ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை-7

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D.
உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (த), கோயம்புத்தூர்.

மது பாரம்பரிய சமையலில் கடுகு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது‌.3000 ஆண்டுகளுக்கும் மேலாக அறியப்பட்டது, நமக்கு பழக்கப்பட்டது.கடுகின் வகைகளைப் பற்றியும்,அரிய தகவல்களையும், மருத்துவ பயன்களையும் இந்த தொடரில்பார்க்கலாம்.

மூன்று முக்கிய வகையான கடுகுகள் உள்ளன.பொதுவாக பிராசிக்கா ஜங்ஷியா (Brassica Juncea) எனப்படும் அடர் பழுப்பு நிற கடுகை விதையாகவோ அல்லது எண்ணையாகவோ நாம் உணவில் அதிகமாக பயன்படுத்துவோம். இந்த கடுகில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு மட்டுமல்லாது உடல் நலத்திற்கான சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.ஆனால்,நாம் அதிகம் பயன்படுத்தாத கருப்பு கடுகும் உள்ளது.இது பிராசிக்கா நைக்ரா(Brassica Nigara) என்ற தாவரவியல் பெயரால் அறியப்படுகிறது. மிக முக்கியமாக நாம் இத்தொடரில் பார்க்க இருப்பது சிலாப்பிஸ் ஆல்பா அல்லது பிராசிக்கா ஆல்பா (Brassica alba) எனப்படும் வெண்கடுகு அல்லது மஞ்சள் கடுகு பற்றியே.

இந்த வெண்கடுகானது மத்தியதரைக்கடல் பகுதியான மெடிட்டிரேணியன் பகுதியில் தோன்றி, ஆசிய நாடுகளுக்கு பரவிய ஒரு வகையாகும்.இந்திய கடுகைப் போலவே எண்ணெய் சத்து அதிகம் கொண்டிருந்தாலும் இக்கடுகின் எண்ணெய் சற்றே கார நெடி உடையதாக உள்ளது.23 முதல் 25% சினால்பின், சினப்பின் சல்போசயனைடு, மியூசிலேஜ் என்னும் வழவழப்பான பசை பொருள்,லெசிதின் மற்றும் மைரோஸின் உள்ளது.இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் மிகுந்த தாவரவேதிப்பொருட்கள் ஆகும்.

அது மட்டுமல்லாது இவ்வெண்கடுகானது ஊட்டச்சத்துகளை மிகுதியாக உள்ளடக்கியுள்ளது.இதில் வைட்டமின் ஈ, அதிகம் உள்ளது.நம் உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துகளும்,ஆன்டி ஆக்சைடுகளும் நிறைந்துள்ளன. இதில் கால்சியம், மெக்னீசியம்,காப்பர், பொட்டாசியம், மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் ஜீரண மண்டலத்திற்கு ஏற்ற உணவாகவும் மருந்தாகவும் அமைகிறது. இத்தாவரத்தின் இலைகளும் மருந்து தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மிக அதிகமான மருத்துவ வேதிப்பொருட்களை கொண்டுள்ளதால் இவ்விலைகள் வீக்கம் மற்றும் அலர்ஜியை குணப்படுத்தும் நொதிகளை செல்லில் உருவாக்க உதவுகிறது.மேலும் செல்லில் உருவாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது.இதனால் இதயம் வலுப்பெற உதவும் முக்கிய உணவுப் பொருளாகவும் உள்ளது.பல்வேறு மருத்துவ முறைகளில் இவ்வகை கடுகின் விதை இருமல், நெஞ்சுவலி மற்றும் மூட்டு வலியை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

மைய அரைக்கப்பட்ட வெண்கடுகின் கூழானது தசை மற்றும் கட்டிகளில் ஏற்படும் வலியை போக்க தடவப்படுகிறது. சிறிய தீக்காயங்களுக்கு வெண்கடுகை அரைத்து தடவலாம். ஒரு டீஸ்பூன் அளவிலான கடுகு, தசை பிடிப்பு ஏற்படும் போது உள் மருந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆயுர்வேத மருத்துவ மூல நூலான “சரக்க சம்ஹிதாவிலும்” மஞ்சள் கடுகு பற்றிய குறிப்புகள் உள்ளன. மஞ்சள் கடுகில் உள்ள காரத்தன்மை மற்றும் வெப்பத்தன்மை காரணமாக ஜீரண மண்டல மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.மஞ்சள் கடுகில் இருந்து பெறப்படும் எண்ணெய் கபம் மற்றும் வாத தோஷங்களை சமன்படுத்துவதாகவும், ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதாகவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.பஞ்சகர்மா வைத்திய முறைகளில் உடலின் கழிவுகளை வெளியேற்றவும், உடல் ஆரோக்கியத்தை புதுப்பிக்கவும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.இந்த எண்ணெயானது காயங்களை குணப்படுத்தவும், உடலை உருவி விடும் மருத்துவ முறையிலும் (Massage), பயன்படுகிறது. மேலும் மூக்கில் சொட்டு மருந்தாகவும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

தோல் பகுதிகளில் ஏற்படும் அரிப்பு மற்றும் கொப்பளங்களை குணப்படுத்தவும் இந்த எண்ணெய் தடவப்படுகிறது. தைராய்டு சுரபிகளில் ஏற்படும் கட்டிகளுக்கும், நிணநீர்கட்டிகளுக்கும் (lymphadenitis) மேல் மருந்தாக மாவு கட்டு போல் பத்துக்கள் இடவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது. இடுப்பு வலி மற்றும் பாத வலியைப் போக்க கால்நனைப்பு மருந்து கலவையிலும் இந்த எண்ணெய் முக்கிய இடுபொருளாக உள்ளது.

