
‘குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, ‘சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே… அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பை மேனி.வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களில் எல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி.
விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யும். தொட்டிகளில் இதன் விதைகளைத் தூவி விட்டால் போதும், வளர்ந்துவிடும். நோயால் குப்பைபோல் ஆகிவிட்ட மேனியைக் குணப் படுத்துவதால்தான் இதற்குக் குப்பைமேனி என்ற பெயர்.
சொறி, சிரங்கு போன்ற பல்வேறு தோல் நோய்களுக்கு நல்ல மருந்து. குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி, அப்படியே நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்… வயிற்றுப் பூச்சிகள், கிருமிகள் வெளியேறிவிடும். இலையைப் பொடி செய்து சாப்பிட்டும் பூச்சிகளை வெளியேற்றலாம்.
குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்யச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கு, குப்பைமேனி இலையை அரைத்துச் சாறெடுத்து, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம்.
இது போன்ற மூலிகைகள் நமக்கு அருகில் கிடைக்கும்.தொடர்ந்து பயன்படுத்தி நலம் பெறலாம்.தேவையில்லாத நோய் பாதிப்புகளை தவிர்க்க உதவும்.

