
நமது மருத்துவ வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது, இயற்கையாக விளைந்த வேர்கள், கிழங்குகள், இலைகள், மரப்பட்டைகள், பழங்கள், காய்கள், விதைகள், வேர்ப்பட்டைகள் போன்றவற்றை தங்களுக்கு ஏற்பட்ட நோய்களுக்கு நிவாரணமாக பயன்படுத்தி வந்தனர் மக்கள். அது சார்ந்து நிறைய அனுபவக் குறிப்புகள், மூலிகை ஆய்வுக் குறிப்புகள் பழங்கால மக்களிடம் இருந்தன. இந்த பாரம்பரிய மருத்துவ அறிவு, நமது தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு மட்டுமன்றி, பல்வேறு பகுதிகள் மற்றும் வெவ்வேறு நாட்டு பாரம்பரியத்திற்கும் உண்டு.
மக்களுக்கு ஏற்படும் அனைத்து உபாதைகளுக்கும் தீர்வாக இருந்தவை இயற்கை சார்ந்த பொருட்களே! இதுவே ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பரிய மருத்துவம் உருப்பெருவதற்கான அடிப்படையாக இருந்திருக்கும். இயற்கையுடன் இணைந்து வாழும் வாய்ப்பு அக்கால மக்களுக்கு இருந்ததால், இயல்பாகவே மூலிகைகள் பற்றிய பட்டறிவு அவர்களுக்கு இருந்தது. மேலும் மூலிகைகள் சார்ந்து அனுபவப் பூர்வமாக நிபுணத்துவம் பெற்ற பல மனிதர்களின் மூலம் அடுத்த தலைமுறைக்கு மூலிகைகள் குறித்த மருத்துவம் கடத்தப்பட்டது. இப்படியே படிப்படியாக வளர்ந்தன இயற்கை மருத்துவ முறைகள்!
மூலிகை உபப் பொருட்களை அப்போதைக்கு எடுத்து பயன்படுத்துவதைப் போலவே, உலர்ந்த மூலிகை பொருட்களும் நோய் தீர்க்க பெருமளவில் பயன்பட்டன. முற்காலத்தில் ஒவ்வொரு வீடு தோறும் மூலிகைகள் சார்ந்த மருத்துவ பொருட்கள் இருந்தன! அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மிளகு.. சீரகம், ஓமம், பெருங்காயம் போன்ற மருந்து பொருட்களைத் தாங்கிய அஞ்சறைப் பெட்டி! அஞ்சறைப் பெட்டிப் பொருட்களை வைத்தே பல்வேறு நோய்களைத் தடுக்க முடியும் மற்றும் போக்க முடியும். அஞ்சறைப் பெட்டி பொருட்களைத் தாண்டி, உடல் உபாதைகளை குணமாக்க வீட்டிலேயே பல்வேறு மூலிகைப் பொருட்கள் இருந்தன.
அது மட்டுமல்லாமல் இன்றைய பார்மசி போல, அன்று நம்மிடையே இருந்தவை தான் நாட்டு மருந்து கடைகள். மருத்துவத்திற்குத் தேவைப்படும் அனைத்து மூலப் பொருட்களும் அக்கடையில் கிடைக்கும். அக்கடையில் கிடைக்கும் பொருட்களை வைத்து மருந்து தயாரிக்கும் வழக்கத்தை பெரும்பாலானோர் கையாண்டனர்.
குறிப்பாக பாரம்பரிய சித்த மருத்துவர்கள், மருந்து செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆதாரமாக இருந்தன நாட்டு மருந்து கடைகள்.அன்றைய நாட்டு மருந்து கடையில் இருந்தவர்கள், மருத்துவ அறிவு நிறைந்த பாரம்பரிய மருத்துவர்கள், மக்களுக்கு ஏற்படும் நோய்களை முறையாக கணித்து, நாடிப் பிடித்து அனுமானித்து மருந்துகளைத் தேர்வு செய்யும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது.
அக்காலத்தில் அதிகளவில் இருந்த நாட்டு மருந்து கடைகள் இன்று வெகுவாக அருகிவிட்டன. கூடவே நாம் யோசிக்க வேண்டியது இப்போதிருக்கும் நாட்டு மருந்து கடைகளின் தரம் பற்றி! இன்றைய காலக்கட்டத்திலும் தரமான மூலப்பொருட்களை விற்பனை செய்யும் நாட்டு மருந்து கடைகள் இருக்கின்றன. குறிப்பாக தென் தமிழகத்தில் இது போன்ற நாட்டு மருந்தகங்கள் மிகவும் அதிகம். சித்த மருத்துவப் பாரம்பரியம் உடைய மருந்து கடைகள் அனைத்து பகுதிகளிலும் இருக்கின்றன. அவற்றை சரியாக கண்டுபிடிப்பது முக்கியம்.
இன்றைய சூழலில் நம்மிடையே இருக்கும் மிகப்பெரிய சவால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொருட்கள் தரமானதா? மருத்துவர் அறிவுரையின்றி நாட்டு மருந்து கடைகளில் மூலப் பொருட்கள் வாங்கலாமா? எப்படி மூலிகை மூலப் பொருட்களை இனம் கண்டறிவது?..
நீண்ட காலமாக உங்கள் பகுதியில் இருக்கும் நாட்டு மருந்து கடைகளை தாராளமாக நாடலாம். மூலப் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்ள நம்பிக்கை மிக்க பாரம்பரிய சித்த மருத்துவர்கள், பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களிடம் தெரித்து கொள்ளலாம்.
உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பதைப் போல மூலிகை பொருட்களிலும் கலப்படம் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன.நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
-டாக்டர்.வி.விக்ரம்குமார்.சித்த மருத்துவர்.

