
சிலருக்கு கால் முட்டிக்குக் கீழே, பின்பக்கமுள்ள கெண்டைக்கால் பகுதியில் மண் புழுவைப்போல் வளைந்து நெளிந்து பெரிதாக வெளியே தெரியும்.பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கும்.இதை காலில்,நரம்பு சுருட்டிக்கிட்டு இருக்கு…என்று கிராமங்களில் சொல்வார்கள். கெண்டைக்கால் பகுதியில் நரம்பு சுருட்டிக்கொண்டு, புடைத்துக்கொண்டு இருக்கிறது…என்றும் சொல்கிறார்கள்.
அதை நரம்பு என்று சொல்லி பழகிவிட்டோம். ஆனால்,அது நரம்பு அல்ல.அதுவும் ஒரு ரத்தக்குழாய் தான். ரத்தக் குழாய்கள் இரண்டு வகைப்படும். இருதயத்திலிருந்து சுத்தமான ரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு எடுத்துச்செல்லும் ரத்தக் குழாய்களுக்கு தமனி (Artery) என்று பெயர்.இது ஒருவகை.
உடலின் பல்வேறு இடங்களில் இருந்து அசத்தமான ரத்தத்தை,அதாவது கட்ட ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் ரத்தக் குழாய்களுக்கு சிரை(Veins) என்று பெயர்.கெண்டைக்கால் பகுதியில் நரம்பு சுருட்டிக்கொண்டு இருக்கிறது என்கிறோமே,அது கெட்ட ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் சிரை என்கிற ரத்தக்குழாய்!.
சிரை(Vein)என்பது மிகச்சிறிய, மெல்லிய சுவர்களைக் கொண்ட அசுத்த ரத்தக்குழாய்.அது ரத்தத்தை கைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் இருதயத்திற்கு அனுப்பக்கூடிய வேலையைச் செய்கிறது.அசுத்த ரத்தக்குழாய் எதிர்திசையில் ரத்தத்தை எடுத்துச் செல்லும்.
அதாவது ரத்தத்தை கீழேயிருந்துதான் மேலே அனுப்புமே தவிர,மேலேயிருந்து கீழே அனுப்பாது. இவ்வாறு கீழேயிருந்து மேலே ரத்தத்தை அனுப்புவதால், ரத்தம் மறுபடியும் கீழே வந்துவிடாமல் கட்டுப்படுத்த வால்வுகள் இருக்கின்றன. காலிலிருந்து மேலே போய்,இதயத்தில் விழவேண்டிய ரத்தம், மேலே போய்ச் சேராமல்,கீழே திரும்பி வந்துவிடக்கூடாது அல்லவா! அதற்காகத்தான் இந்த வால்வு.
வால்வுகள் சரிவர வேலை பார்க்கவில்லை என்றால்,ரத்தம் ஒழுங்காக மேலே போகாமல்,கீழேயே தேங்க ஆரம்பித்துவிடும். இதனால் ரத்தக்குழாய்கள் வீங்கும்.கொஞ்ச நாட்களில் ரத்தக்குழாய்கள் விரிந்து,பெரிதாகி, சுருண்டு,நெளிந்து, கடினமாகி, தடிமனாகி,ஒரு மண் புழுபோல் வளைந்து கெண்டைக்கால் பகுதியிலும், தொடையின் உள்பகுதியிலும் தெரியும்.
ரத்தக் குழாய்கள் வழியாகத்தான் உடல் முழுக்க ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது.ரத்தக் குழாய்களுக்கு உள்ளே ஆங்காங்கே வால்வுகள் இருக்கின்றன.இந்த வால்வுகள் மூடித்திறப்பதனால்தான்,நமது உடலுக்குள் ஒரே வேகத்தில்,ஒரே சீராக,ரத்த ஓட்டம் நடைபெறுகிறது.
சில நேரங்களில் இந்த வால்வுகள் பாதிப்படைந்து, ஒழுங்காக வேலை செய்யாது.இப்படி வால்வுகள் பாதிப்படையும்போது ரத்த ஓட்டமும் மாறிவிடுகிறது. வேகமாகச் செல்லவேண்டிய ரத்தம், பாதிப்படைந்த ரத்தக்குழாய் வழியாக வரும்போது, மெதுவாகச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் ரத்தக் குழாய் வீங்க ஆரம்பிக்கிறது. ரத்தம் தேங்க ஆரம்பிக்கிறது. அதனால் ரத்தக் குழாய் இயல்புக்கு மாறாக வளைந்து, நெளிந்து விடுகிறது. இதுதான் நரம்பு சுருட்டிக் கொண்டிருக்கிறது
என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதை ரத்தநாள வீக்க நோய்(Varicose Veins) என்று அழைப்பது சரியாக இருக்கும்.
