-டாக்டர்.கு.கணேசன்.
பொதுநல மருத்துவர்

 

ற்போது பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உடல்பருமன்தான் மிகப் பெரிய பிரச்னை. ‘கர்ப்பமாகிவிட்டேன்’ என்று டாக்டரிடம் முதல் பரிசோதனைக்கு வரும்போது இருக்கிற உடல்வாகுக்கும் பிரசவத்துக்கு வரும்போது இருக்கிற உடல்வாகுக்கும் இடையே அசுர வித்தியாசம் இருப்பதைப் பல கர்ப்பிணிகளிடம் காணலாம். 

கர்ப்ப காலத்தில் உணவை அதிகமாகச் சாப்பிட வேண்டும் எனப் பொதுவாகத் தெரிந்துகொண்டு சாப்பிடுபவர்கள்தான் அதிகம். பதிலாக, எந்தச்சத்து அதிகம் தேவை என சரியாகத் தெரிந்துகொண்டு, அந்தச் சத்துள்ள உணவுகளை மட்டும் அதிகம் சாப்பிடுவது நல்லது. இப்படிச் சாப்பிடுவது கர்ப்பிணிக்கு உடல்பருமன் ஏற்படுவதைத் தடுத்து விடும்.

 ஏற்கெனவே சரியான உடல் எடை உள்ள கர்ப்பிணிகள் அதிகபட்சமாக 11 கிலோ கூடலாம். முதல் மூன்று மாதங்களில் ஒன்று முதல் இரண்டு கிலோ எடை வரையும், அதற்குப் பிறகு மாதாமாதம் ஒன்றரை கிலோ வரையும் எடை கூடலாம்.

 ஏற்கெனவே உடல்பருமன் இருப்பவர்கள் அதிகபட்சமாக 7 கிலோ எடை கூடலாம். குழந்தை பிறந்த பிறகும் சில அம்மாக்களுக்கு உடல்பருமன் நீடிப்பதற்கு கர்ப்பத்தின்போது உடல் எடை கூடுவதே அடிப்படைக் காரணம். எனவே, இவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருந்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் தொடக்கத்தில் 45 கிலோவுக்குக் குறைவாக உடல் எடை இருப்பவர்கள் 12 முதல் 18 கிலோ வரை எடை கூடலாம்.

கர்ப்ப காலம் முழுமையும் உடல் எடை அதிகரிப்பதைக் கர்ப்பிணிகள் கண்காணிக்க வேண்டும். குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகரிப்பதும் ஆபத்து குறைவதும் ஆபத்து. இதற்காகவே, இந்த எச்சரிக்கை! சத்துகளைப் பொறுத்தவரை கர்ப்பிணிகளுக்குப் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம்,வைட்டமின் பி காம்ளெக்ஸ் ஆகியவை சிறிது அதிகம் தேவை.கிடைத்ததை சாப்பிடாமல் நல்லது எது என்பதை அறிந்துகொண்டு திட்டமிட்டு சாப்பிட்டால் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்கலாம்.