கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார்,
MBBS,MCIP,PG.Dip.Diabetology,F.C.G.P.

உணவில் கலக்கப்படும் ரசாயனங்கள் மனித உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க, கவர்ச்சியான நிறம் பெற மற்றும் செயற்கையான சுவைக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள், குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இயற்கையாக, மெதுவாக பழுக்க வேண்டிய பழத்தை,
வேகமாக, செயற்கையாக, ரசாயனப் பொருட்களை உபயோகித்து பழுக்கவைக்கிறார்கள்.அப்படி கட்டாயமாக பழுக்கவைக்கப்படும் பழங்களில் ரசாயனப் பொருட்களின் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஏழு நாட்களில் இயற்கையாக பழுக்க வேண்டிய பழம்,இரண்டே நாட்களில் ரசாயனக் கல்லை வைத்து, செயற்கையாக பழுக்கவைக்கப்படுகிறது.அதை சாப்பிடும் நம்முடைய உடலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

பழங்களில் மட்டுமல்ல,நாம் உண்ணும் ஏராளமான பொருட்களில் ரசாயன கலப்பு இருக்கிறது. அதனால் பல்வேறு ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள், ரெடிமேட் உணவுகள், பேக் பண்ணப்பட்ட உணவுகள், நொடிகளில் தயாரிக்கப்படும் துரித உணவுகள் போன்று எல்லாவற்றிலும் நீக்கமற ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. இது கண்களுக்கு தெரியாத விஷயம் என்பதால் சாதாரணமாக கண்டுபிடிப்பது கடினம்.

BPA(BisphenolA) என்று சொல்லக்கூடிய ஒரு ரசாயனப் பொருள்.உணவுத் தயாரிப்புத் துறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் கேன்கள், பிளாஸ்டிக் பாட்டில்களின் உட்புறத்தில் பூசப்படுகிறது.BPA ரசாயனப் பொருள் பூசப்பட்ட பிளாஸ்டிக் பாத்திரங்களை தொடர்ந்து உபயோகித்து வந்தால்,மார்பக புற்றுநோய் வரக்கூடும் என்று ஆராய்ச்சி சொல்கிறது.

நண்பர் ஒருவருக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு,சிகிச்சை செய்து குணமாகிவிட்டார். அவர் என்னிடம், “வெற்றிலை,பாக்கு, புகையிலை,பீடி, சிகரெட்,மது போன்ற எந்தப் பொருளையும், எந்தக் காலத்திலும் உபயோகிக்காத எனக்கு எப்படி இந்த நோய் வந்தது?” என்று கேட்டார்.

அவரிடம் நான், உங்கள் மனைவியிடம், நல்ல முறுகலா தோசை கொடு என்று கேட்பீர்களா? என்று திருப்பிக்கேட்டேன். ஆமாம் என்றார். வெளியிடங்களில் குளிர்பானங்கள் குடிப்பீர்களா? என்றேன்.அதற்கும் ஆமாம் என்றார். உடலில் புற்றுநோயை உருவாக்க இதுவே போதுமே… என்றேன் நான்.

குளிர்பானங்களில் புற்றுநோயை உண்டுபண்ணக் கூடிய ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கலாம். முறுகலான தோசை தயாரிக்கும்போது, தோசையின் விளிம்பு கருகி தோசை மாவு, கார்பன் பொருளாக மாறிவிடும். தொடர்ந்து சாப்பிடும்போது அதுகூட புற்றுநோயை உருவாக்கலாம். எந்த ரசாயனப்பொருள், எந்த நோயை உண்டுபண்ணும் என்பதை யாராலும் துல்லியமாக கணிக்கமுடியாது.

நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதுதான் கெட்ட பாக்டீரியாக்கள், கெட்ட நோய்க்கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது. ஆனால், ரசாயனப்பொருட்களில் இருக்கும் அதிகப்படியான விஷத்தன்மை உணவு மூலம் உடலுக்குள் சென்று, படிப்படியாக நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். ஒருகட்டத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்புத் திறனே இல்லாமல் போய்விடும். அப்போதுதான் ஒருவர் நோயாளியாக மாறுகிறார்.

மனித உடலில் புதுப்புது செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். உணவில் இருக்கும் ரசாயனம் புதிய செல்களின் உருவாக்கத்தையும் குறைக்கும்.

உணவுப் பொருட்களை தயாரிக்கும்போது நேரடியாக ஒருபுறம் ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.மறுபுறம் உணவுப் பயிர்களின் மீது உபயோகப்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமாகவும், கோழி,வாத்து போன்ற பறவைப் பண்ணைகளில் உபயோகப்படுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மூலமாகவும், ஆடு, மாடுகளின் பண்ணைகளில் உபயோகப்படுத்தப்படும் ஹார்மோன் மருந்துகள் மூலமாகவும் மறைமுகமாக ரசாயன பயன்பாடு பரவுகிறது. இவையெல்லாமே கடைசியில் எப்படியாவது ஒரு வழியில் மனித உடலுக்குள்ளேதான் வந்து சேருகிறது. மேற்கூறியவைகளில் சில, புற்றுநோயை உண்டுபண்ணக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.

