டாக்டர்.ரமேஷ் சதாசிவம்,எம்.டி.

த்து மாத்திரைகள் சாப்பிட்டால் நல்லது என்பார்கள் மருத்துவர்கள். நல்லா திருப்தியா சாப்பாடு சாப்பிட்டால் போதாதா?

சத்து மாத்திரைகள் தேவையா என்பது பலருக்கும் உள்ள சந்தேகம்.

எல்லோருக்கும் தேவைப்படாது…சிலருக்கு மட்டும் அவசியம் தேவை.யார் யாருக்கு சத்து மாத்திரை தேவை என்பதை விளக்குவது இந்த கட்டுரையின் நோக்கம்.

அமெரிக்க உணவுக் கழகமும், மற்ற மருத்துவ ஆய்வு நிறுவனங்களும் உயிர்ச்சத்து மற்றும் மினரல்கள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து பெறச் சிறந்த வழி சரிவிகித உணவே எனப் பரிந்துரைக்கின்றன. ஆனால் சில வேளைகளில் மருந்து மாத்திரைகள் மூலம் ஊட்டச்சத்து தேவைப்படலாம்.

1.மாதவிலக்குச் சுழற்சி நின்றுபோன பெண்களாய் இருந்தால்…உங்களுக்கு உயிர்ச்சத்து ‘டி’ மற்றும் கால்சியம் போன்றவை உணவினால் மட்டும் போதாது என்பதால் மருந்துகளாக எடுத்துக் கொள்வது அவசியம்.இவை உங்கள் எலும்புகள் தேயாமல் தடுக்க உதவுகின்றன.

2.நீங்கள் சரிவிகித உணவு உண்ண இயலாதவராய் இருந்தால்…தினமும் உணவில் 5 தடவை பழங்கள், காய்கறிகள் சாப்பிட இயலாதவராக இருந்தால் நீங்கள் தினமும் உயிர்ச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் விரைவில் உங்கள் உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்வது அவசியமாகும்.

3.நீங்கள் கலோரி குறைந்த உணவை எடுத்துக்கொள்ள நேர்ந்தால்… நாளொன்றிற்கு 1,200 கலோரிகளுக்கும் குறைவான உணவை உட்கொள்பவராக இருந்தால் உயிர்ச்சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.

4.நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால்…புகை பிடிப்பது உயிர்ச்சத்து மற்றும் மினரல்கள் உட்கிரகிப்பைக் குறைப்பதால் உயிர்ச்சத்து பி-6, உயிர்ச்சத்து சி மற்றும் ஃபோலிக் அமிலம், நியாசின் தேவை ஏற்படும்.

5.மதுவை மிதமிஞ்சிக் குடித்தால்…மதுவை மிதமிஞ்சிக் குடிக்கும்போது அது தயமின், ஃபோலிக் அமிலம், உயிர்ச்சத்து ஏ, டி மற்றும் பி-12 ஆகியவற்றில் உட்கிரகிப்பைக் குறைக்கும். மேலும் செலினியம். மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மினரல்கள் உட்கிரகிப்பையும் பாதிக்கும். மேலும் நீங்கள் மிதமிஞ்சிக் குடிக்கும் போது உணவிற்குப் பதிலாக மதுவையே குடிப்பதால் உணவும் ஊட்டச் சத்துகளும் குறையும் வாய்ப்புள்ளது. 

6.நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலும், பாலூட்டும் தாய்மார்களாக இருந்தாலும், இதுபோன்ற காலங்களில் உங்களுக்குச் சில ஊட்டச் சத்துகள் அதிகம் தேவைப்படுகின்றன. குறிப்பாக இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலம். ஃபோலிக் அமிலம் கருவில் வளரும் குழந்தையின் நரம்புக்குழாய் வளர்ச்சிக்கும், முதுகெலும்பு பிளவுபடாதிருக்கவும் உதவுகிறது. இரும்புச்சத்து வளரும் உங்கள் குழந்தைகளுக்கு அதிகப் பிராண வாயு கொடுக்கவும், நீங்கள் களைப்படையாமல் இருக்கவும் உதவுகிறது. எனவே இந்நிலையில் உங்கள் மருத்துவர் உங்களுக்குச் சில மருந்துகள் பரிந்துரைப்பார்.

7.நீங்கள் 65 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவராக இருந்தால்…உங்களுக்கு வயது ஏற ஏற சரியான உணவு இல்லாததால் உடலின் உயிர்ச்சத்து, மினரல் தேவைகள் அதிகரிக்கக்கூடும். உங்களுக்குச் சுவையுணரும் சக்தியும், வாசனை நுகரும் சக்தியும் குறைவதால் பசியின்மை ஏற்பட்டு உணவு குறையும் வாய்ப்புள்ளது. மனச்சோர்வு மற்றும் பல்வகைக் காரணங்களாலும் உணவு குறையலாம்.

தனியாக அமர்ந்து உணவு உண்ண நேரும்போது போதிய அளவு சாப்பிட முடியாது.வயதாவதால் உங்கள் உடல் உயிர்ச்சத்து பி-6, பி-12 மற்றும் டி போன்றவற்றை உட்கிரகிக்க இயலாது. எனவே மருந்துகள் மூலம் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. மேலும் இவ்வாறு கொடுக்கப்படும் பல உயிர்ச்சத்து மருந்துகளால் உங்கள் நோய்எதிர்ப்புத்திறன் மேம்பட்டு நோய்களிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது.

சமச்சீரான உணவு முக்கியம்.தவிர்க்க முடியாத சூழலில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது தவறில்லை.