“இப்படி செய்யுங்க.. ஈசியா நூறு வருசம் வாழலாம்!”: -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அரசியல் ரீதியாக மட்டுமல்ல.. பாடல், குத்துசண்டை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் பிரபலம்.

உடல் ஆரோக்கியத்தை எப்படி காக்க வேண்டும் என நமது வாசகர்களுக்காக சொல்கிறார்:

“உடற்பயிற்சி கூடத்துக்கு செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. காலையில் நடைப்பயிற்சி செய்தால் போதும். அதுவும். நடைப் பயிற்சி செய்ய, பூங்காவோ, மைதானமோ தேவையில்லை.. உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் சாலையில், காலை நேரத்தில் நடைப் பயிற்சி செய்தாலே போதும்.

வேலை காரணமாக, காலை நேரத்தில் முடியாவிட்டால் மாலையில் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி தவறாமல் செய்யவேண்டும். அதன் பிறகு வீட்டுக்கு வந்து, சாதாரண உடற்பயிற்சி செய்தால் போதும்..

நேராக நின்று குனிந்து நிமிர்வது, இடது வலது கைகளை நீட்டி மடக்குவது போன்ற எளிய பயிற்சிகள் போதுமானவை.

தவிர, எதற்கெடுத்தாலும் எந்திரங்களை நம்பி இருக்கக்கூடாது. மாடிப்படி ஏற லிப்ட், பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்ல வாகனம்… இவற்றைத் தவிரிக்க வேண்டும்.

மாடிக்கு படியேறி செல்ல வேண்டும்.. அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டும்.

நேரம் கிடைக்கும்போது வீட்டை சுத்தப்படுத்துவது, பாத்திரங்கள் விளக்குவது, பாத்ரூமை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். இதுவும் உடற்பயிற்சிதான். தவிர, வீட்டு வேலை செய்த மாதிரியும் ஆச்சு.

இப்படி சிறு சிறு வேலைகளை நமது உடலுக்கு அளித்தாலே, சுறுசுறுப்பாக ஆரோக்யமாக இருக்க முடியும்”

அடுத்து உணவு…

உணவு விசயத்தில் நான் மிகக் கட்டுப்பாடாக இருப்பேன். முதல் விசயம், நேரத்துக்கு சாப்பிட வேண்டும். இரவு பகலாக அரசியல் பணி இருந்தாலும், நேரம் ஒதுக்கி சரியான நேரத்தில் சாப்பிடுவேன். அதோடு உணவில் அளவு முக்கியம். பலர், நிறைய சாப்பிடுவது ஆரோக்கியம் அளிக்கும் என நினைக்கிறார்கள். அது ஆபத்தைத்தான் தரும்.

எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில்லை.. என்ன சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம். உணவு குறித்த அறிவு நம் அனைவருக்கும் தேவை.

நிறை கொழுப்பு, நிறைவுறாக் கொழுப்பு என்று இரு வகை உண்டு. இவற்றை அளவுடன் எடுத்துக்கொள்ளலாம்.. அல்லது தவிர்த்துவிடுவது நல்லது.

அதற்காக முற்றிலும் கொழுப்புச்சத்தை தவிர்க்க வேண்டியதில்லை. பாதாம், அக்ரூட், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதயத்திலுள்ள கெட்ட கொழுப்புச்சத்தைக் குறைக்க இந்த உணவுப்பொருட்கள் உதவுகின்றன.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் இதயத்துக்கு நல்லது. பீன்ஸ், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைவான கொழுப்பு கொண்ட பால் பொருட்கள், இறைச்சி, மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதே போல எண்ணையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். தீட்டப்பட்ட அரிசி போன்றவற்றை ஒதுக்க வேண்டும்.

தானியங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நான் தினமும், தினை இட்லி, கேழ்வரகு புட்டு போன்றவற்றையே சாப்பிடுகிறேன். மதியமும் அரிசி உணவை அளவோடு.. அதுவும் சிகப்பரிசியையே பயன்படுத்துகிறேன்.

காய்கறிகளை, பழங்களை சாப்பிடும் பழக்கம் பெரும்பாலோனோருக்கு இல்லை. இவற்றை தாராளமாக பயன்படுத்த வேண்டும். மூன்று வேளையும், உணவுடன் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவேன்.

மற்ற பல உணவு பதார்த்தங்களின் விலையை விட காய்கறி , பழங்கள் விலை குறைவுதான். அதிலும் கொய்யா, வாழைப்பழம் , காரெட், பப்பாளி, கமலா பழம்.. போன்றவற்றை எளிதாக வாங்கலாம்.

