
கருவியல் விஞ்ஞானி
டாக்டர்.எஸ்.எஸ்.முத்தையா பேட்டி.
மனித குலத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா தாக்கத்திற்கு பிறகு குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்திருக்கிறது.அலைஅலையாய் வந்த கொரோனா கொடூரத்தால் தொழில்-வியாபாரத்தில், வேலைவாய்ப்பில், தனிநபர் வருமானத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக சீராகவில்லை.
குழந்தை இல்லாத தம்பதியர் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.குழந்தை இல்லாத ஏக்கத்தில்…சிகிச்சை எடுக்க போதுமான வருமானம் இல்லாததால் மனம் புழுங்கி சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அரசாங்கம் குழந்தை இல்லாதவர்களுக்கு உதவ முன் வர வேண்டும். இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்கிறார் கருவியல் விஞ்ஞானி டாக்டர்.எஸ்.எஸ். முத்தையா.
சென்னை தியாகராய நகரில்,கண்மணி கருத்தரிப்பு மையத்தை நடத்தி வருகிறார்.35 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். குழந்தையின்மை தொடர்பான ஆய்வுகளையும் செய்து வருகிறார்.நமது இதழ் சார்பாக சந்தித்து உரையாடினோம்.அவரது பேட்டியில் இருந்து…

குழந்தையின்மை பிரச்சனை தொடர்ந்து அதிகரிக்கிறதா டாக்டர்?
ஆமாம்.திருமணம் ஆகும் நான்கு தம்பதிகளில் சராசரியாக ஒரு தம்பதியருக்கு குழந்தை இருப்பதில்லை. திருமணம் ஆனவுடன் எப்போ கர்ப்பம் அடைவோம் என்ற ஏக்கம் ஆரம்பித்து விடுகிறது. அக்கம் பக்கத்தினர் கேட்கும்போது தம்பதியர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் என்ன டாக்டர்?
ஆண் பெண் இருவரிடமும் பிரச்சனைகள் இருக்கலாம். ஆண்களுக்கு விந்து உற்பத்தியிலோ,விந்து அணுக்கள் எண்ணிக்கை மற்றும் தரத்திலோ பிரச்சனை இருக்கலாம். பெண்ணுக்கு கருமுட்டை உற்பத்தியாவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, உடல் பருமன்,நீர்க்கட்டிகள், கர்ப்பப்பை வளர்ச்சியில் கோளாறு இப்படி பல்வேறு தொந்தரவுகள் இருக்கலாம்.
விந்தணுக்கள் குறைபாடு பற்றி விரிவாக சொல்லுங்கள் டாக்டர்?
தாம்பத்திய உறவின் போது,ஆண் குறியில் இருந்து பெண் உறுப்புக்கு செலுத்தப்படுவது தான் விந்து திரவம். விந்து திரவத்தில் இருக்கும்ஆணின் விந்து அணுக்கள் குறைந்தபட்சம் 40 மில்லியன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் முன்பு சொன்னது.
இப்போது 15 மில்லியன் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம்.விந்து
அணுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.இதனால் கர்ப்பமடையும் வாய்ப்பும் தடைபடுகிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.
விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைய காரணம் என்ன?
பொதுவாக வைரஸ் தொற்று ஆண்களுக்கு ஆபத்தானது. பொன்னுக்கு வீங்கி,சின்னம்மை,கொரோனா வைரஸ் போன்ற வைரஸ் பாதிப்புகள் விந்து அணுக்கள் உற்பத்தியை பாதிக்கலாம்.மேலும் வெப்பம் மிகுந்த இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு விந்து உற்பத்தி தடை படுகிறது.வண்டி வாகன ஓட்டுநர்கள்,சமையல் கலைஞர்கள், ரேடியேஷன் உள்ள இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு பாதிப்புகள் வருகின்றன.
ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை தொடர்ந்து அணிவதும் நல்லதல்ல.புகைப்பழக்கமும், அளவுக்கு அதிகமான மதுப்பழக்கமும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்கள்.
ஒரு ஆண் எப்போது இந்த பிரச்சனைகளை தெரிந்து கொள்கிறான்?
திருமணமாகி கருவுறுதலுக்கு முயற்சி செய்து,ஒரு வருடம் ஆகியும் கர்ப்பம் ஆகவில்லை என்றால்…தம்பதியர் இருவரும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.அப்போது முதலில் ஆணுக்கு விந்தணு பகுப்பாய்வு சோதனை செய்வார்கள். அப்போது தெரிந்து கொள்ளலாம்.
விந்து அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா?
