டாக்டர்.ஜி.ராஜமோகன்.
சைக்கோதெரபிஸ்ட்

மீபகாலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கல்லூரி மாணவர்கள், தொழில் வியாபாரம் செய்பவர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள்,ஐ.டி.ஊழியர்கள்,  குடும்ப பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை,வாழ்க்கையை இழக்கிறார்கள்.ஈடு செய்ய முடியாத போது எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள.

சூதாட்டம் திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு என்று சிலர் விளக்கம் சொல்கிறார்கள்.

சாதாரணமாக பொழுது போக்குக்காக மட்டுமே தான்… பணம் கட்டி விளையாடுவதில்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது.

சூதாட்டம் பணம் தொடர்பானது மட்டும் அல்ல.சூதாட்டத்திற்கு அடிமையாவது மன நலம் தொடர்பானது.

வெற்றி அல்லது தோல்வி வாய்ப்பின் அடிப்படையில் அமையும் ஒரு விளையாட்டில் பணம் வைத்துப் பந்தயம் கட்டுவதே சூதாட்டம். பல சமூகங்களில் அல்லது நாடுகளில் சட்ட விரோதமாகக் கருதப்படும்போதும் உலகம் முழுதும் சூதாட்டம் நடக்கிறது. பொதுவான எடுத்துக்காட்டுகளாகக் குதிரைப்பந்தயம், சீட்டு விளையாட்டு, லாட்டரிச் சீட்டு, சூதாட்ட இயந்திரங்கள் போன்றவற்றைக் கூறலாம்.

சூதாட்டம் எப்படி பழக்கமாக மாறுகிறது?

போதைமருந்துப் பழக்கத்துக்கு, சில ‘வேதிப்பொருள் காரணமாவதைப் போல, சூதாட்டத்துக்கு

ஒருவர் அடிமையாவதற்கு எந்த விளக்கமும் அளிக்க முடியாது. சூதாட்டம் உற்சாகமளிப்பதாகவும்

சாகசமாகவும் கருதப்படுகிறது. வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பே ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையாகக் காரணமாகிறது. பெரும்பாலான சூதாடிகள் வெற்றிபெற்று எடுக்கும் பணத்தை விட இழக்கும் பணமே அதிகம்; இழந்ததை மீட்டுவிட வேண்டும் என்ற வெறியே மீண்டும் சூதாடத் தூண்டுகிறது. 

ஒருவர் குதாடுவதற்காகப் பணத்தைக் கடன் வாங்கலாம் அல்லது திருடலாம். ஆனால் அவர் மிக மோசமான பொருளாதாரச் சிக்கலைச் சந்திக்கும் வரை வெல்லுதல் அல்லது தோற்றல் என்ற சுழற்சி தொடர்கிறது. இந்தச் சுழற்சிக்குள் ஒருவர் சிக்கிவிட்டால், அது சூதாட்ட நோயாக மாறிவிடுகிறது.

சூதாட்ட நோயும் ஆரோக்கியமும் 

சூதாட்ட நோய் ஒருவரின் ஆரோக்கியத்தைப் பல வழிகளில் பாதிக்கலாம்;

* பெரும்பாலும் சூதாடும் நடவடிக்கை இரவு நேரத்தில்

நடைபெறுவதால், சூதாடுபவரின் உறக்கம் கெடுகிறது. கண்ட நேரத்தில் உறங்கச் செல்வதால், அவருடைய வழக்கமான பணி பாதிப்படைகிறது.

* சூதாடுபவர் சூதாட்டத்தைத் தவிர வேறு எதையும் சிந்திக்க

இயலாது என்பதால், அவர் எப்போதும் எரிச்சலோடு காணப்படுகிறார். மனத்தை ஒருமுகப்படுத்த இயலாததால் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்.

* சூதாடுபவருக்கு எப்போதும் பணப் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்; அவர் பலரிடம் கடன் வாங்கியிருப்பார். சில சூதாடிகள் சூதாடத் தேவைப்படும் பணத்தைப் பெறுவதற்காக திருட்டு அல்லது குற்றச்

செயலில் ஈடுபடுவதுண்டு. குடும்பக் கடமைகளுக்கும் பொறுப்புகளுக்கும் உரிய நேரத்தைச் செலவிடாததாலும் கவனம் செலுத்தாததாலும் உறவினர்களோடு தகராறு நிலவுவது சூதாடிகளிடையே பொதுவானதாகும்.

* சூதாடுதல், மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகியவை பெரும்பாலும் ஒன்றாகவே நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, சூதாட்டம் ஒரு மதுவகத்தில் நடக்கலாம்.

சூதாட்டம் ஒரு பிரச்சினையாக இருக்கலாம் என்று எப்போது சந்தேகப்பட வேண்டும்?

* ஒருவருக்குக் காவல்துறையோடு தொடர்ந்து பிரச்சினை.

* உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒருவர் திடீரென வறுமையில் வாடத் தொடங்குதல்.

* ஒருவர் பழைய நண்பர்களிடமிருந்து விலகிப்போதல். 

* அடிக்கடி பொய் சொல்வது.வழக்கமாக செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றாமல் இருப்பது…

* செல்போனும் கையுமாக இருப்பது… ஆன்லைன் விளையாட்டில் எப்போதும் ஈடுபடுவது…

சூதாட்டத்தில் ஈடுபட்டு அடிமையானவர்களை அடையாளம் கண்டால் அவர்களை புறக்கணிக்க வேண்டாம்.அவர்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுங்கள்.சூதாட்டத்தால் கடன் பிரச்சினை இருந்தால்… அதில் இருந்து மீண்டு வர வாய்ப்பு உள்ளது என்று சொல்லி வழி காட்டுங்கள்.

எந்த சூழலில் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார் என்பதை விவாதித்து அந்தச் சூழலை மாற்றி அமைக்க உதவலாம்.

வேறு புதிய விரும்பி ஏற்கும் பொழுது போக்கு ஒன்றை அடையாளம் கண்டு சேர்ந்து விளையாடலாம்.

சூதாட்டத்தில் இருந்து விடுபட முடியாமல் தவித்தால் மனநல மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.

சூதாட்டத்தில் அடிமையானவர்கள் தற்கொலைக்கு முயல வாய்ப்பு உண்டு.உறவினர்கள் நண்பர்கள் அடையாளம் கண்டு உதவினால் காப்பாற்றுவது எளிது.