ணவன் மனைவி இடையே அதாவது அப்பா அம்மா இருவரும் ஆரோக்கியமான புரிதலுடன் பக்குவமான மன நிலையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.இருவரும் கருத்து வேறுபாடுகளோடு குழந்தைகளை தவறாக வழி நடத்தக்கூடாது.
 
ஒரு விஷயத்தை எப்படி சொல்கிறோம், எப்படி அணுகுகிறோம், முரண்களை எப்படிக் கலைகிறோம், அதன் நிமித்தம் எப்படி ஒரு ஒருமித்த உறவிற்கு வருகிறோம் என்பதையெல்லாம் குழந்தைகள் தொடர்ச்சியாக நம்மிடம் கவனித்தே வளருகின்றன. அதிலிருந்து குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கின்றன. அதன்படியே அவர்களும் நடந்து கொள்கிறார்கள். அதே போல பெற்றோர் ஒரே நேரத்தில் இரண்டு எதிர்மறையான போக்கில் குழந்தைகளிடம் நடந்து கொள்வதும் குழந்தைகளிடையே குழப்பத்தை அதிகரிக்கும். உதாரணத்திற்கு அம்மா டி.வி.யே பார்க்கக்கூடாது, டி.வி.யே பார்த்துக்கொண்டிருந்தால் படிப்பு வராது என்று சொல்லும் நேரத்தில், “அப்படியெல்லாம் குழந்தையை பயமுறுத்தாத…டி.வி.பார்த்தா அறிவு நல்லா வரும் “என்று அப்பா சொல்வது நிச்சயம் குழந்தைகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தும். 
 
பெற்றோர்களுக்கிடையே எதிர்மறை கருத்துக்கள் இருக்கலாம். நிறைய நேரங்களில் இருவரும் தங்களது கருத்துகளில் மாறுபடலாம். ஆனால் குழந்தையிடம் ஒற்றைக் கருத்து மட்டுமே சொல்லப்பட வேண்டும், உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால் தனியாக நீங்கள் விவாதித்துக் கொள்ளலாமே தவிர, குழந்தைக்கு முன்னால் இன்னொருவரையோ அல்லது அவரது கருத்தையோ மட்டப்படுத்தக்கூடாது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ரகளை செய்யும், மோசமாக நடந்து கொள்ளும் மாணவர்கள் எல்லாம் அந்த நடத்தைகளைப் பெரும்பாலும் அவர்களின் வீட்டில் இருந்தே கற்றிருக்கிறார்கள் என்கின்றன உளவியல் ஆராய்ச்சிகள்.அதனால் வீட்டை தாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள மனிதர்களுக்கிடையேயான உறவுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்போது குழந்தையும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையே கற்றுக்கொள்கிறது.