டாக்டர் விஜய் கிஷோர் கொண்ட்ரெட்டி,
மூத்த ரோபோடிக் மூட்டு மாற்று மற்றும் ஆர்த்தோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை.

மாடிப்படிகளில் ஏறும்போது, நீண்ட நேரம் அமர்ந்திருந்த பிறகு எழுந்து நிற்கும்போது, குத்துக்காலிட்டு அமரும்போது, நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, விளையாடும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது முழங்காலில் வலி ஏற்படுகிறதா? காலையில் எழுந்தவுடன் முழங்கால் இறுக்கமாக இருப்பது போல உணர்கிறீர்களா? முழங்காலை மடக்கி நீட்டும்போது உராயும் சத்தம் அல்லது உணர்வு ஏற்படுகிறதா?

இவை அனைத்தும் முழங்கால் மூட்டுத் தேய்மானத்தின் (Knee Osteoarthritis) ஆரம்ப அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

முழங்கால் மூட்டுத் தேய்மானம் என்பது வயது முதிர்வின் தவிர்க்க முடியாத விளைவு என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது.ஆனால், தற்போது நாற்பது மற்றும் ஐம்பது வயதினரிடையே கூட இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் அதிகரித்துவருகிறது. நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை செய்வது, அதிக உடல் எடை, சரியான சிகிச்சை பெறாத விளையாட்டுக் காயங்கள்,சீரற்ற உடற்பயிற்சி பழக்கம் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாகும்.

முழங்கால் மூட்டில் உள்ள எலும்புகளின் முனைகளைப் பாதுகாக்கும் குருத்தெலும்பு (Cartilage)ஒரு மென்மையான பாதுகாப்புத் திண்டைப் போல செயல்படுகிறது. இந்தக் குருத்தெலும்பு மெதுவாக தேயத் தொடங்கும்போது, முழங்கால் மூட்டு இயற்கையாகவே அதிர்வுகளைத் தாங்கும் திறனை இழக்கிறது.இதன் விளைவாக வலி, வீக்கம்,இறுக்கம் மற்றும் நடப்பதிலும் அன்றாட இயக்கங்களிலும் சிரமம் ஏற்படுகிறது.

முழங்கால் வலி உள்ள அனைவரும் இறுதியில் முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. ஆனால்,உண்மை அதுவல்ல.

ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து சரியான சிகிச்சையைத் தொடங்கினால், பலரால் முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சையை பல ஆண்டுகள் தள்ளிப்போடவும், சிலரால் முற்றிலுமாகத் தவிர்க்கவும் முடியும்.

முழங்கால் மூட்டுத் தேய்மானம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.ஆரம்ப நிலையில் குருத்தெலும்பின் சேதம் குறைவாக இருக்கும். அறிகுறிகளும் அவ்வப்போது மட்டுமே தோன்றக்கூடும். ஆனால்,நோய் முற்றிய நிலையில் குருத்தெலும்பு கணிசமாக தேய்ந்து, தொடர்ந்து வலி, மூட்டு இறுக்கம் மற்றும் நடமாட்டக் குறைவு போன்ற பிரச்னைகள் உருவாகும்.

ஆரம்ப நிலையிலுள்ள நோயாளிகளுக்கு பொதுவாக வாழ்க்கைமுறை மாற்றங்கள், முழங்காலை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள், பிசியோதெரபி மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகள் ஆகியவையே முதற்கட்ட சிகிச்சையாக வழங்கப்படுகின்றன. இவற்றின் நோக்கம்,மூட்டின் மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து அதன் செயல்திறனை நீண்ட காலம் பாதுகாப்பதாகும்.

சிலருக்கு முழங்கால் ஆதரவுப் பட்டை(Knee Brace)அல்லது நடை உதவிக் கருவிகளைப் பயன்படுத்துவதும் மூட்டின் அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஊசி சிகிச்சைகளும் நல்ல பலன் அளிக்கின்றன. ஸ்டீராய்டு ஊசிகள் வீக்கத்தைக் குறைத்து, கடுமையான வலி அதிகரிக்கும் காலங்களில் தற்காலிக நிவாரணம் அளிக்கக்கூடும்.

Platelet-Rich Plasma (PRP) சிகிச்சையில், நோயாளியின் சொந்த ரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் தட்டணுக்களை (Platelets)அதிக செறிவுடன் மூட்டிற்குள் செலுத்துவதன் மூலம் அறிகுறிகளைக் குறைக்க முயற்சிக்கப்படுகிறது. அதேபோல், ஹயாலுரோனிக் அமிலம்(Hyaluronic Acid)அல்லது ஜெல் ஊசிகள் மூட்டில் இயற்கையான வழுவழுப்புத்தன்மையை அதிகரித்து, இயக்கத்தை எளிதாக்க உதவுகின்றன.

இந்தச் சிகிச்சைகளின் பலன்,நோயின் நிலை, நோயாளியின் உடல்நலம்,உடல் நிறை குறியீடு (BMI), உடல் செயல்பாட்டு அளவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

முழங்காலின் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டு, தசைநார்கள் ஆரோக்கியமாக இருக்கும் நடுத்தர அல்லது முற்றிய நிலையிலுள்ள சில நோயாளிகளுக்கு பகுதி முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை சிறந்த தேர்வாக அமையும்.

தேய்ந்துபோன ஒரு டயரை மட்டும் மாற்றுவது போல, பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் மாற்றி, ஆரோக்கியமான எலும்பு, குருத்தெலும்பு மற்றும் தசைநார்களை முடிந்தவரை பாதுகாப்பதே இந்த அறுவை சிகிச்சையின் நோக்கமாகும்.

மூட்டு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,முழு முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.இன்றைய நவீன அறுவை சிகிச்சை முறைகள் சிறந்த பலன்களை அளிக்கின்றன. மேம்பட்ட செயற்கை மூட்டு வடிவமைப்புகள், துல்லியமான அறுவைச் சிகிச்சை திட்டமிடல் மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவை அறுவை சிகிச்சையின் துல்லியத்தையும், நோயாளியின் விரைவான குணமடைவதையும் மேம்படுத்தியுள்ளன.

சிகிச்சை முறைகள் தொடர்ந்து முன்னேறி வந்தாலும்,நோயைத் தடுப்பதும், ஆரம்பத்திலேயே கண்டறிவதும் அதே அளவுக்கு முக்கியமானவை.

Health and Beauty