கூந்தல் அலை அலையாய் பார்க்கப் பார்க்க ரசிக்கிற மாதிரி பிரமிப்பாக இருக்க வேண்டுமா?ஆலிவ் ஆயில் கண்டிப்பாக உதவும்.சில்கி, நீளம், சுருள், அதீத சுருள்.. இப்படிப்பட்ட நான்கு வகையான கூந்தலுக்கும், பிரத்தியேக பராமரிப்பை கொடுப்பதன் மூலம்…முடி உதிர்வது, வறட்சி, வேர் பாதிப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து கேசத்தை பாதுகாத்து, எழிலாக்கும். அதற்கான எளிய முறைகள் இங்கே…

* பஞ்சு போன்று மென்மையான சில்கி முடி இருப்பவர்கள், எண்ணெய் தடவினால் அவர்களின் கூத்தல் மேலும் மெலிந்து ஒல்லியாக காட்டும். முடி அடர்த்தியாக தெரிய, இவர்கள் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது பெஸ்ட். வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயால் தலையை நன்றாக மசாஜ் செய்து, சிறிது கடலை மாவுடன் எலுமிச்சைச் சாறு, வெட்டிவேர் தண்ணீரைக் கலந்து தலையை அலசினால்,முடி புஷ்டியாக தெரிவதுடன் பளபளவென மின்னும்.

*நீண்ட முடி இருப்பவர்களுக்கு அடிக்கடி சிக்கு ஏற்படும். எனவே, இவர்கள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் கூந்தலை சீராகச் சீவி, பின்னல் போட்டுக்கொள்வது சிறந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவலாம். வாரத்தில் ஒரு நாள் நல்லெண்ணெயை தடவி வாரி, கற்றாழை ஜெல், வெந்தயக்கீரை சாறு இவற்றுடன் சீயக்காயை கலந்து தலைக்கு குளித்துவந்தால் கேசத்தின் இயற்கைத் தன்மை மாறாமல், பளபளப்புடன் கருக்ரு வென்று வளரும்.

*அடர்த்தியுடன், சுருள் முடி இருப்பவர்கள்… முடியை இரண்டாகப் பிரித்து, பத்து நிமிடமாவது படிய வார வேண்டும். இவர்கள் தலைக்கு எவ்வளவுதாள் எண்ணெய் வைத்தாலும்,

எண்ணெய் இல்லாததுபோல் வறட்சியாகத் தெரியும். எனவே, தினமும் கேசத்துக்கு எண்ணெய் வைக்க வேண்டும். வாரம் இரு முறை வெந்தயத்தூள், புங்கங்காய்த்தூள், பயத்தம் பருப்பு மாவு தலா இரண்டு டீஸ்பூன் சேர்த்து கலந்து தலைக்கு குளித்து வந்தால்.. முடி மிருதுவாவதுடன், நுனி வெடிப்பும் இருக்காது.

* அதீத சுருள் முடி இருப்பவர்கள், ‘முடி ஸ்ட்ரெய்ட்டா இல்லையே’ என்று ஃபீல் பண்ணுவது இயல்பு. அதற்காக பார்லரில் ‘ஸ்ட்ரெயிட்டனிங்’ செய்துகொள்வதைவிட, இரவு தோறும் தலையில் தேங்காய் எண்ணெயை தேய்த்து, பதினைந்து நிமிடம் படிய வாரலாம். காதோரப் பகுதியில் ஹேர்பின்களை குத்தி, இறுதியில் கிளிப் போட்டுக்கொள்ளலாம். மறுநாள், முடி நீளமாகத் தெரியும், இதைத் தொடர்ந்து செய்வதால், சுருட்டிக்கொண்ட முடியும் சோம்பல் முறிக்கும்!

-கு.ஷைலஜா.