நம்மில் பெரும்பாலானோருக்கு உள்ள கூந்தல் வறட்சி,முடி உதிர்தல், வறண்ட பொடுகுள்ள தலையின் தோல் பகுதி ஆகியவற்றுக்கு இயற்கையாகவே அமைந்துள்ள தீர்வாக மஞ்சள் கடுகின் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணையை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தல் மிக மென்மையானதாகவும்,ஈரத்தன்மை உடையதாகவும் இருக்கும்.

இந்த எண்ணையை முடியின் வேர் பகுதிகளில் தடவி வர ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வேர்க்கால்களை திடப்படுத்தும். பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பை வராமல் தடுக்கவும் உதவுகிறது.இந்த பயன்களை பெற மஞ்சள் கடுகு எண்ணெயை லேசான சூட்டில் தலையில் தடவ வேண்டும்.45 நிமிடங்கள் முதல்
ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருந்து மிதமான ஷாம்பு அல்லது சிகைக்காய் கொண்டு கழுவ வேண்டும்.தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெயுடன் சேர்த்து தடவி வர கூந்தல் உடைவது குறையும்.

பொதுவாக ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் தாவரம் சார்ந்த மருத்துவ பொருட்களை காய்ச்சி அல்லது சூடு படுத்தி மற்றும் வடிகட்டி பயன்படுத்தும் முறுச்சானா எனப்படும் எண்ணெயை மெர்க்குரியுடன் சேர்த்து பண்படுத்தும் முறை வெண்கடுகு எண்ணெய் பயன்படுத்துதலிலும் மிகவும் பயனுள்ளதாக அறியப்படுகிறது.

ஏனெனில் இம்முறையானது மருத்துவ பொருளின் தன்மையை மேம்படுத்தி, தேவையற்ற பொருட்களை அல்லது பண்பை அகற்றி சரியான மருத்துவ பொருட்களாக தயாரிக்கும் முறையாகும்.நாமும் வெண்கடுகு எண்ணெயை பயன்படுத்துகிற பொழுது மிதமாக சூடு படுத்தி பயன்படுத்தினால் அதன் சிறந்த மருத்துவ பயன்களை பெறலாம்.

நாம் அறிந்த பல தாவரங்களில் தாவரத்தின் ஏதாவது ஒரு பாகம் மட்டுமே மருத்துவத் தன்மை கொண்டதாக இருக்கும்.ஆனால், இந்த வெண்கடுகு தாவரத்தின் விதைகளைப் போன்று இதன் இலைகளும் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.இந்த மஞ்சள் கடுகு கீரையின் பெயர் சார்சன் (Sarson or Mustard Greens) அல்லது கடுகு கீரை ஆகும்.வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவை மிக அதிகமாக இக்கீரை வகையில் காணப்படுகிறது.

அதிக நார்ச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து கொண்டுள்ளபடியால் கண் பார்வையை மேம்படுத்தவும், இதயத்தை வலுப்பெறச் செய்யவும், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாகவும் உள்ளது.உடலின் செல்களை அழிவிலிருந்து மீட்பதற்கும் தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தன்மையையும் இக்கடுகின் கீரையானது நமக்கு தருகிறது.பீட்டா கரோட்டின் எனப்படும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பொருள் அதிகம் உள்ளதால் செல் சிதைவை தடுப்பதோடு, நாள்பட்ட நோய்களுக்கு ஆட்படும் தன்மையை குறைக்கவும் உதவுகிறது.

கீரையில் உள்ள வைட்டமின் ஏ,கண் பார்வையை மேம்படுத்துவதோடு, வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் கருவிழி படலத்தின் சிதைவையும் தடுக்கிறது. இக்கீரையின் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், இதய நோயை தடுக்கவும் உதவுகிறது.

இக்கீரையில் அதிகப்படியாக காணப்படும் வைட்டமின் சி உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் கிருமி தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. வைட்டமின் கே மற்றும் சுண்ணாம்பு சத்து உடல் எலும்புகளை வலுப்பெறச் செய்யவும், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சமயத்தில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை (Osteoporosis) தடுக்கவும் உதவுகிறது.மிக முக்கியமாக மஞ்சள் கடுகின் கீரையானது மூட்டுகளில் ஏற்படும் முடக்கு வாதத்தையும், அலர்ஜி,வீக்கம் போன்ற திசு சிதைவுகளையும் தடுக்க உதவுகிறது. மேலும் இதன் சிறப்பானது,குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோயை தடுக்க உதவுவதாகவும் அறிவியல் ரீதியாக அறியப்பட்டுள்ளது.

கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் கழிவுகளை வெளியேற்ற உதவுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இவ்விலைகள் அரைக்கப்பட்டு காயங்களின் மீது பற்றுப் போடவும் பயன்படுத்தப்படுகிறது.இருமல் மற்றும் தொண்டை வலிக்கு இந்த இலைகளை அரைத்து உள் மருந்தாக கொடுக்கப்படுகிறது.

இத்தனை மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய இந்தக் கீரையானது சமையலில் மிக எளிதாக பயன்படுத்தவும் ஏதுவானதாகும். கீரையாக சமைத்து உட்கொள்ளப்பட்டால் மிக எளிதாக இத்தனை மருத்துவ நன்மைகளையும் பெறலாம்.எனவே இந்த வெண்கடுகு/மஞ்சள் கடுகு தாவரத்தின் இலை மற்றும் விதைகள் “உணவே மருந்து” என்னும் நம் தமிழ் பண்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே விளங்குகிறது. இக்கடுகின் கீரையையும், விதைகளையும் மற்றும் எண்ணெய் பொருட்களையும் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோமாக.