டாக்டர்.ஜி.ராஜமோகன்

மீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒட்டுமொத்த மனித இனத்தையே வசீகரித்து கட்டிப்போட்டிருப்பது செல்போன் தான்!

 நமது நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் செல்போன் பயன்பாடு அளவுக்கு அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மனநல மருத்துவரிடம் செல்போன் அடிமைத்தனத்திற்காக மருத்துவம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

செல்போன்,மதுவை போல் போதைப் பொருளாக,மனிதனை அடிமைப்படுத்தும் கஞ்சாவாக மாறிவிட்டது.

தகவல் தொடர்புக்கு, பணப்பரிமாற்றம்  மற்றும் பொழுது போக்கிற்கு என்ற நிலை மாறி எங்கும் எப்போதும் செல்போனே கதி என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

செல்போன் இல்லாமல் ஒரு நிமிடமும் ஓடாது என்ற பரிதாப நிலை.

 குழந்தைகள் தங்களது பொன்னான நேரத்தை வீணடிப்பது மட்டுமல்ல உடல் அசைவும் இல்லாமல்,ஓடி ஆடி விளையாடாமல்,அக்கம் பக்கத்தில் பேசாமல், பாடம் படிக்காமல் செல்போனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகி வருவது மிகவும் ஆபத்தானது.

தூக்கம் குறைகிறது, விளையாட்டு ஆர்வம் மறைகிறது,கண்களில் பலவிதமான பிரச்சனைகள்,கழுத்து வலி,பசி இருப்பதில்லை,மன உளைச்சல், வீட்டிற்கு எந்த உதவியும் செய்வதில்லை, எதையோ இழந்துவிட்டது போன்ற மனநிலை,கவலை, அச்சம்,சோர்வு, மயக்கம்,இலக்கில்லா வாழ்க்கை… செல்போன் இல்லாமல் எதுவும் இல்லை…

வண்டி வாகனங்களில் போகும்போது செல்போன் பேசுவது ஆபத்தின் உச்சகட்டம். செல்போனை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பதை தெரியாமல் அறியாமல் அவதிப்படுகிறோம். ஆபத்தில் சிக்கிக் கொள்கிறோம். உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

வாட்ஸ் அப், பேஸ்புக்,யு டியூப் பார்ப்பதற்கு நேரக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளுங்கள்.வீட்டிற்குள் செல்போனை மிகக் குறைவாக பயன்படுத்துங்கள். அரசியல்,தேசிய செய்திகளை செய்தித்தாள் வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வதந்திகள், ஆபாச காட்சிகள், தேவை இல்லாத,மனதை கெடுக்கும் காட்சிகள்…மீம்ஸ்கள் நமது வாழ்க்கையை சீரழிக்கும்.

நமக்காக நமது வசதிக்காக வாங்கப்பட்ட செல்போன் நம்மை அழிக்க, அடிமைப்படுத்த அனுமதிக்க வேண்டாம்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது செல்போனுக்கு பொருந்தும். 

நமது ஓய்வு நேரத்தை திருடிக் கொள்ளும் செல்போன் பயன்பாடு. வேண்டாம் இந்த விபரீதம்.

நமது உடல் நலம்,மன நலம் காக்க நல்ல ஓய்வு தேவை.செல்போன் நம்மை சிறைப்படுத்தி அழிக்க அனுமதிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.