ந்த விருந்தாக இருந்தாலும் பாயசத்துடன் தொடங்குவது தான் நமது பாரம்பரியம்.திருமண வீடுகளில், சாப்பாட்டுடன் பாயசம் பரிமாறப்படவில்லை என்றால்,அந்தத் திருமணம் முழுமை அடையாதது…என்கிற எண்ணம் இன்னும் நம் மக்களுக்கு உண்டு.தமிழ்நாட்டில்,விருந்துகள், பண்டிகைகள், கொண்டாட்டம் அத்தனையிலும் பாயசத்துக்கு பிரதானமான இடம் இன்று வரை இருக்கிறது. இலையில் போட்டதை வழித்து ருசித்தாலும், அப்பளத்தை நொறுக்கிப் போட்டு கலந்தடித்தாலும், டம்ளரில் அல்லது கிண்ணத்தில் ஊற்றிச் சாப்பிட்டாலும் பாயசத்தின் சுவையை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்,அமர்க்களம்!

பாயசம் சர்க்கரை சேர்த்து செய்யப்பட்டாலும், வெல்லம்,நாட்டுச் சர்க்கரையில் செய்யப்படும் பாயசத்தின் சுவையே தனி!மதுரை, நெல்லைப் பகுதிகளில் பருத்திப் பால் பாயசம் வெகு பிரபலம்.ஒரு சாதாரண வண்டியில் வைத்துக்கொண்டு விற்பனை செய்வார்கள். பருத்திக் கொட்டையின் பாலில் நாட்டுச் சர்க்கரையோ, வெல்லமோ, கருப்பட்டியோ கலந்து தயாரிக்கப்படும் இதன் சுவைக்காகவே பாயசக்காரரை எதிர்பார்த்து பலபேர் காத்திருந்த காலம் எல்லாம் உண்டு. இன்றும் தென் தமிழகத்தில் வெகு அரிதாக சில கடைகளில் பருத்திப் பால் பாயசம் கிடைக்கிறது. இனிப்பு ருசியின்பால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு பாயசம்,அமிர்தம்.

ஆரோக்கியமாக வாழ இது தரும் பலன்கள் என்னென்ன?

பொதுவாக பாயசத்தில் சேர்க்கப்படும் முக்கியமான பொருள்கள் பால் மற்றும் ஏலக்காய். இயல்பாகவே பால் நம் உடலுக்கு நன்மைகள் பல தருகிற ஒன்று. எலும்புக்கு உறுதி சேர்ப்பது,சருமப் பளபளப்புக்கு உதவுவது,உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தருவது, பற்சிதைவைத் தடுப்பது,பதற்றம் குறைப்பது, ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் காப்பது, சில புற்றுநோய்களை வராமல் தடுப்பது… எனப் பாலின் நன்மைகள் ஏராளம். உலகம் முழுக்க மக்களின் தவிர்க்க முடியாத ஓர் பானம் இது.100 கிராம் பாலில் 42 கலோரிகள், கொழுப்பு 1 கிராம், கொலஸ்ட்ரால் 5 மி.கி.,சோடியம் 44 மி.கி.,பொட்டாசியம் 150 மி.கி., கார்போஹைட்ரேட் 5 கிராம்,சர்க்கரை 5 கிராம்,புரோட்டீன் 3.4 கிராம் உள்ளன.

பாயசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய்க்கு மருத்துவ குணங்கள் அதிகம்.

அதோடு பாயசத்தில் சேர்க்கப்படும் முந்திரி,உலர் திராட்சை அனைத்தும் நம் உடலுக்கு வலுவூட்டக்கூடியவை. பாயசத்தை வீட்டில் ஆரோக்கியமான முறையில் தயாரித்துச் சாப்பிடுவது நல்லது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் பாயசத்தைத் தவிர்க்கவும்.அதோடு இது தினமும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு பதார்த்தம் அல்ல. விசேஷங்களின்போது மட்டும் சாப்பிடப்படுவது என்பதால், எப்போதாவது பாயசத்தைச் சாப்பிடுவதில் தவறே இல்லை. குழந்தைகளுக்கு அவ்வப்போது செய்து தரலாம்.

பிறகென்ன… பண்டிகை,விருந்து, விழாக்களில் பாயசத்தை ஒரு கை பார்த்துவிடலாம்தானே!