பெரும்பாலும் நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த ரத்த நாள வீக்க நோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.இந்த நோய் ஆண்,பெண் இருவருக்குமே வருவதுண்டு. ஆணைவிட, பெண்ணுக்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
பெண்களுக்கு ரத்தநாள வீக்க நோய் அதிக அளவில் கர்ப்பமாயிருக்கும் காலத்தில்தான் ஏற்படும்.கர்ப்பக் காலத்தில் கருவினுடைய வளர்ச்சியால்,ரத்தக் குழாய்கள் அமுக்கப்படுகின்றன.இப்படி ரத்தக் குழாய்கள் அமுக்கப்படுவதால், அதன் உள்ளேயிருக்கும் வால்வுகளும் அமுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டு ஒழுங்காக வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது.
இதனால்தான் கர்ப்பிணிப் பெண்களின் காலிலுள்ள ரத்தக் குழாய்கள் வீங்கிப்போய் சுருண்டுகொண்டு, பாதிப்பை உண்டாக்குகிறது. ஆண்களுக்கு முட்டிக்குக் கீழே மட்டும்தான் கெண்டைக்கால் பகுதியில் இந்த ரத்தநாள வீக்க நோய் ஏற்படும். ஆனால், பெண்களுக்கு தொடையின் மேல் பகுதியிலிருந்தே, ரத்தக் குழாய்கள் சுருண்டு கொண்டிருக்கும். குழந்தை பிறந்த பிறகு,இந்த வீக்கம் சரியாகிவிடும்.ஒரு சிலருக்கு சரியாகாமலேயே நிரந்தரமாகிவிடும்.
இந்த நோய்க்கான அறிகுறியும் இருக்காது. பெரும்பாலும் ஆபத்தும் இருக்காது. ஆனால்,அசிங்கமாக இருக்கிறதே என்று சிலர்,ஆபரேஷன் செய்து அப்புறப்படுத்த முடியுமா? என்ற கோணத்தில் சிந்திப்பார்கள்.
இந்த நோய் முற்றிப்போய்விட்டால்,கால் பாத வீக்கம், கால் வீக்கம்,கால் வலி,தசைப்பிடிப்பு, கால் அரிப்பு,தோல் கருத்துப்போதல். கால்களில் அங்கங்கே கரும்புள்ளிகள், தோலின் நிறம் மாறிவிடுதல்,கால் கனமாக இருப்பது போன்ற உணர்வு, மன அழுத்தம் முதலியவை ஏற்படும்.
யார் யாருக்கு வரும்?
பரம்பரையாக வரலாம்.ஒரே குடும்பத்தில் நிறைய பேருக்கு வர வாய்ப்புண்டு. பிறவியிலேயே வரலாம்.அதாவது பிறக்கும்போதே ரத்தக் குழாய்களின் வால்வுகள் குறைபாட்டுடன் இருந்தால் இந்த நிலை ஏற்படும்.
இயற்கையாகவே ரத்தக் குழாய்களின் சுவர்கள் மிக மெல்லியதாக இருந்தால், பலகீனமாக இருந்தால்! நிறைய குழந்தைகள் பெற்ற பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும்.குண்டாக இருப்பவர்களும் இதனால் பாதிக்கப்படக்கூடும். உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கும் இந்தப் பாதிப்பு நேரலாம்.
டீ மாஸ்டர், ஆசிரியர்கள், போக்குவரத்து காவலர்கள், செக்யூரிட்டி வேலை பார்ப்பவர்கள், ஓட்டலில் வேலை செய்பவர்கள்… தொடர்ந்து நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு இந்த ரத்தநாள வீக்க நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
கையால் தொடையிலிருந்து பாதம் வரைக்கும் தடவிப் பார்த்துக் கண்டுபிடிக்கலாம்.
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் மூலம்,ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறதா? அல்லது,வேறு ஏதாவது அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்றும்,சிரை ரத்தக்குழாயில் உள்ள வால்வுகள் ஒழுங்காக மூடித் திறக்கிறதா? என்றும் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த நோய்க்கு சிகிச்சை கொடுப்பதற்கென்றே,சிறப்பு வேஸ்குலர் சர்ஜன்ஸ் இருக்கிறார்கள். இவர்களிடம் ஆரம்பக் கட்டத்திலேயே காண்பித்துக்கொண்டால் நோய் அதிகமாவதைத் தவிர்க்கலாம்.
சிகிச்சை வாய்ப்புகள்:
பழுதடைந்த ரத்தக் குழாயை மட்டும் அந்த இடத்தில் இருந்து உரித்து எடுத்து விடுவது ஒரு சிகிச்சை. சோடியம் டெட்ராடெஸில் சல்பேட் என்று சொல்லக்கூடிய ரசாயனப்பொருளை கால்களில் பழுதடைந்த ரத்தக்குழாய்க்குள் செலுத்தி,அந்த ரத்தக்குழாயை முழுமையாக மூடி விடலாம்.
பழுதடைந்த ரத்தக்குழாய்க்கு மேலே லேசர் கதிரைப் பாய்ச்சி அந்த ரத்தக்குழாயை அப்படியே சப்பையாக்கி விடுவார்கள். மிகச்சிறிய ரத்தக் குழாய்களுக்குத்தான் இந்த லேசர் சிகிச்சையைக் கொடுக்கமுடியும். பெரிய ரத்தக் குழாய்களுக்கு செய்யமுடியாது. இதிலுள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஊசி,மருந்து,கத்தி, ரத்தக் குழாயை வெட்டுவது,உரிப்பது போன்றவை எதுவும் கிடையாது.
