முனைவர் மா.ஆ. தீபா,M.Sc,M.Phil, Ph.D.உதவிப் பேராசிரியர்,
தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி
(தன்னாட்சி), கோயம்புத்தூர்.

இயற்கை மருத்துவம், மூலிகைகள் நம் வாழ்வியலோடு ஒன்றியது மட்டுமல்ல நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்த வகையில் மிக அதிக அளவில் கடந்த சில வருடங்களாக பிரபலம் அடைந்து வரும் சியா விதைகளைப் பற்றியே இம்மாதம் அறியவிருக்கிறோம்.பல நேரங்களில் ஆயுர்வேத,சித்த மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் பல மூலிகைகளின் கூட்டான மருந்துகளில் மட்டுமே உள் ஈடாக பயன்படுத்தப்பட்டு வந்த பல விதைகள் இன்றைய நவீன உலகில் தனித்துவமான அல்லது தனித்து செயல்படும் மருத்துவ விதைகள், சமீபகாலமாக நம்மிடையே பிரபலமடைந்து வருகிறது.

இவை நமக்கு புதிய விதைகள் அல்ல. தற்காலத்தில் இவை தனி விதைகளாகவே மருத்துவப் பயன்பாட்டிற்கு பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. வலைதளங்களின் வாயிலாக பேசப்படுவதால் இவ்விதைகள் குறித்த பல தகவல்களும் எல்லா மக்களுக்கும் சென்றடைகிறது. எனினும் சரியான விதைகளை கண்டறிதல், சரியான அளவில் உட்கொள்ளுதல். சரியான முறைகளில் இவற்றைத் தயார் செய்து உட்கொள்ளும் விதம் இவையாவும் சரியாக சென்று சேர்வதில்லை என்பதாலேயே பல சமயங்களில்,உயிர் காக்கும் மருந்துகளும…
உயிர் போக்கிகளாக… மாறிவிடுவது வேதனையான செய்தி.

சால்வீனியா ஹிஸ்பிடா என்ற தாவரவியல் பெயரை தாங்கிய இம்மூலிகையை நன்றாக வளர்க்க வளமான மண், போதுமான நீர் இருத்தல் அவசியம். அதிகப்படியான நீரில் இதன் வேர்கள் வளர்வதில்லை. இத்தாவரம் புதினா தாவரத்தின் குடும்பமான லாமியேசி குடும்பத்தைச் சார்ந்ததாகும். மத்திய மற்றும் தெற்கு மெக்சிக்கோ மற்றும் கெளதமாலாவை பூர்வீகமாகக் கொண்டது.வருடம் ஒரு முறை மட்டுமே பூக்கும் மூலிகை இனமாகும்.ஒரு மீட்டர் அளவே வளரக்கூடிய இத்தாவரம் சிறிய நீலம்,ஊதா மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்களைக் கொண்டிருக்கும்.

புதினா தாவர குடும்ப தாவரங்களுக்கே உரிய அடர் நறுமணம் இதில் இருப்பதில்லை. மென்மையான நறுமணத்தை இத்தாவரம் கொண்டுள்ளது. எனினும் இதன் விதைகள் மருத்துவ ரீதியாக மிக பயனுடையதாக உள்ளது.

சியா விதைகள் சராசரியாக 2 .1 X 1.3X08.எம்.எம். முட்டைவடிவத்தில் தட்டையாக இருக்கும். பழுப்பு, சாம்பல்,கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். அதிகமாக நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை உடைய விதைகள் என்பதால் நீரில் சேர்த்தவுடன் அதிக நீரை உறிஞ்சி 12 மடங்கு அளவில் பெரிதாகும்.

நீரில் ஊற வைக்கப்பட்ட விதைகளின் வெளிப்புறத்தில் சவ்வு போன்ற மியூசிலேஜ் உருவாகிறது. இச்சவ்வானது ஜெல் போன்ற அமைப்பை விதைகளுக்கு கொடுக்கிறது. எனவே பழச்சாறுகளுடன் உட்கொள்ள ஏதுவாக அமைகிறது. மெக்சிகோ, அர்ஜென்டினா, பொலிவியா, மற்றும் யூக்டர் நாடுகளில் முதன்மையாக வளர்க்கப்படும் பயிராக உள்ளது. இந்நாடுகளிலிருந்தே உலகம் முழுக்க அனுப்பப்படுகிறது.இதற்குக் காரணம் அங்கு உள்ள சாதகமான இயற்கை சூழலே ஆகும்.

