
– ஆனந்த சிவா.
சமூகத்தின் ஆரோக்கியமோ, அவலமோ தனி மனித மூளையில் உருவானதுதான். அந்த தாக்கத்தின் காரணமாக சமூகம் மேன்மையோ பாதிப்போ அடைகிறது. காந்திஜி, நேதாஜி, அம்பேத்கர், பெரியார், பகத்சிங், லெனின், கார்க்கி, மாசேதுங், ஃபிடல் காஸட்ரோ, சே குவேரா, நெல்சன் மண்டேலா போன்றவர்களால் சமூகம் மேன்மை அடைகிறது. கோட்சே, ஹிட்லர் போன்றோர்களால் சமூகம் பாதிப்படைகிறது. இப்படி வரலாறு வாசித்த மனிதர்கள் ஏராளம்.
பூமியில் இருந்து ஆகாயம் வரை அனைத்தையும் அறிந்து கொள்ளும் அளப்பறிய ஆற்றல் உள்ளது மனித மூளை. சுமார் 10 லட்சம் ஜிபி பதிவுத்திறன் கொண்டது. 1 ஜிபியில் 300 பக்கங்கள் உளள சுமார் 3300 புத்தகங்களை பதியலாம்.
ஒருவனுக்கு வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது. ஆனால், ஒரு நாளைக்கு நூறு ரூபாய் கூட அவன் செலவு செய்வதில்லை. இப்படி ஒருவன் வாழ்ந்தால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை. அப்படித்தான் நாம் மூளையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய பள்ளிகளும், கல்லூரிகளும் மாணவர்களின் மூளையை மழுங்கடிக்கின்றன. பாடத்தை மட்டும் படி.. தேர்வுக்கு தேவையானதை மட்டும் படி என்று இளம் பருவத்திலேயே திணிக்கின்றன. நாமோ அதிலும் முக்கிய கேள்விகளை மட்டும் படித்துவிட்டு சுருங்கிப் போய்விடுகிறோம். மற்ற விஷயங்களைப் படித்தால் தேவையற்ற டென்ஷன், வெற்றி பெற முடியாது என்ற பொய்யையும் ஆழமாக விதைத்து விடுகின்றனர்.
விலங்குகள் குட்டி போட்ட உடனே குட்டி எழுந்து நிற்பதுடன், சரியாக மடியில் போய் பாலும் குடிக்கிறது..
பறவைகள் கண்டங்களைத்தாண்டி பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் பறந்து போய், மீன்கள் வாழும் நீர்நிலைகளில் தன் இனம் பெருக்கி, வளர்ந்த குஞ்சுகளுடன் மறுபடியும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புகின்றன..
பல கிலோ மீட்டர்கள் பறந்து சென்று பூக்களில் தேன் சேகரித்துவிட்டு மறுபடியும் தன் கூட்டுக்கு தேனிக்கள் சரியாக வந்து சேர்கின்றன..
கோழி முதல் அனைத்துப் பறவைகளும் முட்டைகளைத் தன் நெஞ்சாங்கூட்டுக்குள் வைத்து அடைகாத்து.. கூடுதலாகவோ குறைவாகவோ இல்லாமல் தேவையான அளவுக்கு வெப்பம் கொடுத்து குஞ்சு பொறித்து தன் இனத்தை விருத்தி செய்கின்றன..
பட்டாம் பூச்சிகள், பச்சோந்திகள், பூக்கள் என அனைத்தும், வண்ணங்களிலும், அச்சுமாறா வடிவமைப்புகளிலும் ஜாலம் காட்டி மயக்குகின்றன..
நாய்கள் தன் இனப்பெருக்க காலத்தில் கூட்டமாய் புணர்ந்து திரியும். ஒரு பெண் நாய்க்காக பல ஆண் நாய்கள் சண்டையிடும். இனத்துடன் இணை சேரும் எந்த விலங்குக்கும் சகோதர, சகோதரி பேதமில்லை.
அபூர்வம், ஆச்சர்யம், அசிங்கம் போன்றவை ஐந்தறிவு ஜீவராசிகளிடம் இருக்கக் காரணம், மரபணுவின் (ஜீன்) மாயாஜாலம். அவைகளுக்கென தீர்மானிக்கப்பட்ட செயல்கள் அனிச்சையாகவே நடைபெறுகின்றன. இயற்கை நிலைத்திருக்க இயற்கையே திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்ட முடிவு அது.
