ஆனந்த சிவா

 மீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றில், இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மட்டும், 1,53,.052 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது..! (2016-ல் – 1,31,008 / 2017-ல் – 1,29,887 / 2018-ல் – 1,34,516 / 2019-ல் – 1,39,123 பேர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்).

தமிழ் நாட்டில் மட்டும் 16,883 தற்கொலைகள்..! அதிக அளவில் தற்கொலைகள் நடக்கும் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது… குடும்பப் பிரச்னைகள், வேலையின்மையால் போதிய வருமானம் கிடைக்காமல் போவது, உடல்நல பாதிப்பு என பல்வேறு காரணங்களால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது… கல்வியறிவு, பொருளாதார முன்னேற்றம் போன்று முக்கியமானவற்றில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட பெருமளவு மேம்பட்டிருந்தாலும், இப்படிப்பட்ட மோசமான சில நிகழ்வுகள் தொடர்வது என்பது கவலையளிக்கக் கூடிய ஒன்றுதான்…

ஒரு அறிவியல் உண்மையை இங்கே சொல்லியாக வேண்டும்… தற்கொலை எண்ணம் என்பதெல்லாம் நம் மூளைக்குள் இயற்கையாக இருப்பதில்லை… பிறக்கும் குழந்தையின் மூளைக்குள் எதுவும் இருப்பதில்லை… குழந்தை வளரவளரத்தான் மூளை செயல்பட ஆரம்பித்து, கற்றுக்கொள்கிறது. நாமும் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கிறோம்… கல்வி கற்பதைப்போல, கலைகளைக் கற்பதைப்போல, தற்கொலை பற்றிய விஷயங்களும் கற்றுக்கொள்பவைதான், கற்றுக்கொடுக்கப் படுபவைதான்..!

கல்வி, கலை, திருட்டு, பொய் என எதுவாயிருந்தாலும், ஒரு குழந்தை தாமாகவே கற்றுக்கொண்டாலும் சரி, அல்லது நாம் கற்றுக்கொடுத்தாலும் சரி, அதற்கு முழுமையான காரணம் நாம்தான்… இந்தச் சமூகம்தான்… அதைப்போல, இயலாமையின்போது தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஒரு மாணவிக்கோ, மாணவனுக்கோ உருவாவதற்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்..! ஒரு குழந்தை நல்ல குணங்களுடன் வளர்ந்தாலும், தீய குணங்களுடன் வளர்ந்தாலும் இரண்டிற்குமே பொறுப்பானவர்கள் நாம்தானே தவிர அந்தக் குழந்தையல்ல..! குழந்தை என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்பதை நாம்தான் முடிவு செய்கிறோம்… ஒரு குழந்தை முடிவெடுப்பதில்லை…

மாணவி, மாணவனின் மூளைக்குள் தற்கொலை எண்ணம் ஏதோ ஒரு வழியில் பதிவாகி, பதின்வயதிற்குள் மரணத்தைத் தழுவினால், அதன் மரணத்திற்கு மொத்த சமூகமும்தான் பொறுப்பேற்கவேண்டும்..! இதில், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கூடுதல் பங்குண்டு என்பதையும் நாம் மறுக்க முடியாது…  

பன்னிரெண்டு வருட படிப்பும் எதற்கு..?

இங்கு நான் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறேன்… இதுவரையில் ‘’நீட்’’ தேர்வைக் கொண்டுவந்த காரணத்தால் மட்டுமே பதினைந்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகளின் உயிர்கள் பலிவாங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்…

இவர்கள் மருத்துவராகும் கனவுகளுடன் பள்ளிக்குச் சென்று நன்றாகவே படித்தவர்கள்… படிப்பறிவு இல்லாதவர்கள் இல்லை… குறிப்பாக, அனைத்து மாணவர்களும் குறைந்தபட்சம் பன்னிரெண்டு வருடங்கள் பள்ளியில் படித்தவர்கள்… இங்கேதான் நான் அந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்…

பன்னிரெண்டு வருடங்கள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றும் அவர்களிடம் ஏன் தன்நம்பிக்கை உண்டாகவில்லை..? ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..? தற்கொலை சிந்தனை ஏதோவொரு வகையில் ஏற்பட்டிருந்தாலும், அப்படிச் செய்துகொள்வது கோழைத்தனம், தவறு என்கிற புரிதல் ஏன் இல்லாமல் போயிற்று..? அத்தனை வருடம் படித்தும் தன்நம்பிக்கை ஏன் உண்டாகவில்லை..? அந்த நம்பிக்கையை ஏன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்களுக்குக் கற்பிக்கவில்லை..?

பொதுவாக, பள்ளிக்குப் படிக்கவரும் மாணவ, மாணவிகள் தங்களுக்கென எந்தவொரு தனித்த சிந்தனையையும் ஆரம்பத்தில் பெற்றிருப்பதில்லை… ஏறக்குறைய அவர்கள் ஒரு வெற்றுக் காகிதமாகத்தான் பள்ளிக்குப் படிக்க வந்துசேர்கிறார்கள்… பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள்தான் அந்த வெற்றுக்காகிதத்தில் எழுதி நிரப்புகிறார்கள் என்று சொல்லலாம்… அந்தக் காகிதத்தில் தற்கொலை எண்ணம் எப்படிப் பதியப்படுகிறது..? ஒரு மாணவனுக்கு அல்லது மாணவிக்கு எத்தனையோ விஷயங்கள் தாமாகவே தெரிவதைப்போல, தற்கொலை பற்றிய செய்திகளும் தாமாகத் தெரியவந்திருக்கலாம்… ஆனால், அது ஒரு தவறான செயல், எந்தச் சிக்கலாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு வாழவேண்டும் என்கிற புரிதல் ஏற்படாமல் போவது ஏன்..?

இன்றையச் சூழலில், பெற்றோரையும் மற்றவரையும்விட ஆசிரியர்களுடன்தான் குழந்தைகள் அதிகநேரம் இருக்கிறார்கள்… ஆசிரியர்கள்தான் வெற்றுக் காகிதமாக இருக்கும் குழந்தைகள் மூளையில் அதிகமான விஷயங்களைப் பதிவு செய்கிறார்கள்… அதற்காக, எல்லாவற்றையும் அவர்கள் மட்டுமே எழுதுகிறார்கள் என்று ஆசிரியர்களை பொறுப்பாக்கி, பெற்றோர்களை ஒதுக்கிவிட முடியாது… தங்கள் குழந்தையின் வளர்ச்சி மீது, குறிப்பாக சிந்தனை, அறிவு வளர்ச்சியின் மீது, பெற்றோருக்கு தனித்த அக்கறை இருக்கவேண்டும்… தனித்த கவனம் எப்பொழுதும் இருக்கவேண்டும்… அந்தக் குழந்தைக்குக் கொடுக்கவேண்டிய அனைத்து உரிமைகளையும் சுதந்திரத்தையும் கொடுக்கவேண்டும்… அதே சமயத்தில், குழந்தை மீதான கவனம் மிகவும் முக்கியம்..!

குழந்தை என்ற அந்த வெற்றுக் காகிதத்தில் எதை வேண்டுமானாலும் எழுதலாம்… அந்தப் பிஞ்சு உள்ளத்தில், எதையும் சுலபமாகப் பதியவைத்துவிடவும் முடியும்… அப்படியிருக்கையில் அவர்களிடம் ஏன் தன்நம்பிக்கையை மட்டும் வேரூன்ற வைக்கமுடியாமல் போகிறது..? தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு, அரசியல், கணிப்பொறி என அனைத்தும் மாணவ, மாணவிகள் கற்றுக்கொள்வதுதான்… அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களால், ஏன் தன்நம்பிக்கையை மட்டும் கற்றுக்கொடுக்க முடியாது..?

பாலியல் கொடுமைகள்..!

நீட் தேர்வு போன்று, கல்வி சம்பந்தபட்ட காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளைப் போலவே, பாலியல் கொடுமைகள் காரணமாக அதிகமான தற்கொலைகள் நிகழ்வதும் வாடிக்கையாக ஆகும் அவலம் நிகழ்ந்து வருவது ஆபத்தானது..!

தேர்வில், தான் தோல்வியடைந்து விடுவோமோ? தான் விரும்பியதைப் படிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தில், எவ்விதப் புரிதலுமின்றி, நம்பிக்கை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் பரிதாப நிலை ஒரு பக்கம்… ஒரு சிறுமி எந்தத்தவறும் செய்யாதபோது, தன்னைத் தவறாக ஆண்கள் பயன்படுத்திக் கொண்டுவிட்ட நிலையில், தவறு செய்த அவர்கள் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், மகிழ்ச்சியாக இந்தச் சமூகத்தில் வாழ்கிறார்கள்… ஆனால், எந்தத்தவறும் செய்யாமல், பாதிப்புக்கு உள்ளான சிறுமி மட்டும் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் நிகழ்வது ஏன்..? தவறே செய்யாமல் தன்னை மாய்த்துக் கொள்ளும் ஒரு சிறுமி அல்லது பெண்ணின் நிலை எவ்வளவு கொடூரமானது..? அந்த கொடூரமான நிகழ்வுக்குப்பின், அவர்களைச் சிந்திக்கவிடாமல் முட்டுக்கட்டை போடுவது எது..?

ஆண் மிருகங்களால் பாதிக்கப்படும் ஒரு சிறுமி அல்லது பெண், அந்த மோசமான பாதிப்பிலிருந்து வெளிவந்து தன்னைச் சீரழித்தவனை அல்லது சீரழித்தவர்களை இந்தச் சமூகத்துக்கு அடையாளம் காட்டி, அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும்… அதுதான் சரியாக இருக்கும்… தன்னைச் சீரழித்த அந்த மிருகங்களுக்கு முன்னால் வாழ்ந்து, சாதித்துக் காட்டவேண்டும் என்ற வைராக்கியம் ஏற்படாமல், உடைந்து நொறுங்கி தன்னை மாய்த்துக் கொள்வது ஏன்..? அது எப்படிச் சரியாக இருக்கும்..? ஆனால், அதுதான் இங்கே தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறதென்றால், அதற்கு, நிச்சயமாகப் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியை அல்லது அந்தப் பெண்ணை மட்டுமே நாம் எப்படிக் குற்றம் சொல்ல முடியும்..? அது இந்தச் சமூகத்தின் குற்றம்… அந்தத் தற்கொலைக்கான பொறுப்பை மொத்த சமூகமும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்…

அத்தனை வருட கல்வி மாணவ, மாணவிகளுக்கு எதைக் கற்றுக்கொடுத்தது..? தனக்கு எந்தவகையிலும் பொறுப்பில்லாத ஒரு நிகழ்வுக்காக தான் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனை ஏன் ஒரு சிறுமிக்கு, மாணவிக்கு கற்பிக்கப்படவில்லை..? அவர்கள் மூளைக்குள் ஏன் பதியவைக்கப் படவில்லை..? அப்படிப்பட்ட சிந்தனைகளை கற்பிக்காத கல்வியால், அவர்களுக்கோ இந்தச் சமூகத்துக்கோ என்ன நன்மை விளைந்துவிட முடியும்..? சிக்கல்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொடுக்காத, சிக்கலின்போது சிந்தித்து செயல்படமுடியாமல் முடகிப்போகும் ஆபத்தைக் கற்றுக்கொடுக்காத கல்வி எதற்குப் பயன்படும்..?

நவநாகரிகமான இந்தச் சமூகத்தில் எப்போது? எங்கே? எப்படி? என்ன மாதிரியான குற்றத்தை யார் செய்வார்கள்? என்பது பெரியவர்களுக்கே புரியாதபோது, சிறுமிகள், எப்படி தீயவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழ்ந்துவிட முடியும்..? அப்படிப்பட்ட சமூகத்தில், எதிர்பாராதவாறு அவ்வாறான தவறுகள் நிகழ்ந்துவிடும்போது, அதற்கு தான் எந்தவிதத்திலும் பொறுப்பில்லை, தான் தவறு செய்யவில்லை, தான் வாழ்ந்தே தீரவேண்டும் என்ற தெளிவான சிந்தனை ஏன் அந்தச் சிறுமிகளிடம் உருவாகவில்லை..? ஏன் உருவாக்கப்படவில்லை..? அப்படி உருவாக்காமல் விட்டது யார்..? வெறும் மதிப்பெண்களை மட்டுமே வாங்கி வெற்றிபெற்று, படித்து முடித்து, வேலைக்குச் சென்று சம்பாதிப்பதற்குச் சொல்லிக்கொடுப்பதுதான் கல்வியா..? அதுதான் ஆசிரியர்களுக்குமான கடமையா..?

கை நிறையச் சம்பளம்… ஆனால் வாழ்க்கை..?