தவிர அவ்வப்போது நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுவது உடலுக்கு மிக ஆரோக்யம் தரும். இதை நான் சிறு வயதில் இருந்து கடைபிடிக்கிறேன்.

இளையவர்கள்கூட, உப்பு, காரம், இனிப்பு மூன்றையும் அளவோடு பயன்படுத்த வேண்டும். சுவை இருக்காதே என நினைக்க வேண்டியதில்லை. பழகிவிட்டால் அது தனிச் சுவையைத் தரும்.

அசைவத்தைப் பொறுத்தவரை நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, மீன் உள்ளிட்ட கடல் உணவுகள் சிறப்பானவை. குறிப்பாக . சூரை (Tuna), சல்மன் (Salmon) ஆகிய மீன் வகைகளை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் இதய நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

நமது பாரம்பரியமே, உணவே மருந்து.. மருந்தே உணவு என்பதுதான்.

உதாரணமாக துவரம்பருப்பை பயன்படுத்தி திக்கான சாம்பார்,.. கொத்தமல்லி சட்னி, இதர கீரை வகைகள், சின்ன வெங்காயம், பூண்டு போட்டு அரைத்து சட்னி.. இது எல்லாமே நமக்கு ஆரோக்கியம்தான்.

மிளகு, மஞ்சள்,இஞ்சி, பூண்டு ஆகியவற்றை கூடுதலாக சமையலில் பயன்படுத்த வேண்டும்.

சாதாரணமாகவே கிராம்பை வாயில் போட்டு மெல்லுவேன்.. வாய் மணக்கும் என்பதோடு, உடல் வலுக்கும்.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று.. எந்த நேரமாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தே சாப்பிடுவேன்.

கே: பலருக்கும் நொறுக்குத் தீனி என்பது பழக்கமாகவே ஆகிவிட்டதே!

ப: அது தவறல்ல. கிராமங்களில் பண்டிகைகளின் போது, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை கயிற்றில் கட்டி தொங்க விட்டு இருப்பார்கள். குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் நேரத்தில் அவ்வப்போது ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிடும்.

அதே போல எள் உருண்டை, கடலை மிட்டாய் போன்றவையும் இருக்கும். இது தவறில்லை. சொல்லப்போனால் நிலக்கடலை போன்ற சத்தான தானியம் வேறு இல்லை. பாதாம் பிஸ்தாவைவிட சத்தானது நிலக்கடலை.

எனது காரில் காராசேவ், மிக்சர் இருக்காது. கடலை இருக்கும்.  சிகப்பரிசி அவுல், பேரீட்சை இருக்கும்.

கொஞ்சம் பசி எடுத்தால், கைப்பிடி அளவு கடலையை எடுத்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பேன். அதே போல, அவுல் – பேரீட்சை சேர்த்து சாப்பிடுவேன். சுவைக்கு சுவை.. ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்.

கே: பலருக்கும் தூக்கம் பிரச்சினையாக இருக்கிறது…

ப: உண்மைதான்.. இரவு 11 மணிக்கு தூங்கி ஐநது மணிக்கு எழணும்.. அதுதான் ஆரோக்கியம். நான் அரசியல்வாதி.. ஆகவே பல நாட்கள் இப்படி முறையாக உறங்க முடியாத.இதற்கேற்ப மாறி மதியம் ஒரு மணி நேரம் தூங்கிவிடுவேன்.. பலரும் இரவு தூங்கும் வரை டி.வி., போன் பார்ப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது கண்களுக்கு மட்டுமல்ல.. மொத்த உடலுக்குமே கேடு.

தவிர, இரவு சாப்பிட்டவுடனே படுக்கக்கூடாது. கொஞ்ச நேரம் நடக்கலாம். மனதிற்கு இனிய பாடல்களைக் கேட்கலாம். நான், எம்.ஜி.ஆரின் காதல் மற்றும் தத்துவ பாடல்களைக் கேட்பேன்.

அதே போல, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை தலா ஒரு சிட்டிகை எடுத்து சுடு நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பேன். இது உடலுக்கு ஆரோக்கியம் என்பதோடு, நல்ல உறக்கத்தைத் தரும்.

எல்லாவற்றையும் விட முக்கியம், படுக்கப் போகும்போது பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கவே கூடாது. அமைதியாக உறங்க வேண்டும். இதையெல்லாம் கடைப்பிடித்தாலே ஆரோக்யமாக நிம்மதியாக வாழலாம்” விறு விறு என பல டிப்ஸ்களை சொல்லி முடித்தார் ஜெயக்குமார்.

-சந்திப்பு:யாழினி