– ஆனந்த சிவா

மிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிக்கான தேர்வு சமயங்களில் மாணவ, மாணவிகளின் தற்கொலை நிகழ்வுகள் தொடர்கதையாக ஆகிவிட்டதோ என்று அச்சமாக இருக்கிறது… குறிப்பாக ‘’நீட்’’ சம்பந்தமாக மட்டுமே இதுவரையில் பதினைந்து மாணவ, மாணவிகள் இறந்திருப்பதாக அரசாங்கத்தால் ஒரு புள்ளிவிபரம் சொல்லப்படுகிறது..!

ஏன் இந்தத் தற்கொலைகளை அரசாங்கங்களோ, பெற்றோர்களோ, ஆசிரியர்களோ தடுக்க முடியவில்லை..? தடுக்க முடியவில்லையா..? அல்லது தடுப்பதற்கான முயற்சிகளை யாரும் செய்யத் தயாரில்லையா..? இல்லை, எப்படித் தடுப்பதென்று யாருக்கும் தெரியவில்லையா..? இவற்றில் எது உண்மையாக இருந்தாலும் சரி – அறிவியலின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க முடியாமல் போவதற்காக நாம் வெட்கப்பட்டே ஆகவேண்டும்..!

அறிவியல் வளர்ச்சி என்பது, இயற்கை மனிதனுக்னெறே கொடுத்திருக்கும் மனிதனுடைய மூளையின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது..! இயற்கை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசுதான் மூளை..! நம்முடைய எண்ணம் இருப்பது – நன்மை தரக்கூடியதோ அல்லது தீமை அளிக்கக்கூடியதோ எதுவாக இருந்தாலும் அந்த எண்ணம் இருப்பது – நம் தலையில் இருக்கும் மூளையில்தான்… நாம் எண்ணுவது அல்லது சிந்திப்பது, அதன்பின் அதற்கேற்ப செயல்படுவது என அனைத்தும் நம்முடைய மூளையின் கட்டளையால் மட்டுமே நிகழக்கூடியவை… நம் தலையில் இருக்கும் நம் மூளைக்குள் வந்து எவரோ உட்கார்ந்துகொண்டு சிந்திக்க முடியாது…

அதே சமயம், ஒருவேளை நாம் அனுமதித்தால், அதாவது நம் மூளை அனுமதித்தால், நம் மூளைக்குள் மற்றொருவர், தன்னுடைய சிந்தனைகளைச் செலுத்த முடியும்… அதன் மூலம் நம்மைப் பயன்படுத்திக்கொண்டு அவர் தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்ளமுடியும்..! மற்றொருவர் தனக்கான செயல்களைச் செய்து முடிக்க முடியும்… ஆம்… நாம் அனுமதித்தால், நம் மூளை அனுமதித்தால் மட்டுமே அது சாத்தியம்… அப்படித்தான் சாமியார்களும் தீவிரவாதிகளும் மதவாதிகளும் சுயசிந்தனையற்ற பலவீனமான மனிதர்களை, அறியாமையின் போதையில் அமிழ்ந்து கிடக்கும் மனிதர்களை, தன்னம்பிக்கையற்று சோர்ந்து விரக்தியில் தவித்துக் கொண்டிருக்கும் மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மூளைச் சலவை செய்து தங்களுக்கு ஏற்றவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள்…

சாமியார்களும், மதவாதிகளும், தீவிரவாதிகளும் முழுமையாக இந்த அறிவியல் யுக்தியைத்தான் இதற்காகக் கடைபிடிக்கிறார்கள்… அவர்கள் முழுக்க முழுக்க செயல்படுவது அறிவியல் உண்மையை அடிப்படையாக வைத்துத்தான்..! அதனால்தான், எந்தச் சூழலிலும் அவர்கள் அறிவியலை, தாங்கள் பயன்படுத்திக் கொள்ளும் அந்த அப்பாவி மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் செயல்பட மாட்டார்கள், நடந்துகொள்ள மாட்டார்கள்…அதுதான் அவர்களின் சாணக்கியத்தனம்..! மனிதர்களை தங்களுக்கு சாதகமான வகையில் மாற்றிக்கொள்ள, இவர்களால் முடிகின்றதென்றால், ஏன் ஒரு அரசாங்கத்தால், பெற்றோரால், ஆசிரியர்களால் மாணவ, மாணவிகளின் எண்ணத்தை மேம்படுத்த முடியாது..?

ஒரே சமயத்தில் கூட்டுத் தற்கொலை..?