அப்படி, மதிப்பெண்களுக்காக மட்டுமே படித்து, நல்ல சம்பளத்தில், நல்ல கம்பெனிகளில் – அதாவது தகவல் தொழில் நுட்பத் ( IT ) துறையில் – பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள், தங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் சந்திக்கும் சின்னச்சின்ன சிக்கல்களைக்கூடச் சமாளிக்க முடியாமல் திணறுவதை பார்க்கிறோம்… படிக்கிறோம்… பொருளாதார நெருக்கடி இல்லாதபோதும், மற்ற சில பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் நிறைய தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகச் சில புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன… கை நிறைய சம்பளம், ஆனாலும், சிக்கல்களை சமாளிக்கும் வழிகளை அறிந்துகொள்ளாமல் தடுமாறும் வாழ்க்கை… அதனால், குடும்பங்கள் சிதைகின்றன… குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்… வசதியான வாழ்க்கை முறையால் தொடரும் மதுப்பழக்கம் அதிகரிக்கிறது… மதுவுக்கு அடிமையாகிறார்கள்… இவற்றுக்கெல்லாம் காரணம், மதிப்பெண்களை மட்டுமே கவனத்தில் கொண்ட கல்வி முறை… மாணவ, மாணவிகளை சமுதாயத்துக்கு ஏற்றவர்களாக உருவாக்கும் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகிவிட்ட ஆசிரியர்கள்..! அதைப்பற்றிய அக்கறை சிறிதுமற்ற பெற்றோர்கள்..!

மதிப்பெண்களுக்காக மட்டுமே படிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட மாணவ, மாணவிகள்… சமூக அக்கறையுடன் எழுதப்படும் புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்க மறந்துவிட்ட கல்வி நிறுவனங்கள்… பொதுவாக, எந்தப் புத்தகத்தையுமே வாசிப்பதை கட்டுப்படுத்திய கல்விக்கூடங்கள்… சமூகத்தை, மனிதர்களைப் பற்றிய சிறு புரிதலுமின்றி வாழ்ந்ததன் விளைவாக, பிரச்னைகள் வரும்பொழுது அதை எதிர்கொள்ள படிக்கவில்லை, பழகவில்லை, தெரியவில்லை… சுலபமாகக் கையாளக்கூடிய சிக்கல்களைக்கூட, தவறாகக் கையாண்டு, பிரச்னைகள் அதிகரிக்க, ஆபத்தான முடிவை நோக்கிச் செல்லும் நிலை ஏற்படுகிறது… கல்விக்கூடங்களில் அவர்கள் படித்த அத்தனை வருடக் கல்வியும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே, என சொல்லிக் கொடுக்கப்படும் அறிவீனத்தை என்னவென்று சொல்வது..?

கல்வி என்பது என்ன..? நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் போதிப்பது… வெற்றி, தோல்விகளை இயல்பாக எதிர்கொள்ளும் பக்குவத்தை கொடுப்பது… சிக்கல்களை சிரமமில்லாமல் தீர்ப்பதற்கான வழிகளை கற்பிப்பது… அதாவது, நம் மூளைக்கு அனைத்தையும் கற்பித்து, புரியவைப்பது… அப்படிப் புரியவைத்துவிட்டால், தான் பார்க்கும், கேட்கும், பழகும், ரசிக்கும், ருசிக்கும், உணரும் அனைத்தையும் அறிந்துகொண்டு, மூளை எத்தகைய இக்கட்டான சூழலையும் சாதாரணமாக எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெறும்… எப்படிப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் அவற்றைத் தைரியமாக எதிர்கொண்டு நம்மை வெற்றிபெற வைக்கும்… அப்படிக் கிடைப்பதற்கும் பெயர்தான் தன்நம்பிக்கை… மதிப்பெண்களுக்காக மட்டுமே கல்வியைக் கற்பித்து, எப்பொழுதும் நம்பிக்கையோடு இரு, நம்பிக்கையை வளர்த்துக்கொள் என்பதைப் போன்ற அறிவுரைகளை சொல்வதால் ஒருபோதும் எந்தவொரு மாணவனுக்கோ, மாணவிக்கோ தன்நம்பிக்கை உண்டாகாது… உண்மையான தன்நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் தற்கொலை எண்ணம் தலைகாட்டவே செய்யாது..!

அப்படிபட்ட உண்மையான தன்நம்பிக்கையை மாணவ, மாணவிகளிடம் உருவாக்குவது, அதைப்பற்றிய சிந்தனையை வளர்ப்பது என்பது எளிதான செயல்தான்..! அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்..!

தொடரும்…