மன்னர்கள் காலத்தில் குடிமக்கள் எவ்வாறு உள்ளனர் என்பதை அறியவும், தங்களைப் பற்றி, தங்கள் ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்று அறியவும் மன்னர்கள் மாறுவேடங்களில் இரவில் நகர்வலம் வருவார்களாம்.

அது மன்னராட்சிக் காலம். தற்போது மக்களாட்சிக் காலம். இந்தக் காலத்திலும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பகலில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்கிறார். முதல்வர் என்ற முறையில் துறை ரீதியாக ஆய்வு செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கும்போதெல்லாம் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதோடு ‘வாக்கிங்’ செல்லும்போது, ‘சைக்கிளிங்’ செய்யும்போதும் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். சமீபத்தில் சென்னை கண்ணகி நகரில் பேருந்தில் பயணித்து, பயணிகளிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கடந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் வெளியே பயணிக்கும்போது சாலைகள் முடக்கப்பட்டதுண்டு. அவ்வாறு போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு பிரசவ வேதனையால் துடித்த பெண்ணுக்கு, என் சக பெண் மருத்துவர் வேனிலேயே பிரசவம் பார்த்த அனுபவமும் உண்டு. ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும்போது சாலையை முழுவதுமாக முடக்கிப் போடுவதில்லை. பொதுமக்களும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர் திடீர் விஜயம் செய்து மக்களை சந்திக்கும்போது, அதிகாரிகள் எந்தக் கெடுபிடியும் செய்வதில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கைகள் மக்கள் மீது அவருக்குள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது. ஆனால், அதேசமயம் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உடல்நலனும், ஆரோக்கியமும் தமிழக மக்களுக்கும், நாட்டுக்கும் மிகவும் அவசியமானது. கொரோனா தொற்று இன்னும் முழுவதுமாக தீராத காலமிது. அதோடு கொரோனா போன்ற மற்ற தொற்றுக்களும் பரவும் காலமிது. எனவே மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் உடல்நிலையிலும், ஆரோக்கியத்திலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். இது நம்முடைய வேண்டுகோள் மட்டுமல்ல.. அவர் மீது அக்கறை உள்ள அனைவரின் வேண்டுகோளாகும்.

–அன்புடன்

ஜி.ராஜமோகன்