
எஸ்.ஆர்.எம்.கல்வி குழுமம் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு முன்னோடியாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.கல்வி, மருத்துவத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளனர். தென்னிந்தியாவிலேயே புகழ்பெற்ற ஆய்வுக் கூடத்தை நிறுவி ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் இறங்கி அசத்தியுள்ளனர்.
சமீபகாலமாக சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். சர்க்கரை அளவை சரியாக பராமரிக்காமல் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிகளை ஆய்வகத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லும் திட்டத்தில் ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST), நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த தாங்கள் உருவாக்கி, அதற்காக காப்புரிமை பெற்ற மூலிகை மருந்தை இந்தியா முழுவதும் தயாரித்து விற்பனை செய்வதற்காக டாக்டர் ஸ்ரீவர்மாஸ் வெல்னஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது.
இந்த வாழ்நாள் ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.125 லட்சமாகும்.
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் டி. ஆர்.பாரிவேந்தர் தலைமையில் சென்னையில் இதற்கான விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன்,பதிவாளர் முனைவர் எஸ். பொன்னுசாமி, டாக்டர் ஸ்ரீவர்மாஸ் வெல்னஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஸ்ரீவர்மா, இயக்குநர் டாக்டர் ஹெனோக் மார்சியோ ஆகியோர் பங்கேற்றனர்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் இந்திய மருத்துவ முறைகள் நிறுவனத்தின் (IIISM) டீன் டாக்டர் சதீஷ் குமார், மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரால் இந்த மூலிகை தயாரிப்பு மருந்து உருவாக்கப்பட்டது. நீரிழிவை(சர்க்கரை நோய்) கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயலாற்றும் பல்வேறு மூலிகைகளின் கூட்டுச் சேர்க்கையாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சக்தியை இம்மருந்து வழங்குகிறது. நீரிழிவு நோயால் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை குறைத்து அந்த உறுப்புகளை பாதுகாப்பதும் இந்த சிகிச்சை மருந்தின் இலக்காகும்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் இதுவரை 1,171 காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்ததில், 1,107 வெளியிடப்பட்டுள்ளன மற்றும் 638 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.பெறப்பட்ட
காப்புரிமைகளின் விகிதம் 75% க்கும் அதிகம் என்பது இதன் சிறப்பை சுட்டிக்காட்டுகிறது. தொழில்துறையுடன் வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவது குறிக்கோளாகும்.
மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் புதிய சிந்தனைகளைச் சந்தைக்கு ஏற்ற தயாரிப்புகளாக மாற்ற உதவும் நேரடி ஆய்வகங்களை அமைப்பதன் வழியா தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் ஒரு முன்னோடி மையமாக உருவெடுப்பது இதன் நோக்கமாகவும், செயல்திட்டமாகவும் இருக்கிறது.
இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் பல்கலையின் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் பேசுகையில்:
“நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது டெல்லியில் நமது பாரம்பரிய மருத்துவத்திற்காக சில முயற்சிகளை மேற்கொண்டேன்.
பாராளுமன்றத்துக்கான மருத்துவமனையில் ஆயுர்வேத,சித்த மருந்துகளை வைக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தேன்.
ஆராய்ச்சியின் விளைவான கண்டுபிடிப்பு ஆய்வகத்தை விட்டு வெளியே வந்து, மக்களுக்குப் பயன்படும்போதுதான் உண்மையிலேயே வெற்றி பெறுகிறது. நமது ஆராய்ச்சியாளர்களும்,தொழில் நிறுவனங்களும் ஒரே இலக்கை நோக்கி முனைப்புடன் இணைந்து செயல்பட்டால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இந்த ஒப்பந்தமே சான்று, எஸ்ஆர்எம்-இல் நடைபெறும் ஒவ்வொரு சிறந்த ஆராய்ச்சியும் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
இந்திய மருத்துவ முறைகளில் நாங்கள் செய்துள்ள இந்தச் சாதனை அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு டாக்டர் சதீஷ் குமார் மற்றும் அவரது குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன். இந்த ஒப்பந்த செயல்முறையை தொடக்கம் முதல் இறுதி வரை சிறப்பாக வழிநடத்தி எஸ்ஆர்எம் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகத்திற்கு எனது நன்றிகள்” என்றார்.
இந்திய மருத்துவ முறைகள் நிறுவனத்தின் (IIISM) டீன் டாக்டர் சதீஷ் குமார் கூறுகையில்:
“வெறுமனே ஒரு மருந்து தயாரிப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல் மக்களின் அன்றாட
வாழ்க்கைக்குப் பயனுள்ள ஒரு மருத்துவ தீர்வை வழங்குவதே எங்கள் நோக்கமாக இருந்தது.நீரிழிவு நோய் காலப்போக்கில் முழு உடலையும் பாதிக்கக்கூடியது என்பதால்,இரத்த சர்க்கரையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல் நலனையும் காக்கும் மூலிகைகளின் கூட்டுச் சேர்க்கையில் நாங்கள் கவனம் செலுத்தினோம். இம்மருந்து மக்கள் பயன்பாட்டிற்காக, சந்தைப்படுத்தலுக்கான உரிமம் பெற்றிருப்பது எங்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும் பெருமையான தருணம். இப்பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகத்திற்கும் நன்றி” என்றார்.
டாக்டர் ஸ்ரீவர்மாஸ் வெல்னஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், டாக்டர்
ஸ்ரீவர்மா கூறுகையில்:
“எஸ்ஆர்எம் பல்கலையுடன் இணைந்து செயல்படுவதிலும், மிகுந்த கவனத்துடன் ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட இம்மருந்தின் தயாரிப்பு உரிமையைப் பெறுவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம். இம்மருந்து எவ்வளவு அக்கறையுடனும் தரத்துடனும் உருவாக்கப்பட்டதோ,அதே தரத்துடன் இதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எமது பொறுப்பாகும். இந்த ஒத்துழைப்பும், ஒப்பந்தமும் சுமுகமாக நடைபெற ஆதரவு வழங்கிய வேந்தர் டாக்டர் டி.ஆர், பாரிவேந்தர்,டாக்டர் சதீஷ் குமார் மற்றும் எஸ்ஆர்எம் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.நாங்கள் இணைந்து மேற்கொள்ளும் இப்பயணம் தொடர்ந்து நீடிப்பதுடன் சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்”, என்றார்.
எஸ்.ஆர்.எம். குழுமத்தின் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் வெற்றி பெற நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்!.
-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.

