கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்றை நடத்த வேண்டும் என்பதே நம் தலைவர்களின் ஆசை. ஆசைப்படுவதெல்லாம் கிடைப்பதில்லை. எனவே நம் நோக்கம், குறிக்கோள் அறநெறியே. அறச்செயல்களால் ஆகாதது ஏதுமில்லை. அஹிம்சையைப் போற்றினோம். ஜைன & பவுத்த மதங்கள் கொண்டிருந்த செல்வாக்கை நம் இலக்கியங்கள் கூறுகின்றன. ஐம்பெரும் காப்பியங்களும் அவற்றிற்குச் சான்று. ஆனால், மனிதனின் இயல்பான சுபாவம் இன்றும் மாறவில்லை. ஆறறிவு பெற்றிருந்தும் நம்மால் அன்பு செலுத்த முடியவில்லை. ஏதோ ஒருவிதத்தில் நம்மை நாமே பாகுபடுத்திக் கொண்டு விரோதம் பாராட்டி சண்டையிடுகிறோம். பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த போர்களை ஒப்பிடலாம். ஆனால் இன்றோ சாதி, மத வேறுபாடுகளால் நிகழும் கொடுமைகள் நம்மை கலங்க வைக்கிறது.

எவனோ ஒருவன் அல்லது ஒரு கூட்டம், இளைஞர்களின் மூளையைச் சலவை செய்து வெடிகுண்டுகளாக அவர்களை மாற்றி, ஒரு ரோபோ போல செயல்பட வைக்கிறாரகள். நம் நாடுகளிடையே உள்ள உட்பகைகளினால் பிறரைத் தூண்டிவிட்டுப் பேரழிவை உண்டாக்கி வருகிறோம். எந்த ஒரு அழிவாகட்டும், ஒரு சதி அமைப்பு, தான்தான் காரணம் என்று பகிரங்கமாகச் சொல்கிறது. அந்த பயங்கரவாதத்தை சிலரும் ஊக்கப்படுத்துகிறார்கள். அவனுக்கு எதிரி எனக்கு நண்பன் என்று கருதுகிறோம்.

பலி வாங்கும் உணர்வும், வெறி உணர்வும் மனிதனின் இயல்பு என்றே சிக்மண்ட் ப்ராய்டு கூறுகிறார். ‘இத்’ என்பதும் ‘தனடாஸ்’ என்பதும் மனிதனின் வெறித்தன்மை குணங்கள். இவற்றை மாற்றி ஆக்கபூர்வமான மனிதநேயத்தை பரப்புவது ஆன்றோர்களின் கடமை. இதனைக் குழந்தைப் பருவம் முதல் கற்பிக்க வேண்டும். ஆனால், நாம் போட்டியையும், பொறாமையையும் கற்பிக்கும் கல்வியையே போற்றுகிறோம். மாற வேண்டும்.

இந்த நிலைகளினால் நமக்கு மனச் சோர்வு, விரக்தி அல்லது மனநல பாதிப்பு ஏற்படுகிறது. வரம்புக்குட்பட்டு வாழ்தல் எனும் தத்துவங்கள் என்ன? ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் கிகி தத்துவத்தை கடைபிடிக்கலாம். அது இதுதான்:

ஓ கடவுளே
மாய்ந்து மாய்ந்து உழைத்தாலும்
மாற்றிட வியலாப் பொருட்களை
அப்படியே ஒப்புக் கொள்வதற்கு
அருள்வீர் பொறுமை எங்களுக்கு!
மாற்றுதற் குகந்த பொருட்களை
மாற்றிப் புதிதாய் பார்ப்பதற்கு
மாதேவா நீங்கள்தான் எனக்கு
மனோ தைரியம் தரவேண்டும்
மாற்றற் கரிய பொருட்களையும்
மாற்றக் கூடிய பொருட்களையும்
எளிதாய்ப் பிரித்து அறிவதற்கு
இறைவா! ஞானம் தந்துதவு!

அன்புடன்
– ஜி.ராஜமோகன்