– ரேகா சுதர்சன், உளவியல் நிபுணர், தாய்ப்பால் ஆலோசகர்.

த்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை கையில் ஏந்தியவுடன் எனக்கு தாய்ப்பால் போதுமான அளவுக்கு சரக்குமா?என்பதுதான் தாய்மார்களின் முதன்மையான முக்கியமான கவலை.

தாயின் அன்பும்,குழந்தைக்குத் தேவையான சத்தும் செறிந்திருக்கும் தாய்ப்பாலுக்கு இணை உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. குறிப்பாக,குழந்தை பிறந்த பிறகு சுரக்கும் அந்த முதல் துளிகள், குழந்தைக்கு தாய் தரும் பொக்கிஷம்.

வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர்போல் சுரக்கும் இந்த முதல் பாலை,ஆங்கிலத்தில் ‘கொலாஸ்ட்ரம்’ (Colostrum) என்பார்கள்.’சீம்பால்’ என்போம் நாம்! நார்மல் டெலிவரியாக இருந்தால் குழந்தை பிறந்த அரை மணி நேரத்திலும்,சிசேரியன் டெலிவரியாக இருந்தால் ஒரு மணி நேரத்திலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க அனுமதிப்போம்.

தாய்ப்பால்,ஆரம்பத்திலேயே அதிகமாக சுரந்து விடாது.குழந்தையின் தேவையை அறிந்து,சிறிது சிறிதாகத்தான் அதிகரிக்கும்.அப்படி குழந்தையின் தேவையை அறியும் தாயின் உடல் தகவமைப்பு சுவாரஸ்யமானது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது,’புள்ளைக்கு பத்தலையே…’எனும் தாயின் உணர்வு, மூளைக்குக் கடத்தப்படும்.மூளை அந்தச் செய்தியை ஏற்று, தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கும் ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டும். அதாவது,டிமாண்டை பொறுத்து சப்ளை அதிகமாகும் என்றும் சொல்லலாம்.இந்த அறிவியலைத்தான் ‘கொழந்த சவய சவயத்தான் பால் சுரக்கும்’ என்பார்கள் நம் பாட்டிகள்!

இந்த நேரங்களில் தாயின் மனநிலை மிக முக்கியமானது.அவளை உடல்,மன அளவில் தொந்தரவின்றி பார்த்துக் கொள்வதும்,அந்தச் சமயத்தில் எந்த சலனங்களும் இல்லாது அந்தப் புது உயிரின் மேல் மட்டுமே அவள் தன் முழு அன்பையும்,அக்கறையையும், கவனத்தையும் பொழியக்கூடிய சூழலை அவளுக்கு உருவாக்கித் தருவதும் முக்கியம்.

குழந்தையைப் பெற்றவளுக்கும் இது புது அனுபவம் என்பதால்,அவளை அனுசரித்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வதும் அவசியம்.முன்பெல்லாம் முதல் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்குப் பெண்ணை அனுப்பி வைப்பதும்… தாய்க்கும்,சேய்க்கும் தனியாக அறை ஒதுக்கிப் பாதுகாப்பதும் இந்தக்
காரணங்களுக்காகத்தான்.

பொதுவாக,இந்த சமயத்தில் பெரும்பாலான பெண்களின் கவலை, ‘குழந்தைக்கு பால் பத்துதான்னு தெரியலையே’, ‘குழந்தை பால் குடிக்காம தூங்கிட்டே இருக்கே’ -இப்படியாகத்தான் இருக்கும்.பிறந்த குழந்தைக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை பால் புகட்டினாலே போதுமானது.

உதாரணமாக… இரண்டரை கிலோ எடையுடன் பிறக்கும் குழந்தையின் வயிறு 22 மில்லி கொள்ளளவுதான் இருக்கும்.எனவே,அந்த ஆரம்ப வாரத்தில் தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால்,குழந்தைக்குப் போதுமானதாகவே இருக்கும்… கவலை வேண்டாம்.

ஆரம்ப வாரம் சரி… போகப் போக.?என்று அடுத்த கவலையை எடுத்து வைத்துக் கொள்வார்கள் சில பெண்கள்.நான் ஒல்லியா இருக்கேன்… அதனால எனக்கு பால் அதிகமா சுரக்காது…என்று சில குரல்களும் கேட்கக்கூடும்.ஒல்லி,பருமன் என்ற உடல் அமைப்புக்கும்,தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் இல்லை.

எல்லா தாய்மார்களுக்கும் அவர்கள் குழந்தைக்குத் தேவையான அளவுக்குத் தாய்ப்பாலை சுரக்கும் உடல் தகவமைப்பை வரமாக வழங்கியிருக்கிறது இயற்கை.குழந்தைக்கு பால் புகட்டும் ஓராண்டு காலம் வரை அந்தச் சுரப்பை சீராக வைத்துக் கொள்ளத் தேவை, சத்தான உணவும் நிம்மதியான மனநிலையுமே!

நிறைய பால் சுரக்க வேண்டும் என்பதற்காக ‘அதைச் சாப்பிடு,இதைச் சாப்பிடு’என்று பட்டியலிடுவார்கள் வீட்டுப் பெரியவர்கள்.அதில் உண்மை இருக்கிறதுதான்.சீரான அளவில் குழந்தைக்குத் தேவையான பால் சுரப்பதற்கு,உணவில் நிறைய பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

காலை, மாலை நேரத்தில் ஓட்ஸ் கஞ்சி குடிக்கலாம். நான்கு அல்லது ஐந்து டீஸ்பூன் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்ல பலனைத் தரும். முக்கியமாக,நான்கைந்து பாதாம் பருப்புகளைத் தோலுடன் சாப்பிடலாம்.தினமும் அரை லிட்டர் பால் அருந்தலாம்.காய்ச்சி வடிகட்டிய நீரை நிறைய குடிக்கலாம்.இந்த எளிய உணவு,தாய்ப்பால் சுரக்கச் செய்யும் மேஜிக் உணவாகும்!