
-டாக்டர்.பி.அருண், சித்த மருத்துவர்.
உணவு விடுதிக்குச் செல்லும்போது என்னமாதிரியான உணவுகளை கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவரவர் வயதை சொல்ல முடியும்.இளம் தலைமுறையினரின் விருப்பம், எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக இருக்கும்.சத்தான உணவா…நாக்கு ருசிக்காகவா என்று எளிதாக பிரித்து அறிய முடியும்.
இளம் வயதினர் சாண்ட்விச்,ஷவர்மா, கிரில்டு சிக்கன், தந்தூரி,ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ்,கட்லெட்… என எந்த உணவைச் சாப்பிட்டாலும், கூடவே இலவச இணைப்பாக, தக்காளி சாஸ்,ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சாஸ், மயோனைஸ் எனப் பலவகை சாஸ்கள் கொடுக்கப்படுகின்றன.அவற்றை ஒருமுறை சாப்பிட்டால்,மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். உணவுக்கு சாஸ் தொட்டுக் கொள்பவர்களைவிட, சாஸுக்காக உணவைச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.
மயோனைஸின் முக்கிய மூலப் பொருள்கள் முட்டையின் மஞ்சள் கரு,எலுமிச்சைச் சாறு,வினிகர்,உப்பு, எண்ணெய் ஆகியவையே. கூடவே சிறிதளவு மிளகு,பூண்டு சேர்க்கப்படுகிறது. பல்வேறு பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்டாலும் அதில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன.
உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கான கொழுப்பு, உப்பு ஆகியவையே அதிகம் காணப்படுகின்றன. அனைத்து சாஸ்களிலும் எண்ணெய், சர்க்கரை,(புளிப்புச் சுவைக்காக) வினிகர். நீண்ட நாள்கள் கெடாமல் இருப்பதற்காகப் பதப்படுத்தும் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் சுவையைத் தவிர வேறு எந்தச் சத்துகளும் இல்லை. அதிக கலோரி கொண்டவை. அதனால் உடல் பருமன் பிரச்னை ஏற்படும். தினந்தோறும் சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணில் தொடங்கி புற்றுநோய்வரை தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். அதனால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது.
நம் மரபுக்கு ஒவ்வாத இத்தகைய உணவுகளைத் தவிர்த்து விட்டு,நம் பாரம்பரிய துணை உணவுகளான வற்றல்,துவையல், அப்பளம்,ஊறுகாய் உள்ளிட்டவற்றை முறையாகத் தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.அதனால், பல நோய்கள் அணுகாமல் நலமோடு வாழமுடியும்.

