
ஆரோக்கியத்தின் தூதுவன்
&டாக்டர் கு.சிவராமன், சித்த மருத்துவர்
மருத்துவப் பயன்கள் பல தருவது என்பதால், ‘கொடிகளின் ராஜா’ என தூதுவளைக் கொடியைச் சொன்னார்கள். சிறு முட்கள் உள்ள இந்தக் கொடியை, மழைக்காலத்து சமையலில், ரசமாக வைத்து சாப்பிடுவது தமிழர் மரபு. அப்படிச் செய்கையில் கொடியின் முட்களை மட்டும் நீக்கி விட்டு, கொஞ்சம் கொத்தமல்லி, சீரகம், புளி சேர்த்து ரசமாக்கி சாப்பிடுவர்.
தூதுவளையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவப் பயன் தரும். இலையினால் உண்டிக்கு சுவையும் கிடைத்து, நெஞ்சின் சளியும் கரையும். பூவும் மொத்த கீரையுமே ஆண்மையைப் பெருக்கும். காய், வாத, பித்த, கபம் எனும் முக்குற்றங்களையும் நீக்கும். வேரும் கொடியும் இருமல், இரைப்பு முதலிய ஐயப்பிணிகளைப் போக்கும்.

காயை வற்றலிட்டுப் பாகம் செய்து உண்டு வர, ஐய நோய், அழல் நோய், வளி நோய் முதலியன அணுகாது. குடல் வாதம் நீங்கும்.
குழந்தைகளுக்கு காதில் சீழ் வரும் நோய்க்கு, தூதுவளை இலையைப் பிழிந்து, காதில் துளியாக விட, நோய் நீங்கும். இலையைத் துவையல், குழம்பு முதலியன செய்து உண்ண, சளி வெளியேற மறுத்து, நெஞ்சை அடைத்து வரும் கோழைக்கட்டு நீங்கி இருமலை ஓடிப்போகச் செய்யும். இதனை நெய் சேர்த்து காய்ச்சி, ஐய நோய், இருமல் நோய்களுக்கு சித்த மருத்துவர் கொடுப்பர்.
தூதுவளை இலையை சுத்தம் செய்து 15 முதல் 50 கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து, ரொட்டியாக தயாரித்து, காலை உணவாக, கப நோய்க்கும் தொண்டை நோய்க்கும் சாப்பிடச் சொல்கிறது சித்த மருத்துவம்.
20 கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து, வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால், நோய்த் தடுப்பாகவும், நினைவாற்றல் பெருகவும் செய்யும் என்கின்றன சில அனுபவக் குறிப்புகள். மேலும், வாயுப் பிரச்னையைப் போக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும். தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.
தூதுவளையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால், எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும். அதனால், தூதுவளைக் கீரையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து, நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், தூதுவளை வெறும் கொடி மட்டும் அல்ல.. அது நம் ஆரோக்கியத்தின் தூதுவன்.
தூதுவளைக் குடிநீர்
தூதுவளை, இம்பூறல், ஆடாதொடை, சங்கன் வேர், சுக்கு, வீழி, திப்பிலி, பர்படாகம், வழுதுனை வேர், கண்டக்காலி ஆகியவற்றை, தலா 30 கிராம் எடுத்து சேர்த்து, ஆறு லிட்டர் நீர் விட்டு, அதை எட்டில் ஒரு பாகமாக குறுக்கி, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள, சளியுடன் கூடிய காய்ச்சல் போகும்.
இதில் உள்ள ஒவ்வொரு மூலிகையும், நவீன மருத்துவ ஆய்வுகளில் நுரையீரலைத் தாக்கும் கிருமிகளுக்கு எதிரான ஆன்டிபயாட்டிக்காகவும், கோழை அல்லது சளி நீக்கியாகவும், நுரையீரல் குழாய் சுருக்கம் நீக்கியாகவும், எக்ஸ்பெக்டோரன்டாகவும் செயல்படுகிறது.