நமது மூதாதையர்கள் இந்த அளவுக்கு தீவிரமாக புற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகவில்லையே ஏன்?என்ற கேள்வி உங்களுக்குள் எழத்தான் செய்யும். அவர்கள் இயற்கையோடு ஒன்றி, இயற்கையான பொருட்களை உண்டு வாழ்ந்தார்கள், அந்தக் காலத்தில் உணவுகளில் இந்த அளவுக்கு ரசாயனம் கலக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அப்போது அரிதாக இருந்தது.

கண்ணைக் கவரவேண்டும் என்பதற்காக,கலர் கலராய் அப்போது உணவுகள் தயாரிக்கப்படவில்லை.வீதிக்கு பத்து ஃபாஸ்ட் புட் கடைகள் அப்போது இல்லை.கியாஸ் அடுப்பு கிடையாது. ரெடிமேட் மசாலாப் பொருட்கள் கிடையாது. ரசாயனம் தடவப்பட்ட சமையல் பாத்திரங்கள் கிடையாது. அவர்களுடைய உணவுமுறையும், சமையல் பண்ணும் விதமும் இயற்கையாக இருந்தது.மாடுகள் அதிகமாக வளர்க்கப்படும் பண்ணைகளில் எல்லாம்,மாடுகள் வேகமாக வளரவும் மாடுகள் அதிக அளவில் பால் சுரக்கவும்- செயற்கை ஹார்மோன்கள் அதிக அளவில் கொடுக்கப்படுகின்றன. அப்படியென்றால், அந்த மாடுகள் மூலம் கிடைக்கும் பாலிலும் ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் இருக்கும் என்றுதானே அர்த்தம்!

ஸ்டைரின் (Styrene) என்று அழைக்கப்படும் ஒரு ரசாயனப்பொருள், முட்டையை அடுக்கி வைக்கப் பயன்படும் தட்டுகளில் பூசப்படுகிறது. பருகியவுடன் தூக்கி எறியும் கப்புகள், பிளேட்கள், டம்ளர்களிலும் அது பூசப்படுகிறது.

ஓட்டல்கள், தள்ளுவண்டி கடை, தெருமுனை டிபன் கடை முதலியவைகளில் பார்சலுக்குப் பயன்படுத்தப்படும் பை,கப்,பேக் ஆகிய அனைத்திலுமே இந்த ஸ்டைரின் ரசாயனப் பொருள் பயன்பாடு இருக்க வாய்ப்பிருக்கிறது. ஸ்டைரின், விலங்குகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு புற்றுநோய்க் காரணி ஆகும். இது, மனிதர்களுக்கும் புற்றுநோயை உண்டாக்க ஒரு காரணியாக இருக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.

அன்னாசிப்பழம் அதிகம் விளையும் இடமான ஹவாய்த்தீவுகளில் ‘ஹெபட்டோகுளோர்’ என்ற ரசாயனப்பொருள் பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது.இந்த ரசாயனப் பொருள் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கிறதா? என்ற கோணத்தில் அங்கு ஆராய்ச்சி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

உலக அளவில் தடை செய்யப்பட்ட பல்வேறு பூச்சிக் கொல்லி மருந்துகள் இப்போதும் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, புற்றுநோயை உருவாக்கக்கூடியது.

பல நாடுகளில் ஆடு,மாடு,கோழி போன்றவைகள் வளர்க்கப்படுவதில்லை. வளர்க்கப்படுவதற்குண்டான வசதிகள் அங்கு கிடையாது. ஆகவே அந்த நாடுகள் வெளிநாடுகளிலிருந்து டன் டன்னாக இறைச்சி வகைகளை இறக்குமதி செய்து, நவீன குளிர்பதன அறைகளில் பல நாட்கள் வைத்திருந்து பாதுகாக்கிறது;பதப்படுத்துகிறது. வாரக்கணக்கில் கோல்டு ஸ்டோரேஜ் பெட்டிகளில் பதப்படுத்தி வைக்கப்பட்ட இறைச்சியை, மக்கள் வாங்குகிறார்கள். பின்பு அதை தங்கள் வீட்டு பிரிட்ஜ்களில் சில நாட்கள் வைத்துவிட்டு, தேவைக்கு எடுத்து அவ்வப்போது பயன்படுத்துகிறார்கள்.இது உடலுக்கு செய்யும் மிகப்பெரிய கெடுதி.

வாய், தொண்டையின் மேல்பகுதி, குரல்வளை, நெஞ்சுப்பகுதியிலுள்ள உணவுக்குழாய், நுரையீரல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய உறுப்புகளை நாம் சாப்பிடும் உணவிலுள்ள ரசாயனப்பொருட்கள் பாதித்து,அந்த பகுதிகளில் புற்றுநோயை உருவாக்குகிறது.

ரசாயனப் பொருட்கள் கலக்காத பழங்கள், காய்கனிகள், தானியங்கள், கீரைகள் முதலியன ஆர்கானிக் புட்ஸ் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உணவுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. முடிந்தவரை ரசாயனம் கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.அப்படி சாப்பிட்டால் நலமுடன் வாழ முடியும்.