அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காற்றைடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, புகையிலை போடும்போது, தண்ணீர் குடிக்கும்போது எனப் பல செயல்களில் நம்மை அறியாமலேயே சிறிதளவு காற்றையும் விழுங்கி விடுகிறோம். இந்தக் காற்று இரைப்பையிலிருந்து வெளியேறுவதற்கு இயற்கை ஏற்படுத்தியிருக்கும் எளிய வழிதான் ஏப்பம்.
 
உணவுடன் விழுங்கப்பட்ட காற்று குறைவாக இருந்தால், இரைப்பையில் செரிக்கப்பட்ட உணவுடன் குடலுக்குச் சென்று வாயுவாக பிரிந்துவிடும். அளவு அதிகமானால் இரைப்பை சிரமப்படும்.
 
அப்போது வயிறு, நெஞ்சு ஆகிய இடங்களில் உள்ள தசைகள் ஒன்றுகூடி ஒத்துழைத்து, இரைப்பையை மேல்நோக்கி அழுத்தி, உணவுக்குழாயின் இரண்டு கதவுகளையும் திறக்க வைத்து, ஒரு பெரிய சத்தத்துடன் இரைப்பையில் உள்ள காற்றை வாய்வழியாக வெளியேற்றும். இதுதான் ஏப்பம். உணவு எதிர்க்களிப்பதும் வாந்தி வருவதும் இவ்வாறேதான் நிகழ்கிறது. குதிரை, எலி, முயல், சீமைப் பெருச்சாளி போன்றவை வாந்தி
எடுப்பதில்லை!