பூமியிலே இருந்து கொண்டே சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதாக நம்பப்படுவது எது தெரியுமா? கஞ்சா பழக்கம். சமீப காலமாக தமிழ்நாடெங்கும் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதாக நாள்தோறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஐ.டி. வேலையில் இருக்கும் ஒரு இளைஞர் கும்பல், ‘‘போன் செய்தால் போதும், வீட்டுக்கே டோர் டெலிவரி செய்கிறோம்’’ என்று சப்ளை செய்து மாட்டிக் கொண்டது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள்.

கஞ்சா பழக்கத்துக்கு பழகிவிட்டால்.. நல்லது, கெட்டது, சரி, தவறு, நியாயம், அநியாயம், பாவம், புண்ணியம், தாய், தங்கை என்ற வித்தியாசம் தெரியாமல் சமூக சீரழிவுக்கும் வன்முறைக்கும் வித்திடும் மிக ஆபத்தான பழக்கம் இது.

‘‘கஞ்சா அடிச்சிப்பாரு.. மனசுல இருந்து சும்மா கவிதையா கொட்டும்.. பூமியில இருந்துட்டே சொர்க்கத்துக்குப் போயிட்டு வந்துடலாம்’’ என்றுதான் நண்பர்கள் இதை அறிமுகப்படுத்துவார்கள்.

கஞ்சாவுக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு பட்டப் பெயர் இருக்கும். பொருள், பொட்டலம், ஸ்டஃப், துண்டு உட்பட பல பெயர்கள் இருக்கும். அந்தப் பட்டப் பெயரை தெரிந்து கொண்டால்தான் நீங்கள் கஞ்சா கஸ்டமராக முடியும். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கஞ்சாவை எல்லா இடங்களிலும் சில குழுக்கள் விநியோகம் செய்து வருகின்றன. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தும் அடங்க மறுக்கும் நிலைதான் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அவர்களிடம் ஏதாவது தவறான பழக்கம் இருக்கிறதா? நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறதா? என கண்காணிக்க வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த போதை ஒருவித கிறக்கத்தை தந்தாலும் நாளடைவில் உடலையே உருக்குலைத்து விடும். மனமும் சீரழிந்து சின்னாபின்னமாகி விடும். சமூக விரோதியாக மாற்றி விடும். காவல்துறையும், அரசு நிர்வாகமும் இன்னும் கடும் நடவடிக்கை எடுத்து இந்த சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைத்து கஞ்சா விற்பனை பற்றிய தகவல் தெரிந்தால், காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.