டாக்டர் கு.கணேசன், பொது நல மருத்துவர்.

லைமுடியைப் பராமரிப்பது என்பது ஒரு தனிக் கலை. ஒருவருடைய அழகு, தோற்றம் ஆகியவற்றை நிர்ணயிப்பதில் தலைமுடிக்கு அதிக பங்கு உண்டு.எனவே, தலைமுடியை எப்படி அழகு படுத்தலாம் என்று சிந்திக்காத பெண்களே இல்லை.இந்த விஷயத்தில் இப்போதுள்ள வாலிபர்களும் சளைத்தவர்கள் இல்லை. ஊடகங்களில் சொல்லப்படும் எல்லா க்ரீம்களையும், திரவியங்களையும் தலைமுடியில் தடவிக்கொள்கிறார்கள். இவர்கள் முடியைப் பராமரிக்க பாரம்பரிய இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதால், தற்காலிகமாக முடியின் அழகு அதிகரித்தாலும், சீக்கிரத்திலேயே தலையில் முடி கொட்டி விடுகிறது என்பதுதான் நடைமுறை நிஜம்.

தலைமுடி உதிர்வது ஏன்?

ஊட்டச்சத்துக் குறைபாடு தலைமுடி உதிர்வதற்கு மிக முக்கியக் காரணம். முடி வளர்வதற்கு புரதச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து, துத்தநாகச்சத்து, அயோடின்,வைட்டமின் – பி காம்ப்ளெக்ஸ், பயாட்டின் மற்றும் வைட்டமின் – சி சத்துகள் தேவை.இவற்றில் ஏதேனும் ஒரு சத்து குறைந்தாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு உதிரத் தொடங்கிவிடும். அதிலும் இரும்பும் புரதமும் உடலின் தேவைக்கு இல்லையென்றால்,
முடி உதிர்வது உறுதி.

ரத்தசோகை, புரதச்சத்துக் குறைவு, டைபாய்டு, மஞ்சள்காமாலை, புற்றுநோய், அம்மை நோய்கள், காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களாலும் தலைமுடி உதிரலாம்.புகையிலை, பான்மசாலா போன்ற போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதும் தலைமுடி உதிர்வதற்குக் காரணமாகலாம்.மது அருந்துவது பல வைட்டமின் சத்துக் குறைபாடுகளுக்கு வழிவிடுவதால் இப்பழக்கம் உள்ளவர்களுக்கு முதுமைக்கு முன்னரே தலைமுடி உதிர்ந்துவிடும்.

சில நோய்களுக்குத் தரப்படும் மருந்துகளாலும் தலைமுடி உதிரும். குறிப்பாக,புற்றுநோய் மருந்துகள்,ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகள்,ஸ்டீராய்டு மருந்துகள்,வீரியமிக்க ஆன்டிபயாட்டிக்குகள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஈஸ்ட்ரோஜன், தைராக்சின் போன்ற ஹார்மோன்களின் குறைபாடுகளாலும் தலைமுடி உதிர்கிறது. பெண்களைப் பொறுத்தவரையில் பருவம் அடையும்போது, மாதவிலக்கின்போது, கர்ப்பமாகும்போது, பிரசவத்துக்குப் பிறகு, மாதவிலக்கு நின்ற பிறகு என்று பல கட்டங்களில் ஹார்மோன்கள் நிலைமை மாறுகின்றன. அப்போதெல்லாம் தலைமுடி உதிர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரந்துகொண்டிருப்பதால் அந்தக் காலகட்டத்தில் தலைமுடி அவ்வளவாக உதிர்வதில்லை. மாதவிலக்கு நின்றபிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துபோவதால் முடியின் வளர்ச்சி வேகம் குறைந்து உதிரத் தொடங்கிவிடும்.

மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் தலைமுடி உதிரும்.இன்றைய இளைய தலைமுறையினருக்கு மன அழுத்தம் என்பது அதிகமாகவே உள்ளது. தேர்வுக் காலங்களில், பணி தேடும் காலங்களில், பணிச்சுமை ஏற்படும் காலங்களில், திருமணத்துக்குக் காத்திருக்கும் காலங்களில் என்று பல கட்டங்களில் இவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அப்போதெல்லாம் தலைமுடி உதிரலாம். சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு முடி உதிரும்.தலையில் பேன்,பொடுகு ஆகியவை இருந்தாலும் தற்காலிகமாக முடி உதிரும்.

எக்ஸ் கதிர்கள்,காமா கதிர்கள்,மின்காந்த அலைகள் போன்ற பலவகை கதிர்வீச்சுகள் ஏற்படுகின்ற இடங்களில் தொழில் செய்கிறவர்களுக்கு இந்தக் கதிர்வீச்சுகளால் தலைமுடி உதிரலாம். உதாரணத்துக்கு எக்ஸ்ரே லேப்கள்,அணுமின் நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள்.

தலைமுடியைச் சரியாகப் பராமரிக்காததும் தலைமுடி உதிர்வதற்கான ஒரு காரணம்தான். குளித்தபின் ஈரம் காய்வதற்குள் தலைவாருதல்,வீரியம் மிகுந்த அல்லது தரம் குறைந்த ஷாம்புகளைப் பயன்படுத்துதல், அடிக்கடி முடியை பிளீச் செய்தல்,தரமற்ற தலைச்சாயங்களைப் பூசுதல்,கடினமான சீப்புகளைப் பயன்படுத்துதல்,ஹேர் டிரையரை அதிகமாகப் பயன்படுத்துதல், தலைமுடியை இறுக்கமாகக் கட்டுதல் போன்றவை தலைமுடி உதிர்வதை ஊக்குவிக்கின்றன.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க!

தலைமுடியில் வேர்க்கால் எப்படி இருக்கிறது? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா? என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

தலைமுடி உதிரத் தொடங்கியதுமே சில ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் மேன்மேலும் முடி கொட்டாது.ஆனால், மாத்திரை போடுவதை நிறுத்தியதும் முடிகொட்ட ஆரம்பித்துவிடும். எனவே,இது நிரந்தரத் தீர்வு ஆகாது. ‘மினாக்சிடில்’ (Minoxidil) எனும் தைலத்தைத் தடவ ஓரளவு முடி வளரும். வழுக்கை விழுவதும் தள்ளிப்போகும்.ஆனால், இந்தத் தைலத்தையும் தொடர்ந்து தடவி வர வேண்டும்.

ஊட்டச்சத்து முக்கியம்!

சிறு வயதிலிருந்தே தலைமுடியைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க எண்ணெய் நிச்சயம் உதவும். அடிக்கடி ஷாம்பு போட்டு குளிக்கக்கூடாது. பதிலாக, சீயக்காய்க் குளியல் நல்லது. வெயிலில் அதிகமாக அலையக்கூடாது. கடினமான சீப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. தலைக்குக் குளித்ததும், முடியை உலர்த்த ‘டிரையரை’ப் பயன்படுத்தக்கூடாது. பேன், பொடுகு, பூஞ்சை போன்றவை தொற்றாமல் தலையை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.

அடர்பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, காரட், முட்டை, பருப்பு, பால்,பால் பொருள்கள், முழுத்தானியங்கள், சோயாபீன்ஸ்,காளான், ஆரஞ்சு, முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள், வாழைப்பழம், மீன், ஈரல்,போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் முடி வளர்வதற்கான எல்லா சத்துகளும் கிடைத்துவிடும். கூடுதலாக மருந்து மாத்திரைகள் தேவைப்படாது.