டாக்டர்.எஸ்.அமுதகுமார்.

ச்சானுக்காக ரத்தம் கொடுத்தேன், மாமாவுக்காக ரத்தம் கொடுத்தேன் என்று சொல்வதைவிட, ரத்ததானம் எதற்காக செய்கிறோம்  என்பதை ரத்ததானம் செய்யும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது மிகமிக அவசியம். அப்பொழுதுதான் நாம் எவ்வளவு பெரிய உன்னதமான பணியைச் செய்கிறோம் என்பது நமக்கும் தெரியவரும். நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் தெரியவரும்.

விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முடியாமல் போவதற்குக் காரணமே அந்ந நேரத்தில் எற்படும் பெருவாரியான ரத்த இழப்புதான். அவரது ரத்தவகை என்னவென்ற குறிப்பு அவரது கைவசம் இல்லாதது முக்கிய காரணமாக அந்த நேரத்தில் அமைந்துவிடுகிறது. ஒருவரின் ரத்தவகை என்ன என்பதை ஒவ்வொருவரும் தனது பாக்கெட்டில், ஏதாவதொரு வகையில் குறித்து வைப்பது அவசியம்.

இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படுகிற ரத்த சோகையைப் போக்க, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கடுமை

யான நோய்த்தொற்றுகள்,கடுமையான தீக்காயங்கள், கல்லீரல் செயலிழப்பு போன்ற காரணங்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா மாற்றம் செய்ய-இவ்வாறு பலவற்றிற்கும் யாரோ ஒருவர் தானமாக அளிக்கும் ரத்தம்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆக ஹோட்டல்களைவிட, கடைகளைவிட, வங்கிகளைவிட, 24மணி நேரமும் விழித்திருக்க வேண்டியது ரத்த வங்கி மட்டுமே. பல்வேறு ரத்த வகைகளும் 24 மணி நேரமும் தொடர்ந்து இருப்பு வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் ரத்த வங்கிக்கு உள்ளது. எனெனில் எந்த நேரத்தில், எந்த வகை ரத்தம் யாருக்குத் தேவைப்படும் என்று யாராலும் யூகிக்க முடியாது.

ஒருவர் ரத்தம் தானமாக கொடுக்கச் செல்லும்போது முதலில் அவருடைய மனது பூரண சம்மதம் சொல்லவேண்டும். அடுத்துதான் வயது,எடை அது இது எல்லாமே மனம் சம்மதித்துவிட்டால், உடலில் இருக்கும் மொத்த ரத்தத்தையும் கொடுக்கக்கூட, மனிதர்கள் தயாராகிவிடுவார்கள். ரத்தம் கொடுக்கப் போகும்போது, வயது சான்றிதழ் ஒரு கட்டாயமல்ல. ஆனால் வைத்திருப்பது அவசியம். காரணம், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ரத்தம் தானமாக வழங்க முடியும் என்று நடைமுறையில் இருக்கிறது. தற்போது இந்த வயதுக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு 17

வயதிலேயே கொடுக்கலாம் என்றும், பெற்றோரும், சூழ்நிலையும் சம்மதம்

அளித்தால், 16 வயது உள்ளவர்களிடம் கூட ரத்தம் எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்ததாக பார்க்கப்படுவது, தானம் அளிப்பவரின் உடல் எடை 49 கிலோவுக்கு 

 குறைவில்லாமல்  இருக்க வேண்டும். குறைந்த எடை உள்ளவர்களிடம் ரத்தம் பெறப்படுவதில்லை. ரத்த தானம் செய்வதற்கு முன்பாக அவர் தண்ணீர் நிறைய குடித்திருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. நன்கு சாப்பிட்டிருக்க வேண்டும். கொழுப்பு குறைவான உணவை ரத்ததானம் செய்வதற்கு முன்பு, எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். தளர்வான உடை அணிந்திருப்பதும் அவசியம். இவையெல்லாமே ரத்ததானம் செய்யப் போகிறவர் ஒரு சௌகரியமான சூழ்நிலையில் ரத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அரை லிட்டர் எடுக்க, சுமார் எட்டு அல்லது பத்து நிமிடம் பிடிக்கும். இவ்வாறு ரத்தம் எடுக்கும்போது, உட்கார்ந்த நிலையிலும் கொடுக்கலாம்;படுத்துக்கொண்டும் கொடுக்கலாம். 

ரத்தம் கொடுத்து முடித்த பிறகு, சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். அந்த நேரத்தில், ரத்ததானம் செய்தவருக்கு சிறிய சிற்றுண்டியும் ஏதாவதொரு பானமும் கொடுப்பார்கள். அதன் பிறகு,அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்.

ரத்தம் தானம் செய்யும் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.இது மிகச் சிறந்த மனிதநேய அறப்பணி.