ஒருவன் தன்னுடைய சுய அறிவை, சுய சிந்தனையை மறந்து, தன் உயிர் போகப்போகிறது என்பது தெரிந்தும், தற்கொலைப் படையாக மாறியோ அல்லது ஆயுதமேந்தியோ, தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், மற்ற மனித உயிர்களை எடுக்க ஆரம்பிக்கிறான்..! மற்றவர் சொல்வதைக் கேட்டு தற்கொலை செய்து கொள்கிறான்… அப்படியென்றால், எந்த அளவுக்கு அவனுடைய மூளைக்குள் தங்கள் சித்தாந்தங்களைப் புகுத்த தீவிரமாக செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்… தங்களின் மோசமான செயல்களுக்காக ஒருவனுடைய மூளையை மழுங்கடித்து, தங்கள் எண்ணத்தை அவன் மூளைக்குள் செலுத்தி, அவனை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள்… சாமியார்களும் மதவாதிகளும் சொன்னால், கண்களை மூடிக்கொண்டு அடிப்பது, உதைப்பது, இடிப்பது, கற்பழிப்பது, கொல்வது என எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதும் அப்படித்தான்…

உலகம் முழுவதும், தங்கள் சுய சிந்தனையை இழந்து மற்றவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன… நடந்துகொண்டும் இருக்கின்றன… அவற்றில் பேரதிர்ச்சியை உலகமெங்கும் உண்டாக்கிய சம்பவம் ஒன்று… 1978 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருக்கும் கயானா என்ற இடத்தில் ஜோன்ஸ்டவுன் என்ற சர்ச்சின் பாதிரியார், ‘’நாம் எல்லோரும் ஒன்றாகத் தற்கொலை செய்துகொண்டு இறந்து, இறைவனிடம் சென்றடையப் போகிறோம்… அனைவரும் விஷமருந்துங்கள்’’ என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்… அதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் அடக்கம்… அந்த பாதிரியாரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து போனார்..!

தற்கொலைப் படை தீவிரவாதியாக மாற்றப்படும் ஒருவன், தன் சுயத்தை இழந்து மனிதர்களின் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்பட தூண்டப்படுகிறான்… ஒரு மனிதனை மூளைச்சலவை செய்து, ஒரு மிருகத்தைப் போல அவனை செயல்பட வைக்கமுடியும் என்றால்… மாணவ, மாணவிகளின் எண்ணத்தைச் செம்மைப்படுத்தி, தன்னம்பிக்கையை உண்டாக்கி, அவர்களின் சிந்தனையில் இருக்கும் தற்கொலை எண்ணத்தை முழுமையாக அகற்றி, அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து, வாழ்க்கையில் வெற்றியடைய வைப்பதென்பது மட்டும் ஏன் முடியாது…?

வெற்றியும் தோல்வியும் இயல்பானதுதான்… அதை எதிர்கொண்டு வாழ்ந்துதான் நம் இலக்கை அடையவேண்டும் என்கிற உண்மையை ஏன் மாணவ, மாணவிகளுக்கு உணர்த்த முடியாது..? அல்லது இதுவரையில் ஏன் அப்படிச் செய்ய நம் அரசுகள் முயற்சிக்கவில்லை..? அறிவியல் அறிஞர்கள் மற்றும் உளவியலாளர்கள் ஏன் முயற்சிக்கவில்லை..!? ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஏன் அப்படிச் செயல்பட சிந்திக்கவில்லை..?

தற்கொலையைத் தடுப்பது சுலபம்..!

குற்றவாளிகளை போலீஸ் கண்டுபிடிப்பதைப் பற்றி இப்படிச் சொல்வார்கள்… குற்றவாளிகளைவிட போலீஸுக்கு அதிகமான வசதிவாய்ப்புகளும் திறமையும் இருந்தாலும், ஏன் பெரும்பாலான திருட்டு, கொலை போன்றவைகளைக் கண்டுபிடிக்க முடிவதில்லை…? காரணம், குற்றவாளிகள் தாங்கள் தப்பித்துக் கொள்ள மூளையைப் பயன்படுத்திச் சிந்திக்கும் அளவுக்கு போலீஸ் தங்கள் மூளையைப் பயன்படுத்துவதில்லை… குற்றங்களைத் தடுப்பதில் அக்கறைக் காட்டுவதில்லை என்பதுதான் உண்மை… போலீஸ் முயன்றால் சாதாரணமாக செய்து முடிக்கின்ற செயல்தான் அது… ஆனால், அவர்கள் அதற்கு தீவிரமாக முயற்சிப்பதில்லை என்றுதான் சொல்லவேண்டும்…

இப்படித்தான் அரசுகளுக்கோ, பெற்றொருக்கோ, ஆசிரியர்களுக்கோ, சமூக செயல்பட்டாளர்களுக்கோ, மாணவ, மாணவிகளின் மீது உண்மையான அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டினால், அதை மறுக்க முடியுமா..?

ஆசிரியர்கள், பெற்றோர் அல்லது அரசுகள் சரியாகச் செயல்பட்டால் நிச்சயமாக மாணவ, மாணவிகளின் இந்தத் தற்கொலையைத் தடுத்துவிட முடியும்… அவர்களுக்குத் தன்னம்பிக்கையை, அதாவது உண்மையான தன்னம்பிக்கையைக் கொடுத்து, எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு மாணவ, மாணவிகளின் எண்ணத்தை மேம்படுத்திவிட முடியும்… அதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளும், கடமையும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் அரசுகளுக்கும் இருக்கிறது… மாணவ, மாணவிகள் அந்த இளம் வயதில் எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக்கொள்வதற்கான திறனை இயற்கை அவர்களின் மூளையில் உருவாக்கி வைத்திருக்கிறது..!

ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் எந்தவொரு பிரக்ஞையும் இல்லாமல், பிரச்னைகள் எழும்பொழுது, அதிலிருந்து தப்பிக்க அப்பாவி மாணவ, மாணவிகளின் தற்கொலைகளின் போது ‘’நம்பிக்கையாய் இருங்கள்… இந்தப் படிப்புதான் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதில்லை… நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வேறொரு படிப்பும் அதிலிருந்து சிறப்பான வாழ்க்கையும் கிடைக்கும்’’ என்பதைப்போல நம்பிக்கை வார்த்தைகளைப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அனைவரும்… ஆனால், அவை அத்தனையும் எதற்கும் பயனற்ற வெற்றுப்பேச்சு…

அறிவியலால் அனைத்தும் சாத்தியம்..!

சாமியார்கள், மதவாதிகள், தீவிரவாதிகள் அல்லது ஏதோ ஒரு அமைப்பு, ஒருவருடைய சிந்தனையை முற்றிலுமாக மாற்றி அவரிடமிருந்த தன்னம்பிக்கையைக் குலைத்து, அவரை ஈவு இரக்கமற்ற மிருகமாக்கி கொலை செய்யவைக்க முடிகிறது..! தற்கொலை செய்துகொள்ள வைக்கமுடிகிறது… கட்டளையிட்டால் கண்களை மூடிக்கொண்டு எதைச் செய்யவும் துணிய முடிகிறது…

இப்படிப்பட்ட தவறான காரியங்களை எல்லாம் ஒரு மனிதனை செய்யவைக்க முடிகிறதென்றால்; ஒரு மாணவ, மாணவியிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திலிருந்து அவர்களை ஏன் முற்றிலுமாக வெளிக்கொண்டுவர முடியாது..? 

ஒரு சாமியார் தன் சீடர்களைத் தன் வயப்படுத்த எடுத்துக் கொள்ளும் அக்கறையில், ஒரு தீவிரவாதி தங்களின் கொலைக்கருவிகளாக உருவாக்கும் ஒரு மனிதனின்  மூளைக்குக் கொடுக்கும் பயிற்சியில் அல்லது ஒரு மதவாதி தன் மதத்தை மக்களின் சிந்தனைக்குள் செலுத்த செயல்படுத்தியிருக்கும் யுக்திகளில், ஒரு பத்து சதவீதம் நாம் நம் மாணவ, மாணவிகளுக்கான தன்னம்பிக்கையை மேம்படுத்துவதில் நாம் காட்டியிருந்தால் இன்று ‘’நீட்’’ என்ற படிப்புக்காக சுமார் பதினைந்து மாணவ, மாணவிகளை நாம் இழந்திருக்க மாட்டோம்… ஒவ்வொரு பொதுத் தேர்வுகளின் போதும் மாணவ, மாணவிகளின் இழப்பு இல்லாமல் போயிருக்கும்..! இப்படிப்பட்ட சிந்தனைகள் எவரிடமும் இல்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை..! இப்படிப்பட்ட தற்கொலைகளை தடுப்பதற்கான அறிவியல் பூர்வமான எவ்வித முயற்சியையும் நாம் இன்றுவரையிலும் முயற்சிக்கவேயில்லை என்பது பெரும் அவலமான நிகழ்வுதான்…

ஒருவருடைய மூளையை சுயமே அற்றதாக மாற்றிவிட முடியுமென்றால், அதே மூளைக்கு, வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்த்துவது ஒன்றும் பெரும் காரியமாக இருந்துவிட முடியாது… மூளையைப் பொறுத்தவரையில் அதற்கு அன்போ, கொலையோ, கல்வியோ, கடவுளோ எல்லாமே ஒன்றுதான்… எதை வேண்டுமானாலும் மூளைக்குக் கற்றுக் கொடுக்க முடியும் என்பதுதான் மூளையின் இயல்புத் தன்மை… மூளையைப் பொறுத்தவரையில் அது தான் கற்றுக்கொள்ளும் எந்த ஒன்றையும் பற்றிப் பாகுபாடு பார்ப்பதில்லை… ஒருவர், ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதோ, ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வதோ அல்லது தனக்குத் தெரியாத எந்த ஒன்றையாவது கற்றுக் கொள்வது என்பதோ, மூளையைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்றுதான்… ஆளப்பரிய ஆற்றல் மனித மூளையில் அடங்கியிருக்கிறது… அதில் தன்னம்பிக்கையை வளர்ப்பதெல்லாம் மிகச் சாதாரணமான செயல்தான்..!