
சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். சுற்றுப்புற மாசு உள்ள இடங்களில் அதிக நேரம் செலவழிக்கக் கடாது. தூசும் மாசும் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அந்த இடங்களில் வேலை செய்யும்போது முகத்திரை போட்டுக் கொள்ள வேண்டும். எப்போதும் கைகளை சுத்தமாக வைத்திருங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். அதேநேரத்தில் குளிர்ச்சியான உணவுப் பொருள்களை ஒதுக்கி வையுங்கள். முக்கியமாக, குளிராக்கப்பட்ட குடிநீர், ஐஸ்கிரீம், மென்பானங்கள், குளிர்பானங்கள் குடிப்பதை நிறுத்துங்கள். மிகவும் குளிர்ந்த காற்றில் படுக்காதீர்கள்.
காற்றிலும் சரி, உணவிலும் சரி, குளிர்ச்சி அதிகரிக்கும்போது, மூச்சுக்குழல்களில் சுருக்கம் ஏற்படும். இதன் விளைவாக, அவற்றில் காற்று செல்வது தடைபடும். அப்போது காற்றுக் குழல்களில் வீக்கம் ஏற்பட்டு, காற்றுப் பைகளில் அதிகமாக காற்று தங்கிவிடும். இது வெளியேறுவதற்கு சிரமப்படும். இதனால் சுவாசிப்பது சிரமமாகி ஆஸ்துமா வரும்.
ஊதுவத்தி, கற்பூரம், சாம்பிராணிப் புகை ஒவ்வாமை உள்ளவர்கள் அவற்றை தவிர்ப்பது நல்லது. அடுத்து கொசுவை விரட்டுவதற்காக நாம் பயன்படுத்தும் சுருள்களும் கிரீம்களும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதன் விளைவாகவும் ஆஸ்துமா வரலாம். ஆகவே, இவற்றிலும் கவனம் தேவை.
வீட்டை சுத்தமாகப் பராமரியுங்கள். வீட்டில் தேவையில்லாமல் சாமான்களை அடுக்கி வைத்தாலோ சுவற்றில் போட்டோக்களை தொங்க விட்டாலோ ஒட்டடை சேரும். அந்த ஒட்டடையில் பலவித மாசுக்கள் சேரும். இவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரக்காரணமாகும். படுக்கை விரிப்புகளில் கண்ணுக்குத் தெரியாத அளவில் உண்ணிகள் இருக்கும். இவற்றின் கழிவுகளை நாம் சுவாசிக்கும்போதும் ஆஸ்துமா வரும். ஆகவே, வாரத்துக்கு ஒருமுறை படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், சன்னல் திரைச்சீலைகள் போன்றவற்றை வெந்நீரில் துவைக்க வேண்டும்.

