-டாக்டர்.எஸ்.வெங்கடாசலம்.
ஹோமியோபதி நிபுணர்.
சாத்தூர் .

த்தாம் வகுப்பு வரை தமிழ்வழி பள்ளியில் படித்து உயர்ந்த மதிப்பெண்களோடும், உற்சாகத்தோடும் பாலிடெக்னிக் கல்லூரியில் நுழைந்த ஒரு மாணவன் அனைத்தையும் இழந்த சோகத்துடன் எங்களிடம் அழைத்து வரப்பட்டான். பள்ளியில், பேச்சுப் போட்டிகளில் முழங்கி முதல் பரிசுகளை வென்றவன் இப்போது திக்கித் திக்கிப் பேசும் நிலை.

பெற்றோரிடம் சில விவரங்கள் கேட்டறிந்த பின் சற்றுநேரம் வரவேற்பறையில் அமர்ந்திருக்கச் சொல்லி அனுப்பி வைத்தோம். மாணவனின் விழிகளின் பின்னே ஏதேதோ குழப்பங்களும் விசித்திரங்களும் ஓடிக் கொண்டிருப்பதைக் காணமுடிந்தது.

“இந்த ஆண்டு தான் திக்கிப் பேசுவதாக அப்பா அம்மா கூறுகிறார்கள்.
என்ன காரணம் தம்பி!” என்று மென்மையாக விசாரித்தோம்.

‘சரியாகத் தெரியவில்லை’ என்று ‘ச’ வையும், ‘தெ’வையும் மீண்டும் மீண்டும் திக்கிப் பதிலளிக்க சில நிமிடம் கடந்தது. ‘முதல்முறையாக எப்போது திக்கினாய்…?ஞாபகப்படுத்திச் சொல்!” என்றோம்.

வகுப்பில் சேர்ந்த இரண்டாம் நாளே என்னை எழுப்பி ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்டு ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார் ஆசிரியர்.நான் பயந்து போனேன். உதடுகள் நடுங்கின. உளறினேன்.திணறித் திணறிப் பேச முடியாமல் திக்கினேன்.

‘திக்கிப் பேசுறவனா நீ?’ உட்கார் என்றார் ஆசிரியர்.

அதற்குப் பிறகு பாலி டெக்னிக் கட்டிடத்திற்குள் நுழைந்தவுடனேயே அதிகமாகத் திக்கிப் பேசும்படி ஆகிவிட்டது, என்று நீண்ட நேரம் எடுத்து விளக்கிக் கூறினான்.

அந்த மாணவனுக்கு ஆங்கில மொழி மற்றும் வகுப்பறை மீதான அதீத பயம் நீங்குவதற்கு ‘ராக்ரோஸ் ’(ROCKROSE) என்ற பாச் மலர் மருந்தும், மீண்டும் மீண்டும் திக்கித் திக்கிப் பேசும் நிலையை மாற்ற ‘வொயிட் செஸ்ட் நட்’ (WHITE CHESTNUT) என்ற மலர்மருந்தும் அளித்தோம்.ஆங்கில மொழியை ஒரு சில மாதங்களில் கற்றுக் கொள்ளலாம் என்பது உட்பட சில ஆலோசனைகளும் வழங்கினோம்.பெற்றோரின் அணுகுமுறையில் என்ன மாற்றம் தேவை என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறினோம்.முதல் மாதச் சிகிச்சையிலேயே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.இரண்டாவது மாதச் சிகிச்சையில் திக்கிப் பேசும் நிலை முற்றிலும் மாறி இயல்பாகப் பேசத் துவங்கினான்.