நவீன மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்த பிரச்சினையையும் எதிர் கொள்ள முடியும்.விந்து அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் உள்ளன.அதைவிட வருமுன் காப்பதே நல்லது என்ற அடிப்படையில் சில வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது. நமது வாழ்க்கை முறையை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் .போதுமான தூக்கம்,தினசரி உடற்பயிற்சி, மகிழ்ச்சியான வாழ்க்கை முக்கியம். அடுத்து உணவுப் பழக்கத்தை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்.தினசரி சாப்பாட்டில் காய்கறி பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சிறு தானியங்கள்,இளநீர்,செவ்வாழைப்பழம் ஆகியவை மிக மிக முக்கியம்.வேண்டாத சில உணவுப் பழக்கங்கள் விட்டு ஒழிக்க வேண்டும். குறிப்பாக மேல்நாட்டு உணவுகளான பர்கர், பிட்ஸா, ஷவர்மா, வண்ண வண்ண கோழிக்கறி மற்றும் குளிர்பானங்கள் ஆபத்தானவை.
குழந்தையின்மை பாதிப்பு யாருக்கு அதிகம்?
தற்போது பலரும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.இரவு பகல் என மாறி மாறி ஷிப்ட் முறையில் பணியாற்றுகிறார்கள்.இவர்களுக்கு தூக்கம் குறைகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையும் இல்லை.வேலையை காப்பாற்றிக் கொள்ள சக்திக்கு மீறி வேலை செய்கிறார்கள்.பணிச்சுமை அழுத்தம் அதிகம். 24 மணி நேரமும் வேலையைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முறையும் சரி இல்லை; உணவு முறையும் சரி இல்லை.கணவன் மனைவி பேசிக்கொள்வது குறைவு. உடலுறவு கொள்வது மிக மிக குறைவு. இதனால் குழந்தையின்மை பிரச்சனை வருவது எதார்த்தம்.
ஐ.டி. பெண்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் வருகின்றன?
மதுப்பழக்கம்,புகைப்பழக்கம், உடல் பருமன்,ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இவர்களுக்கு அதிகம். இதனால் கருமுட்டை உற்பத்தி தடை படுகிறது. உற்பத்தி ஆனாலும் குறைபாடு உடையதாக இருப்பதால் கர்ப்பம் அடைவது சிக்கலாகிறது.
குறைந்த கட்டணத்தில் ஐ.வி.எஃப்.செய்வதாக நிறைய விளம்பரங்கள் வருகின்றன.சாத்தியமா டாக்டர்?
மருத்துவர்கள் தங்களது எல்லையை மீறி நடப்பதாகவே கருதுகிறேன்.நாம் செய்வது துணிக்கடை நகைக்கடை வியாபாரம் அல்ல.மருத்துவம் என்பது உயர்ந்த மக்கள் பணி. இதில் தள்ளுபடி,அது இது என்று மக்களை கவர்வதற்காக விளம்பரம் செய்வது எனக்கு உடன்பாடு இல்லை. தள்ளுபடி தரும் சிகிச்சை மையங்களுக்கு போகிறவர்கள் திருப்தியாக சிகிச்சை பெற்று திரும்பியதில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் தான் வெளியே வருகிறார்கள்.
சிகிச்சைக்கான செலவுகள் அதிகம் என்று பரவலாக பேசிக்கொள்கிறார்கள். உண்மைதானா?
குழந்தையின்மைக்கான சிகிச்சை என்பது நவீன தொழில்நுட்ப வல்லுனர்கள்,சிறப்பு நிபுணர்கள்,விலை மதிப்புள்ள மருந்துகள், ஆய்வக பரிசோதனைகள் என பல்வேறு நிபுணர்கள் மற்றும் கருவிகளை உள்ளடக்கியதாகும்.இதனால் கட்டணம் அதிகம் என்பது உண்மைதான்.
சாதாரண மக்களால் எப்படி சிகிச்சை எடுக்க முடியும்?
வருமானம் குறைவாக உள்ளவர்களால் சிகிச்சை எடுப்பது சிரமம் தான்.மத்திய மாநில அரசுகள் குழந்தை இல்லாதவர்களின் ஏக்கத்தை போக்க முன்வர வேண்டும். குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் விபரீதங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.
குழந்தை இல்லாத தம்பதியருக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்து மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதியருக்கு ஆறுதல் தந்து தேற்ற வேண்டும். பள்ளி கல்லூரிகளில் நல்ல வாழ்வியல் முறையை,சத்தான உணவுப் பழக்கத்தை அறிவியல் பூர்வமாக பயிற்றுவிப்பது எதிர்கால சந்ததி நலமாக வாழ வழி ஏற்படுத்தும்.
உங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்?
தமிழ்நாட்டில் வெப்பம் மிகுந்த பகுதிகளில் குழந்தையின்மை பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்பு அதிகம். குளிர்ச்சியான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை மிக மிக குறைவு. ஊட்டி, கொடைக்கானல் மற்றும் கேரள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குழந்தையின்மை பாதிப்பு அதிகமாக இருப்பதில்லை என்றார் டாக்டர் முத்தையா.
(தகவல் தொடர்புக்கு: 98 410 11 636)
சந்திப்பு:குணா

