புதிய நம்பிக்கை – 3

ஆனந்த சிவா
இங்கே இன்னுமொரு முக்கியமான உண்மையையும் பதிவு செய்தே ஆகவேண்டும்..! மருத்துவம் படிக்க முடியாமல் இறந்தவர்களில் முதல் தலைமுறை மாணவ, மாணவிகளும் இருக்கிறார்கள்… அவர்களுடைய குடும்பங்களில் மட்டுமல்லாமல், அந்த ஊரிலேயே அவர்கள்தான் மருத்துவத் துறைக்குச் செல்லும் முதல் மாணவ, மாணவிகளாக இருப்பார்கள்..! அதற்கு முன் யாரும் மருத்துவராக ஆகியிருக்க மாட்டார்கள்..! அதனால், அந்தக் கிராமத்திலிருக்கும் அனைவரும் மருத்துவராகப் போகின்றவரின் படிப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்..!
தம் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை கூடவேயிருந்து பார்த்து அனுபவித்து, முதல்முதலாக மருத்துவம் படிக்கச் செல்லும் அந்த மாணவ, மாணவிகளுக்கு எவ்வளவோ நல்ல நோக்கங்கள் இருக்கும்… வசதிமிக்க குடும்பத்தில் இருந்து மருத்துவர்கள் ஆனவர்களைப் போலவோ, தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், மாமா என மருத்துவர்கள் நிறைந்த குடும்பத்தில் இருந்து வருபவர்களைப் போலவோ அந்தக் கிராமத்து மாணவர்கள் நோயாளிகளை அனுகமாட்டார்கள்… மிக இயல்பாக, மருத்துவராக இல்லாமல், சாதாரண மனிதர்களைப்போலவே அனுகுவார்கள்..!
அவர்களின் எண்ணம் அடித்தட்டு மக்களுக்களுக்கு சேவை செய்வதாக மட்டுமே இருக்கும்… பணம் சம்பாதிப்பது நோக்கமாக இருக்காது… சாதாரண, வசதியில்லாத ஏழை மக்களை, அவர்களின் உணர்வுகளை மதித்து, அந்த மக்களுக்கும் உயர்ந்த மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில் மருத்துவராக ஆகவேண்டும் என்று கனவு கண்டவர்களாக அடித்தட்டு கிராமத்து மாணவ, மாணவிகள் இருப்பார்கள்..!
அப்படிப்பட்ட உயர்ந்த எண்ணத்துடன் படித்துவரும் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறார்களென்றால், அந்தக் குடும்பத்தினரின், அந்தக் கிராமத்தினரின் சோகம் எப்படிப்பட்டதாக இருக்கும்..? நிச்சயமாகப் பேரிடியாகத்தான் இருக்கும்… அதன்பிறகு, அந்தக் குடும்பத்திலோ, அந்தக் கிராமத்திலோ மற்றொருவர் மருத்துவம் படிக்க வருவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது…!
இப்பொழுது எண்ணிப் பாருங்கள், நன்றாகப் படித்து போதிய மதிப்பெண்கள் எடுத்தும், நீட் காரணமாக மாணவ, மாணவிகள் இறந்துபோக, அத்தனை பேருடைய கனவுகளும் சிதைந்து போகும் அவலம் எவ்வளவு கொடுமையானது என்பது புரியும்..! அப்படிப்பட்ட விலைமதிக்க முடியாத உயிர் பிரியலாமா..? அதுவும் தற்கொலையால் பிரிவது எவ்வளவு அவமானகரமானது என்று சிந்தித்துப் பாருங்கள்..!
எந்தக் காரணத்தினால் ஒரு மாணவனோ அல்லது ஒரு மாணவியோ இறந்திருந்தாலும், அது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தாலும் சரி, அவர்களின் லட்சியங்களும் கனவுகளும்கூட முடிந்து போனவைதான்… அப்படிப்பட்ட இழப்புகள் எதையும் சாதாரணமாக கடந்து போய்விடமுடியாது… கூடாது…
ஈடுசெய்ய இயலாத அந்த இளம் உயிர்கள் பலியாகாமல் தடுப்பதைப் பற்றி, அவர்களின் வாழ்க்கையைப் பற்றி, நாம் எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறோம்…!?
இளம் மாணவ, மாணவிகளிடம் தன்னம்பிக்கையை உண்டாக்காமல், மதிப்பெண்கள் மட்டுமே போதுமானது என போதித்து, அதற்காக மட்டுமே கற்பிக்கப்படும் கல்வி எப்படிச் சிறந்த கல்வியாக இருக்க முடியும்..? உண்மையில் நம் சமூக அமைப்பில் நல்ல மதிப்பெண் வாங்கி வெற்றிபெற்றுவிட்டால் மட்டும் அவர்கள் தாங்கள் நினைத்த துறையில் நுழைந்து, படித்து முன்னேறி மேலே வந்துவிட முடிகிறதா..? கிராமத்தில் வாழும் விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகளோ, கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளோ, நிறைய மதிப்பெண்கள் எடுத்தாலும், அவ்வளவு சுலபமாக உயர்ந்த படிப்புகளை படித்துவிட முடிகிறதா..?
முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்… அப்படி முடியாமல் போனால், அந்த இளம் உள்ளங்கள் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளாது என்று தெரியும்… தெரிந்தும், அதைத் தடுப்பதற்கு நாம் என்ன செய்தோம்..?
கல்வி கற்பிக்கும் முறையை மாற்றினோமா..? தன்னம்பிக்கையைக் கற்பித்தோமா..? முழுக்க முழுக்க மாணவ, மாணவிகளின் தன்னம்பிக்கை வளர்வதற்கு ஏற்றவாறுதானே கல்வி இருக்க வேண்டும்..? ஏன் அவ்வாறு இல்லை..? அதற்கு யார் பொறுப்பு..?
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் இறப்பு நிகழ்கிறதென்றால், இதுவரையில் அவர்கள் கற்றுக்கொண்ட கல்வி, கற்பிக்கப்பட்ட கல்வி முறை என்பது தவறானது என்பதுதானே பொருள்… படிக்காத இளம் வயதினர், ஏன் தற்கொலை செய்துகொள்வதில்லை..? அவர்களால் மட்டும் எப்படி சிக்கல்களை எளிதாக சமாளித்துக்கொள்ள முடிகிறது..? படித்த மாணவ, மாணவிகளால் ஏன் அப்படி வாழ முடியவில்லை..? ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..?

கல்வியும் சரி, களவும் சரி கற்றுக்கொள்பவைதான்..!
மூளைக்குக் கற்றுக்கொடுக்கப்படாத, அதற்குள் பதியப்படாத எதைப்பற்றியும் மூளை கவலைப்படுவதில்லை… தனக்குத் தெரியாதவற்றைப் பற்றி மூளையால் சிந்திக்க முடியாது, செயல்படுத்த முடியாது, செயல்படுத்தவும் தெரியாது என்பதுதான் மூளையைப் பற்றி அறிவியல் சொல்லும் உண்மை… ஆங்கிலமோ, ஹிந்தியோ, தெலுங்கோ, மூளைக்குக் கற்றுக்கொடுக்கப் பட்டிருக்காவிட்டால், அதைக் கற்றிருக்காத ஒருவரால் அந்த மொழிகளில் பேசவோ, எழுதவோ முடியாது..! கல்வியும் சரி, களவும் சரி கற்றுக்கொள்பவைதான்..! மூளைக்குள் இருப்பவை அல்ல..!
மூளை, தனக்குக் கற்பிக்கப்படுவதை, தான் அறிந்ததைப் பற்றி அது சிந்திக்கத் தவறுவதில்லை… அந்தச் சிந்தனைகளை ஒழுங்குபடுத்தத் தவறிவிட்டால், அது சரியோ, தவறோ அவற்றை மூளை செயல்படுத்தவும் தவறுவதில்லை… அப்படித்தான் ஒரு தற்கொலை தீவிரவாதி, தன் உயிர் போவதைப் பற்றியோ மற்றவர்கள் உயிரை எடுப்பதைப் பற்றியோ கொஞ்சமும் இரக்கமில்லாமல் தனக்குக் கற்பிக்கப்பட்டதை செயல்படுத்தி முடிக்கிறான்..! அவனை மூளை முழுமையாக இயக்குகிறது..!
அக்கறை, பொறுப்பு, பொறுமை அவசியம்..!
மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போது அவர்களின் மூளைக்குள் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல், கணினி என எதுவும் இருப்பதில்லை… பெரும்பாலும் அவர்களின் மூளை காலியாக இருக்கும்… மூளைக்குள் இவையெல்லாம் பதியவைக்கப் படுகின்றன… அப்படித்தான், தற்கொலை பற்றிய சிந்தனையும் மாணவ, மாணவிகளிடம் சூழல் காரணமாக பதிவாகிறது… அந்தத் தவறான எண்ணத்தை அகற்றுவது சுலபம்… அறிவியல் பெருமளவு வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், உளவியல் நிபுணர்களின் முறையான ஆலோசனைகளால் தற்கொலை எண்ணத்தை முழுமையாக அகற்றிவிட முடியும்..!
