ருள்தந்தை முனைவர் கு.நித்தியானந்தன் கலை இலக்கியத்துறையில் பணியாற்றி ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் 3 நூல்கள் உளநல ஆலோசனையைக் குறித்தவை.இவரது எட்டாவது நூலான “ஆற்றுப்படுத்தல் எனும் உள நல ஆலோசனை” நூல் வெளியீட்டு விழா சென்னையில் வேப்பேரி மத்தாயஸ் ஆலய வளாக அரங்கில் 26-6-2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

முனைவர் தமிழ் மணவாளன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் சண்முகப்பிரியா கார்த்திகேசு (ஸ்ரீ கார்த்திக் குரூப் ஆப் கம்பனிஸ்) முதல் பிரதியையும் , அருந்திரு மனோவா சந்தோஷம்(குருவானவர் – மத்தாயஸ் தேவாலயம், வேப்பேரி) இரண்டாம் பிரதியையும் பெற்றுக்கொண்டனர்.

பிரதம விருந்தினர் முனைவர் தமிழ்மணவாளன் நூலை வெளியிட்டு பேசும்போது, “இன்றைய சூழலில் உளநல சிகிச்சை என்பது மிகவும் முக்கியமானதாகிவிட்டது.ஆற்றுப்படுத்தல் என்பது வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குவது இவற்றைக் கடந்து பிரச்சனைகளை அணுகுவது என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆற்றுப்படுத்தல் என்பது ஏதோ இப்போது தோன்றியது அல்ல,மனிதனுக்கு எப்போது பிரச்சனைகள் தொடங்கியதோ அப்போதே ஆற்றுப்படுதலும் தேவையாகிவிட்டது.

ஆற்றுப்படுத்தல் என்பது தனி மனித சிக்கல்களை விவரிக்கிறது. ஒருவருடைய உளவியல் சவால்களை சந்திப்பதற்கு உதவுகிறது “என குறிப்பிட்டார்

முனைவர் ஷாலினி ஜெரால்டு, எழுத்தாளர் பெருமாள் நல்லமுத்து(பொறியாளர்) ஆகியோர் நூலாய்வு செய்தனர். முனைவர் ஷாலினி ஜெரால்டு தனது ஆய்வில்,”இந்நூல் உளநல ஆலோசகர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், உளநல ஆலோசனைகளை நாடுபவர்களை ஊக்குவிக்கும் ஊடகமாகவும் அமந்துள்ளது”எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் இன்றைய கால சூழ்நிலையில் மொபைல் போன்றவற்றிற்கு அடிமையாகும் இளந்தலைமுறைகளுக்கு,அவர்களை மீட்டெடுக்கும் வண்ணம் வழிகாட்டலைக் கொண்டுள்ளது. இந்திய சூழ்நிலை, தமிழ் கலாச்சாரம் என்பவற்றை மனதில் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

எழுத்தாளர் பெருமாள் நல்லமுத்து அவர்கள் தமது ஆய்வுரையில், இந்நூல் கொடுத்த ஊக்கத்தினால் ஒரு வாரத்தில் 13 சிறுகதைகளை தான் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கலாபூஷணம் கே. பொன்னுத்துரை அவர்கள்,ஆங்கில மொழியிலேயே பொதுவாக ஆற்றுப்படுத்தலைக்குறித்த நூல்கள் பல வெளிவந்துள்ளன, இங்கு ஆசிரியர் தமிழில் மிகவும் பயனுள்ள வகையில் நூலினை தந்துள்ளார், இலங்கையிலும் இந்நூல் அறிமுகம் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக மேனாள் கணிணி தொழில்நுட்பவியலாளர்கள் ஆ. நிர்மோகன், க.சந்திரலிங்கம், திரைப்பட இசையமைப்பாளர் உதயன் விக்டர், உரத்த சிந்தனை சஞ்சிகை ஆசிரியர் உதயம் ராம், கல்வெட்டுபேசுகிறது சஞ்சிகை ஆசிரியர் சொர்ணபாரதி, முனைவர் ஜெசுகரன் (மேனாள் வேல்ட்டு விஷன் நிறுவனம்) ஆகியோர் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கவிஞர், எழுத்தாளர், இனிய நந்தவனம் சஞ்சிகை பதிப்பாசிரியர் திரு. நந்தவனம் சந்திரசேகரன் அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கியதுடன் அனைவரையும் வரவேற்க, முனைவர்.கு. நித்தியானந்தன் ஏற்புரையாற்றி அனைவருக்கும் நன்றி கூறினார்.

– சேகர்.