மேலே கூறியதுபோக சில உணவுப் பொருட்களும், சில உணவுக் கட்டுப்பாடுகளும், ரத்தநாள வீக்க நோய் வராமல் தடுக்க மிகவும் உபயோகமாய் இருக்கின்றன.
இஷ்டத்துக்கு சாப்பிடாமல்,நமது உடலுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் கலோரி அளவுக்கு மட்டுமே உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது, ரத்தநாள வீக்க நோய் வராமல் தடுக்கும்.அதிக நார்ச்சத்துள்ள உணவாகப் பார்த்து சாப்பிடுவதும் இந்த நோயைத் தடுக்கும்.
பயோ ப்ளாவனாய்ட்ஸ் என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் பொருள்,எந்தெந்த உணவுப்பொருட்களில் அதிகமாக இருக்கிறதோ அதை சாப்பிடவேண்டும். மேலும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ, புரோட்டின் ஆகிய சத்துகள் அதிகமுள்ள உணவுகளாகப் பார்த்து சாப்பிடவேண்டும். மேற்கூறிய சத்துப்பொருட்கள் எல்லாமே ரத்தக் குழாய்களை உறுதியாக வைத்துக்கொள்வதற்கும், பழுதடைந்துள்ள, பாதிக்கப்பட்டுள்ள ரத்தக்குழாய்களை சரியாக்குவதற்கும், பலவீனமாக இருக்கும் ரத்தக் குழாயை, பலமானதாக ஆக்குவதற்கும் மிக உதவியாக இருக்கும்.
மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.தினசரி காய்கறி,பழங்களை அதே அளவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் வர வாய்ப்பு இல்லை.போதுமான அளவுக்கு தண்ணீர் குடிப்பதும் முக்கியம்.
ரத்தக்குழாய்கள் உறுதியாகவும் நன்றாக சுருங்கி விரிந்து கொடுப்பதாகவும் இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடாமல் சீராக உடம்பு முழுக்க ஓடிக்கொண்டிருக்கும்.இதற்கு துணையாக இருப்பது வைட்டமின் சி மற்றும் இ.
எல்லோருமே கால்களுக்கு சற்று அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் நடப்பது, கால்களில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்க உதவும்.ஒரு நாளைக்கு 20 நிமிடமாவது காலாற, காற்றாட உலாவுவது, கால்களின் ரத்த ஓட்டத்துக்கு தேவை. ஒரு நாளைக்கு சுமார் 10 நிமிடம் காலை மேலே தூக்கி வைத்திருப்பது காலுக்கு நல்லது. காலை மேலே தூக்கி வைப்பதால் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.குறிப்பாக ரத்தநாள வீக்க நோய் உள்ளவர்கள், மேற்கூறியவற்றைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
வில்லியம் ப்ரௌன் என்கிற ஆங்கிலேயர்,1848-ம் ஆண்டே ரத்தநாள வீக்க நோய் அதிகரிக்காமலிருக்க கால்களில் சாக்ஸ் அதாவது கம்ப்ரெஷன் ஸ்டாக்கிங்ஸ் உபயோகித்தார். ரத்தக்குழாய் சுருண்டுகொள்ளும் நோய், ஆரம்பகட்டத்தில் உள்ளவர்கள்,இந்த சாக்ஸை (காலுறை) போட்டுக்கொண்டால் பாதிப்பு அதிகமாகாது.
இந்த எலாஸ்டிக் காலுறைகளை டாக்டரின் ஆலோசனை பெறாமல் அணியக் கூடாது.கால் முட்டிக்குக் கீழே மட்டும் ரத்தக்குழாய் சுருட்டிக்கொண்டிருப்பவர்கள்,கால் முட்டிக்குக் கீழ்வரை அணியும் காலுறைகளை போட்டுக்கொள்ளலாம்.
முட்டிக்கு மேலே, தொடையிலும் ரத்தக்குழாய் சுருட்டிக்கொண்டிருப்பவர்கள், தொடையின் மேல்பகுதி வரைக்கும் உள்ள காலுறைகளை அணியலாம்.பகலில் மட்டும்தான் இவைகளை உபயோகிக்க வேண்டும்.இரவில் படுக்கப்போகும்போது கழற்றிவிட வேண்டும்.
40 வயதுக்கு மேலிருக்கும் ஆண், பெண் இருவருமே கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு, கைகளால், கால்களின் பின்பகுதி, தொடையின் பின்பகுதியை மெதுவாகத் தடவிப் பாருங்கள். ரத்தக்குழாய் சுருட்டிக்கொண்டிருப்பது உங்கள் கைகளில் பட்டால், உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்.இந்த நோய் வராமல் இருப்பதற்குரிய உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.

