முன்னொரு காலத்தில் அரசியல் என்பது ஆரோக்கியமான பொதுச்சேவையை மையமாகக் கொண்டிருந்தது. நாளடைவில் இந்த சொல்லின் பொருள் எதிர்மறையானதாக & சிண்டு முடித்து விடுவது & சாணக்கியத்தனம் செய்வது & உறவாடிக் கெடுப்பது & உட்பகையை வளர்ப்பது என்ற அர்த்தத்தில்தான் பேசப்படுகிறது. அரசியலும் வணிகமாக, தொழிலாக மாறிவிட்டது. நேர்மையானவர்களால், பணவசதி இல்லாதவர்களால் செயல்பட முடியாது என்றாகிவிட்டது. ஆள்பலம் (அடியாட்கள்), பணபலம் இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும். அல்லது ஒரு பின்னணி இருந்தால் மட்டுமே இயலும் என்றாகிவிட்டது.

முன்பு மேல் சபை, கீழ் சபை என்று இரண்டு இருந்தது. மேல் சபையை மூத்தோர்  சபை என்பார்கள். அதில் அறிஞர்கள், அனுபவசாலிகள், துறை வல்லுநர்கள் இருப்பார்கள். அது பின் வழியாக இருப்பதாகக் கூறி கலைத்து விட்டனர். அதனைத் திரும்ப கொண்டு வர வேண்டும். அதற்கு பலமுள்ள கட்சியும், சட்டசபையில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களும் இருக்க வேண்டும். அண்ணா ஆட்சி அமைத்தவுடன் மூதறிஞர் ராஜாஜியை சந்தித்தார்.

ஆட்சி சிறப்பானதாக நேர்மையானதாக இருக்க கரை வேட்டிக்காரர்களைக் கோட்டை நடைபாதைகளில் விடாமல் இருந்தால் போதும் என்று அறிவுறுத்தினார். ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். எதிர்கட்சி என்பது எதிரி கட்சி என எண்ணலாகாது. நல்ல கருத்துக்களை கூறுவோர், நல்ல ஆலோசனைகளைச் சொல்வோர் ஆகியோரை அணைத்துச் செல்ல வேண்டும். நல்லதை செய்யாதவர்கள் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் கெட்டு நாசமாவார்கள் என்கிறது வள்ளுவம். அரசியலை பிழைப்பாக கொண்டவர்களை அறமே காலனாக, எமனாக மாறி அழித்திடும் என்கிறது சிலம்பு.

எனவே மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்காது எல்லோர்க்கும் நல்லவர்களாக இருக்கக் கூடியவர்களே நல்ல ஆட்சியாளர்கள். நல்ல பேச்சாளர், நல்ல நிபுணர், படித்தவர், பண்பாளர் என்று மக்கள் எண்ணியவர்கள் எல்லாம் இன்று குற்றவாளிகளாக கருதப்படும் நிலை சான்றோர் மனதை வேதனையடையச் செய்கிறது. அரசியல் என்பது ஒரு பொதுசேவை. தொழில் அல்ல. அதனை வைத்துப் பிழைப்போர் கேவலமானவர்கள் என்றே கருதப்படுவார்கள்.

முறை செய்து காப்பாற்றும் ‘அமைச்சர்’ மக்கட்கு
சிறைசென்று வைக்கப் படும்.

அன்புடன்

– ஜி.ராஜமோகன்