்டும், எப்படிக் குறைக்க வேண்டும், எந்த உணவை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
உணவில் உள்ள பல்வேறு சத்துப்பொருள்கள் என்னென்ன, அவற்றின் மூலமாக நமக்கு எந்த அளவுக்கு சக்தி தேவை, சமச்சீர் உணவு என்றால் என்ன, எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
எந்தெந்த பயிற்சிகள் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல், ஜாகிங், ஷட்டில் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவை உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக, நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்க மிகவும் நல்லது.
முதல் நாளன்றே அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்து பார்க்கக் கூடாது. முதலில் ஏதாவது ஒரு பயிற்சியில், குறைந்த நேரத்துக்கு ஆரம்பிக்கலாம். பிறகு, படிப்படியாக பயிற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
இதுவரை இல்லாமல் திடீர் என்று உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, உடனடியாக மூட்டு வலி, கணுக்கால் வலி போன்றவை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து பயிற்சிகளைச் செய்யச் செய்ய வலி மறைந்துவிடும். நேரடியாக நீச்சல், ஷட்டில் என இறங்காமல், வார்ம் அப், ஃபிட்னஸ் பயிற்சிகளைச் செய்த பிறகு அவற்றில் ஈடுபடுங்கள்.
இறுதியாக, டயட்டின் மூலமும் உடற்பயிற்சிகளின் மூலமும் நீங்கள் எடையைக் குறைக்கப்போகிறீர்கள் என்பதை உங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தெரிவியுங்கள். சாக்லெட், ஸ்வீட், அசைவ உணவுகள் போன்றவற்றை இனி சாப்பிடமாட்டேன் என்பதையும் தெரிவித்துவிடுங்கள்.
இதன் மூலம், அதைச் சாப்பிடு, இதைச் சாப்பிடு என்று உங்களது தீர்மானத்துக்கு எதிராக யாரும் வற்புறுத்தமாட்டார்கள். மேலும், உங்களுக்காக இல்லையென்றாலும், அனைவரிடமும் அறிவித்து விட்ட உத்திரவாதத்துக்காகவாவது, உங்களது முயற்சியில் இருந்து பின்வாங்காமல் இருப்பீர்கள்.
தினமும் உங்களது உருவத்தைக் கண்ணாடியில் பாருங்கள். நீங்களாகவே ஒரு கால இடைவெளியை நிர்ணயித்துக்கொண்டு, உங்களது உடல் எடையை சோதனை செய்யுங்கள். உங்களது இலக்கை நோக்கி சரியான பாதையில்தான் பயணப்படுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இது உதவும்.
நான் நினைத்தபடி என்னால் எடையைக் குறைக்கமுடியும் என்று மனதார நம்புங்கள். அந்த நம்பிக்கை இருந்தால், எதையும் சாதிக்க முடியும். நடிகர்களும் மனிதர்கள்தானே. அவர்களால் நினைத்த நேரத்தில் உடல் எடையைக் குறைக்கமுடிகிறது என்றால், உங்களால் முடியாதா என்ன?
நடிகர்கள், தங்களுக்குக் கிடைக்கப்போகிற அல்லது கிடைத்த வாய்ப்புக்காக உடலைக் குறைக்கிறார்கள். அவர்களால், வாய்ப்புக் காக உடல் எடையைக் குறைக்கமுடிகிறது என்றால், வாழ்க்கைக் காக உங்களால் கண்டிப்பாகக் குறைக்க முடியும். இத்த நம்பிக்கையை மனத்தில் விதைத்துக்கொள்ளுங்கள்.
வயதுக்கும் உயரத்திற்கும் ஏற்ற சரியான எடையோடு இருந்தால், உடல் எடையால் வரக்கூடிய பல பாதிப்புகளை தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.வீணான மருத்துவ செலவுகளுக்கு வாய்ப்பு இருக்காது.