மனிதனுக்கும் மரபணு உண்டு. அத்துடன் ஆறாம் அறிவையும் மனிதன் பெற்றிருப்பது இயற்கை கொடுத்த பரிசு. விலங்கு, பறவை, புழு பூச்சி போன்றவைக்கும் மனிதனுக்குமான மலையாளவு வித்தியாசத்திற்கு காரணம் மூளைதான். ஐந்தறிவு ஜீவராசிகளைப் போல் இல்லாமல் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு மூளையை உபயோகிக்கப் பழ(க்)கியதுதான்.
இன்று தினமும் நடக்கும் காதல் மற்றும் கள்ளக்காதல் கொலைகள், ஆணவக் கொலைகள்.. எல்லாவற்றையும்விட குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள் ஏராளம். இவையெல்லாம் மனிதன் ஆறாம் அறிவை தொலைத்து, சிந்திக்க மறந்ததன் காரணமாக நடப்பவைகள்தான். ஆறாம் அறிவை தேறா அறிவாக்கியதன் வெளிப்பாடு.
நாயைப் போல அசிங்கமாக தெருக்களில் புணர்ந்தும், பறவைகளைப் போல ஆச்சர்யமாக கண்டம் தாண்டி பறந்து திரும்புவதும் மரபணுவின் ஜாலம். அதுதான் இயற்கையின் தர்மம். ஆனால், மனித மூளைக்கு அளப்பறிய ஆற்றலை இயற்கை கொடுக்க காரணம், மனிதன் பல செயல்க¬ளில் மரபணுவின் ஜாலங்களுக்கு கட்டுப்படாமல் அதை மீறி வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
அறிவை வளர்த்துக் கொண்டே இருக்கும் அளப்பறிய ஆற்றல் கொண்ட மூளைக்கு, புத்தகங்களால் மட்டுமே போதுமான தீனி போட முடியும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட பல நூறு புத்தகங்களை படித்தாலுமே கற்றது கையளவு, கல்லாதது உலகளவுதான். ஆனால், மனிதன் கைக்குள் அடங்கும் கைபேசியிலேயே (செல்போன்) எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள முடியும் என்ற அபத்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டான்.
மருத்துவம் முதல் கொண்டு, எந்தக் கருத்தையும் சொல்பவன் யார்? அவனுக்குத் தகுதி இருக்கிறதா என்று யோசிக்க முடிவதில்லை. கைபேசியில் இருக்கும் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். காரணம், புத்தகங்களைப் படிக்காதவன் மூளையால், எது சரி? எது தவறு? என்று சிந்திக்கத் தெரிவதில்லை.
நம் மூளைக்குள் பதிவாகி இருப்பதை வைத்துதான் மூளை எந்த ஒரு செயலிலும் முடிவுகளை எடுக்கும். உதாரணமாக, தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவனிடம் ஆங்கிலத்திலோ மற்ற மொழியிலோ பேசினால் புரியாது. புரியாத மூளைக்கு மொழி, கணிதம், அறிவியல், மருத்துவம் என எல்லாமே ஒன்றுதான். மூளைக்குள் பதிவாகாத எந்தக் கருத்தும் புரியாத கருத்து அல்லது தவறான கருத்து. அதுதான் மூளையின் இயல்பு. தனக்குத் தெரிந்ததை வைத்தே சரி, தவறு என்று முடிவு செய்து கொள்கிறது.
இனிமேலாவது கைபேசியை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள். கற்றுக்கொள்ள புத்தகங்களை கையில் எடுங்கள். இயற்கை மூளைக்கு அளித்திருக்கும் அளவில்லா ஆற்றலை பயன்படுத்தி, சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லையேல் ஜாதி, மதக் கலவரங்களோ, குழந்தைகள் மீதான பாலியல் கொடூரங்களோ, இயற்கை வளக் கொள்ளையோ.. இவை எல்லாமே கட்டுப்பாடு இல்லாமல் முடிவற்று தொடரலாம்.
(ஏப்ரல் 23 உலக புத்தக நாள்)