சியா தாவரம் அதீத குளிர் மற்றும் அதீத வெப்பமுடைய நாடுகளில் வளர்க்க உகந்த தாவரம் அல்ல.மேலும், ஆஸ்திரேலியா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளிலும், இத்தாலி,ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் சியா விதைகள் வளர்க்கப்படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கர்நாடகம்,மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. பயிரிடும் காலத்திலும், முளைக்கும் காலங்களிலும் அதீத குளிர் இல்லாத சூழலில் அதிக விதைகளை கொடுக்கிறது.
சியா விதைகளுக்கான வர்த்தகம் உலகம் முழுவதும் இருக்கிறது என்ற காரணத்தினால் விவசாயிகளின் விரும்பத்தக்க பயிராகவும் சியா மாறி வருகிறது.

பெண்களின் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிப்பதாக அறிவியல் ரீதியாக அறியப்படும் விதைகளில் சியாவும் இணைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 400 – 2500 அடி உயரம் வரை உள்ள இடங்களில் வளர்க்க ஏதுவான பயிராகும். மெக்சிகோ போன்ற நாடுகளில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகக் குறைவான அளவில்தான் விதைகள் உருவாகின்றன. எனினும் நம் நாட்டின் சீதோசன நிலைகளில் வளரும் விதைகள், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்த ஏதுவாக உள்ளன.

சியா விதைகள் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும்.இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவும். இவ்விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. அவற்றில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ஏ.எல்.ஏ)உள்ளது, இது ஒமேகா -3 கொழுப்பு அமிலமாகும்.

இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.சியா விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளன.இதனால் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குவதே பல்வேறு விதமான நோய்களிலிருந்தும் காக்கும்.முடக்கு வாதம்,கேன்சர்,பாத எரிச்சல் என பல்வேறு நோய்களுக்கும் ப்ரீராடிக்கல்களே காரணமாகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் அவை உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்க் கிருமிகளிடம் போராட உதவுகின்றன என்பதால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் போக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களின்முக்கிய உணவு தேர்வாக இருப்பதும் சியா விதைகளே. ஏனெனில், இவற்றில் அதிக நார்ச்சத்தும் புரதமும் உள்ளடங்கியிருப்பதால் பசி இன்மையை உண்டாக்குகிறது. அதனாலேயே உடல் எடையை குறைக்கவும் உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும்,பல்வேறு விதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சியா விதைகளில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் மிக அதிக அளவில் நிறைந்துள்ளது.

எனவே,வலுவான எலும்புகளை பராமரிக்கவும் உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் அதிகப்படியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கால்சிய குறைபாட்டினால் ஏற்படும் பல்வேறு நோய்களையும் நாம் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு எலும்பு சரியான அடர்வு இல்லாத பொழுது வளர்ச்சி குன்றி கால்கள் மற்றும் கை எலும்புகள் வளைந்து காணப்படும். பெண்கள், ஆண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைவு ஏற்படுவதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களும் ஏற்படுகிறது. சியா போன்ற கால்சியம் சத்துகள் நிறைந்த விதைகளை, ஊட்ட மருந்துகளுக்கு ஒரு மாற்றாக ஊட்ட உணவாகவே எடுத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளையும் உள்ளடக்கிய சியா விதைகளை நாம் உண்பது மிகவும் நல்லது.

நீரில் ஊற வைத்து ஜெல்லி போன்ற ஊறிய விதைகளை பழச்சாறு மற்றும் நீருடன் சேர்த்து பருகலாம்.அல்லது புட்டிங் தயாரிப்புகளில் பயன்படுத்தலாம். லேசாக வறுக்கப்பட்ட சியா விதைகள் பிற உணவு வகைகளிலும், சப்பாத்தி,தோசை, ரொட்டி போன்றவற்றிலும் மேலே தூவி உட்கொள்ளலாம். பாதாம்,மக்கானா, முந்திரி,வெள்ளரி விதைகள்,மற்றும் பூசணி விதைகளுடன் சேர்த்து பொடியாக்கி பாலுடன் கலந்தும் உட்கொள்ளலாம். இரவில் பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது நல்ல உறக்கத்தை தருகிறது. இத்தகைய பல நன்மைகளையும்செய்யும் சியா விதைகளை உங்கள் உணவில் சேர்ப்பது சத்தான ஊக்கத்தை வழங்கும்‌.
ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு பங்களிக்கும்.