எதை வேண்டுமானாலும் மூளைக்குள் பதிய வைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்கிற இந்த அறிவியல் உண்மையைத்தான் தீவிரவதிகளும், மதவாதிகளும், சாமியார்களும் பயன்படுத்துகிறார்கள்..! தங்களின் தவறான செயல்களுக்கு ஏற்றவர்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்கிறார்கள்… அவர்களின் மூளைக்குள் தங்களின் எண்ணத்தை விதைக்கிறார்கள்…
சமூகத்தின் சீர்கேடுகளாக இருக்கும் சாமியார்கள், மதவாதிகள், தீவிரவாதிகளால் முடிகிற ஒன்றை, ஏன் ஒரு அரசாங்கத்தால் செய்துமுடிக்க முடியாது..? ஏன் ஆசிரியர்களால் முடியாது..? ஏன் பெற்றோர்களால் முடியாது..? ஏன் சமூக செயல்பாட்டாளர்களால் முடியாது..? அனைவரும் இணைந்து செயல்பட்டால் மாணவ, மாணவிகளிடம் மட்டுமல்ல, தற்கொலை எண்ணமோ தவறான சிந்தனையோ யாரிடம் இருந்தாலும் அதை நிச்சயமாக அகற்றிவிட முடியும்..!
ஆனால்… அதற்கான அக்கறை, பொறுமை, பொறுப்பு, அறிவு எல்லாம் இருக்கவேண்டும்… தீவிரவாதிகளிடம், மதவாதிகளிடம், சாமியார்களிடம் இருக்கும் அந்தத் தீவிரமான செயல்பாடுகள் நமக்கும் இருக்கவேண்டும்..!
போலீஸிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று கொலை, கொள்ளை போன்ற தவறான காரியங்களில் ஈடுபடுபவர்கள், அதிலிருந்து தப்புவதற்குத் தீட்டும் திட்டம், அந்தச் சிந்தனை போலீஸிடம் இல்லாததால்தான் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை… குற்றவாளிகளிடம் இருக்கும் அந்தத் தீவிரம், திட்டமிடல், சிந்தனை நமக்கு நம் குழந்தைகளின் அக்கறையில் இருக்கவேண்டும்… ஆசிரியர்களுக்கும், அரசுகளுக்குமே முழுமையான, தெளிவான சிந்தனை வேண்டும்…
எல்லாவற்றையும்விட, சளிக்கும் காய்ச்சலுக்கும், சாதாரண உடல் வலிக்கும்கூட மருத்துவரிடம் ஓடும் நாம், மூளைக்கு ஏற்படும் சின்னச்சின்ன சிக்கல்களுக்கும் மூறையான ஆலோசனைகளைப் பெறவேண்டும் என்ற உண்மையை உணரவேண்டியது காலத்தின் கட்டாயம்… மூளையும் மற்ற மற்ற உறுப்புகளைப்போல, நம் உடலில் இருக்கும் ஒரு உறுப்புதான் என்பதை நாம் உணரவேண்டும்..! இதில் என்ன ஒரு விசித்திரம் என்றால், இந்த உண்மையை மூளைக்கே உணர்த்தியாக வேண்டும் என்பதுதான்..!
மூளைக்கும் நலக்குறைவு ஏற்படும்… அப்படி ஏற்படும்போது, மற்ற மற்ற கோளாறுகளுக்காக மருத்துவரிடம் செல்வதைப்போல, மனநல மருத்துவரிடம் செல்வதும் சாதாரணமான நிகழ்வாக மாறவேண்டும்..! குறிப்பாக, இன்று ஒவ்வொருவர் கையிலும் மொபைல் இருப்பது இயல்பாகிவிட்ட சூழலில், மலிந்துபோய் கிடக்கும் மட்டமான, தவறான, போலியான கருத்துகள் குவிந்து கிடக்கும் சூழலில், குழந்தைகளை, மாணவ, மாணவிகளை சரியான வழியில் நடத்திச் செல்வது சவாலாகவே மாறிவிட்டது…
அவற்றையெல்லாம் சரிசெய்ய முதலில் மாறவேண்டியது பெற்றோர்களும் ஆசிரியர்களும் அரசுகளும்தான்..!
எது தன்னம்பிக்கை..?
மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு அறிவுரை சொல்லி ‘’நம்பிக்கையோடு இருங்கள்… போராடி வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை’’ என்று சொல்வதுதான் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதற்கான வழி என்ற அபத்தமான கற்பிதத்தில் இருந்து, பொறுப்புள்ள பெரியவர்களாக நாமனைவரும் முதலில் வெளிவரவேண்டும்…!
வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் பற்றிய புரிதலை, தன்னம்பிக்கை பற்றிய அறிவியல் உண்மையை மாணவ, மாணவிகளுக்கு உணர்த்தவேண்டும்…. அதாவது மூளையைப்பற்றிய அறிவியலை மாணவ, மாணவிகளுக்கு முழுமையாகக் கற்பிக்க வேண்டும்… மதிப்பெண்கள் வாங்குவதற்காக மட்டுமே மூளையைப் பயன்படுத்தும் முட்டாள்தனத்தை முதலில் ஒழிக்க வேண்டும்…
மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண்களுக்கான கல்வியுடன் கலை, இசை, இலக்கியம், சமூகம், சூழல், சுற்றம் என அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்…
படிக்கும் பருவத்தில், இளமையில் மாணவர்களுக்கு எல்லாவற்றிலும் ஆர்வம் அதிகமிருக்கும்… அது சினிமாவாக இருக்கலாம், விளையாட்டாக இருக்கலாம், இசையாக இருக்கலாம்… இப்பொழுது நாம் பார்த்து வியக்கும் ஒரு விஷயம், குழந்தைகள் மொபைலை கையாளும் விதம்… அதைப் பார்த்து அனைவரும் வியக்கிறோம்…
இதில் உள்ள அறிவியலை உணரவேண்டும்… குழந்தைகளால் எதையும் எளிதில் கற்றுக்கொள்ள முடிகிறது… ஒரு மாணவனோ அல்லது மாணவியோ தனக்குப் பிடித்த கதாநாயகர்களைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்… தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைவிட, விரல் நுனியில் விபரங்களை வைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்..! அந்தக் கதாநாயகர்களே தாங்கள் சொன்னதை மறந்துவிட்டாலும், ரசிகர்கள் அதை ஒருநாளும் மறப்பதில்லை..! இதை நாம் ஒருநாளும் ஒத்துக்கொள்வதில்லை..!
இங்கேதான் நாம் தவறு செய்கிறோம், நம்முடைய அறியாமை அது… அவர்கள் தேவையில்லாதவற்றில் தங்கள் அறிவை வீணடிப்பதாகச் சொல்லி அவர்களுடன் முரண்படுகிறோம்… உண்மையில் மாணவ, மாணவிகளிடம் இருக்கும் அந்த சிந்தனைத் திறனை அவர்களுக்குப் புரியவைத்து, அவர்களின் ஞாபக சக்தியை மேம்படுத்த செயல்படலாம்… அதாவது, அவர்களுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ அதில் அவர்கள் எப்படி திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி, அந்த வழியிலேயே அவர்களை வழிநடத்திச் செல்லவேண்டும்..!
ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ ஒரு நடிகரின்மீது ஈர்ப்பு இருக்கிறதென்றால், அதை எந்தவிதத்திலும் தவறான செயல் என்பதைப்போல அவர்களிடம் வெளிப்படுத்தக் கூடாது… அவர்களைச் சரியாக கையாண்டால், அவர்களின் படிப்புக்கோ அல்லது அவர்களின் மற்றச் செயலுக்கோ எந்தவகையிலும் அந்த விருப்பம் தடையாக இருக்காது என்பதை புரியவைக்க வேண்டும்… அதுதான் இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் மகத்தான வரம்..! ஆம்… மனித மூளையின் மகத்தான அமைப்பின் அற்புதம் அதுதான்…
ஆனால், இன்று பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் பொதுவானவற்றை படிப்பது, சினிமா, விளையாட்டு என எந்தவொரு தனித்த விருப்பத்தையும் அறவே கட்டுப்படுத்துகிறார்கள்..! அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘’தேவையில்லாமல் கண்டதையும் படிப்பதால், கல்வி கெட்டுப்போகிறது’’ என்பதுதான்… இந்தத் தவறான கருத்தை பெறோர்களும் ஏற்றுக்கொள்ளும் அபத்தம்தன் இங்கு நடந்து கொண்டிருக்கிறது…
ஆனால், இந்த சிந்தனை தவறு என்று அறிவியல் சொல்கிறது… மனித மூளையின் அளப்பரிய சக்தியைப் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாமல், அல்லது தங்களின் சுய லாபத்திற்காக கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவிகளை மட்டுமல்லாமல் பெற்றோர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அறிவியல் நிலைப்பாடு…
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல், எல்லாமுமே பழக்கத்தால் வருபவைதான்… எதுவாக இருந்தாலும், விருப்பமானதைப் படித்துப்படித்து பழகினால்தான் பாடங்களையும்கூட படிப்பதற்கு மூளைக்குப் பிடிக்கும் என்பதுதான் உண்மை… அந்த விருப்பத்தின் காரணமாகத்தான் குழந்தைகள் மொபைலை சுலபமாகக் கையாள்கிறார்கள்..! இளைஞர்கள் சினிமா நடிகர்களின் விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்..! அந்த விருப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பழக்கத்தை கல்வியிலும் வாழ்க்கையிலும் தொடர்வதுபோல் அவர்களுக்கு வழிகாட்டவேண்டும்..!
தொடரும்…

