
டாக்டர்.சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர்.
ஜூன் மாதம் வந்து விட்டால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப படாத பாடு படுவார்கள்.குழந்தைக்கு எந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது?எது சிறந்தது…எப்படி கண்டுபிடிப்பது?இது சாதாரண பணியா?
கல்வி தொடர்பாக குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஏராளமான உளவியல் ஆராய்ச்சிகள் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. குழந்தைகளின் கல்வித்திறன் என்பது கற்கும் சூழலோடு நேரடித் தொடர்புடையது. கற்கும் சூழலை குழந்தைகளுக்கு இலகுவானதாகவும், சாதகமானதாகவும் அவர்களின் வளர்ச்சியை அரவணைப்பதாகவும் இருக்க வேண்டும்.
அதே போல கல்வி என்பது மாணவரின் திறனைப் பரிசோதனை செய்வது என்ற அளவில் மட்டுமில்லாமல் அது மாணவர்களுடன் ஒரு தொடர் உரையாடலை நிகழ்த்த வேண்டும்.ஒரு மாணவனுக்கு மொழியியல், மானுடத் திறன்களை வளர்ப்பது, உயர்ந்த பண்புகள், ஒழுங்கு, கலாச்சார, பண்பாட்டு விழுமியப் பார்வைகளை ஏற்படுத்துவது என்பதெல்லாம் கல்வியின் முதன்மை இலக்குகளாக இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட கல்வி சூழலை கொண்டே ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்க முடியும். இப்படிக் சூழலை உருவாக்காதவரை கல்வி என்பது அவர்களுக்கு சுமையானதாகத்தான் இருக்கும் என்கின்றன ஆய்வுகள்.
இத்தகைய ஆரோக்கியமான கற்கும் சூழலை அருகாமை பள்ளிகள் (Neighbourhood schools) வழியே ஓரளவு சாத்தியமாக்கலாம்.
மாபெரும் கல்வியாளர் கோத்தாரியின் பரிந்துரை இது.அருகாமை பள்ளிகளுக்கான வரையறையாக ஆரம்ப பள்ளிகள் ஒரு கிலோமீட்டருக்குள்ளும், நடுநிலைப் பள்ளிகள் மூன்று கிலோமீட்டருக்குள்ளும், மேல்நிலைப்பள்ளிகள் ஐந்து கிலோமீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஏராளமான அலைச்சல், அது தரும் மனவுளைச்சல், காத்திருப்பு, கும்பலான பேருந்து பயணம், தினமும் காலையில் எழுந்தவுடன் நேரத்திற்குப் பேருந்தைப் பிடிக்க வேண்டுமென என்ற நிர்ப்பந்தம், நேரமின்மை போன்ற எந்த நெருக்கடிகளும் இல்லாமல், காலையில் எந்தப் பரபரப்புமின்றி, மிக சாவகாசமாக எழுந்து வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பள்ளிக்கு எந்தவிதப் போக்குவரத்தையும் பயன்படுத்தாமல் நடந்தே செல்லும் ஒரு மாணவனுக்கு நிச்சயம் அந்தப் பள்ளி எந்தவித நெருக்கடியையும் கொடுக்காது. இலகுவான கல்விச் சூழலை இந்த அருகாமை பள்ளிகளின் வழியாக நமது குழந்தைகளுக்கு நம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அப்படி ஒரு கல்விச் சூழல்தான் ஒரு ஆரோக்கியமான கல்வியை நமது குழந்தைகளுக்குக் கொடுக்கும்.
நமது குழந்தைகளுக்காகத்தான் கல்வியேதவிர; கல்விக்காகத்தான் குழந்தை என்று சூழ்நிலையை உருவாக்கி விடாதீர்கள். நமது குழந்தைகளுக்கு அன்பையும் ஆதரவையும் அரவணைப்பையும் ஆறுதலையும் அளவில்லாமல் கொடுங்கள்.

