சென்னை, மேடவாக்கம் அருகில் இயங்கி வரும் ஃபோர்ட்டிஸ் ஹெல் கேரின் ஒரு அங்கமான கிளெனீகல்ஸ் மருத்துவமனை, ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு (49 வயது) மூளையைப் பாதிக்கும் அரிய வகை லிப்போமா(CNS Lymphoma) புற்றுநோயை குணப்படுத்தி சாதனை செய்துள்ளனர்.

கார் டி செல் தெரபி சிகிச்சை (CAR -T cell therapy) மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண்ரமணன் சிகிச்சை விவரங்களை விளக்கி கூறினார்.

தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்றல், நடப்பதில் சிரமம், இடது கை, கால்களில் பலவீனம் போன்ற புகார்களுடன் அந்த நோயாளி மருத்துவமனைக்கு வந்தார். விரிவான பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு ‘பிரைமரி சென்ட்ரல் நெர்வஸ் சிஸ்டம் லிம்போமா’ (PCNSL) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இது மூளையைத் தாக்கும் ஒரு அரிய வகை லிம்போமா புற்றுநோயாகும். இதற்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமானது.

முதல்கட்ட சிகிச்சையான ‘ஹை-டோஸ் கீமோதெரபி’ (High-dose chemotherapy) அவருக்கு முதலில் வழங்கப்பட்டது. இருப்பினும்,நான்கு கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் நோய் தொடர்ந்து தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து,அவர் கீமோதெரபியுடன் கூடிய ரேடியோதெரபி மற்றும் அடுத்தகட்ட சிகிச்சைக்குத் தயாராவதற்கான ‘ஓரல் டார்கெட்டட் தெரபி’ (Oral targeted therapy) ஆகிய சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த லிம்போமா புற்றுநோய் வழக்கமான சிகிச்சைகளுக்குக் கட்டுப்படாததால், அவரது குடும்பத்தினருடன் மேம்பட்ட விருப்பங்களைப் பற்றி விவாதித்து, இந்தியாவின் உள்நாட்டு CAR-T செல் சிகிச்சையான நெக்ஸ்கார்19 (NexCAR19 Talicabtagene Autoleucel) சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தோம்.

நோயாளிக்கு CAR-T செல் சிகிச்சை அளிப்பதற்காக, ‘லியூகாபெரெசிஸ்’ (Leukapheresis) எனப்படும் ஒரு சிறப்பு செயல்முறை மூலம் அவரது உடலில் இருந்து நோய் எதிர்ப்புச் செல்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர்,அந்த செல்கள் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் அவரது உடலுக்குள் செலுத்தப்பட்டன.

இந்த சிகிச்சையைத் தொடர்ந்து, நோயாளிக்கு CAR-T செல் சிகிச்சையுடன் தொடர்புடைய சில கடுமையான, ஆனால் ஏற்கனவே அறியப்பட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டன.இதில் கடுமையான அழற்சி எதிர்வினையான ‘சைட்டோகைன் ரிலீஸ் சிண்ட்ரோம்’ (CRS) மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அரிய பாதிப்பான ‘இம்யூன் எஃபெக்டர் செல்-அசோசியேட்டட் ஹீமோபாகோசைடிக் சிண்ட்ரோம்’ (IEC-HS) ஆகியவையும் அடங்கும்.மேலும், கடுமையான தொற்றுகள் மற்றும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததால் அவரது உடல் நலம் தேறுவதில் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட்டன.

இருப்பினும், மருத்துவப் புற்றுநோயியல் (Medical Oncology), ரத்தவியல் (Haematology), தொற்று நோய்கள் (Infectious Diseases),  தீவிர சிகிச்சை (Intensive Care)ஆகிய துறைகளின் நிபுணர்கள் மற்றும் பிரத்யேக CAR-T செவிலியர் குழுவை உள்ளடக்கிய ஒரு பன்முக மருத்துவக் குழு, சிகிச்சையின் போது நோயாளியை மிக நெருக்கமாகக் கண்காணித்து தீவிரமாகப் பராமரித்தது. சுமார் ஒரு மாத கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்… என்று மகிழ்ச்சியாகக் கூறினார் டாக்டர் அருண்ரமணன்.

உலகையே அச்சுறுத்தி வரும் புற்றுநோயை குணப்படுத்தி சாதனை செய்துள்ள மருத்துவ குழுவுக்கு நமது இதழ் சார்பில் பாராட்டி வாழ்த்துகிறோம்.

நமது வாழ்வியல் முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.மனித சமுதாயம் புற்றுநோயை எதிர்த்து போராட தயாராக வேண்டும்.

-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.