‘அவுக வீட்டில் எப்பவும் கருப்பட்டிக் காபிதான். சீனி எல்லாம் கிடையாது’ என ஏழ்மையைக் குறிப்பிட்ட காலம் உண்டு. இப்போது நிலைமை தலைகீழ். சீனியை விட கருப்பட்டி நல்லது என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் கருப்பட்டியின் விலை அதிகரித்து வருகிறது.

நாட்டு வெல்லத்தைக் காட்டிலும், சீனியைக் (சர்க்கரை) காட்டிலும் பனங்கருப்பட்டிதான் மிக நல்லது. பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் எனும் கனிமங்களையும் சேர்த்து தருவதால் உடலை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. புற்றைத் தடுக்கவும் உதவும். கூடவே குறைவான கிளைசிமிக் (இனிப்பு) தன்மை உடையது. குறைவான கிளைசிமிக் உணவுகள் கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயின் வருகையைக் குறைக்கும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

எல்லாம் சரி.. சந்தையில் விற்பனையாகும் பனங்கருப்பட்டி தரமானதுதானா என்று பார்த்து வாங்க வேண்டும். சீனியை பனஞ்சாறில் விட்டு சேர்த்துக் காய்ச்சி, போலி கருப்பட்டி தயாரிக்கும் கொள்ளைக் கும்பல் தமிழகத்தில் ஆங்காங்கே அதிகரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. நல்ல பனை வெல்லத்தை தேடி வாங்குவது ரொம்ப முக்கியம்.

-டாக்டர் கு.சிவராமன், சித்த மருத்துவர்