டாக்டர்.எஸ். வெங்கடாசலம் முழக்கம்.

டந்த ஜனவரி 8(2023)ஆம் தேதி, இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் சார்பாக மக்கள் மன்றம் நிகழ்ச்சி,சென்னை கூடுவாஞ்சேரியில்  நடைபெற்றது.கூடுவாஞ்சேரியில், நலமாலயா இயற்கை வாழ்க்கை முறை விழிப்புணர்வு மையத்தை நடத்தி வரும் ஹீலர்.எஸ்.எழிலரசி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ததோடு வரவேற்புரையும் நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட,இந்திய இயற்கை கவுன்சிலின் தலைவர் டாக்டர்.எஸ். வெங்கடாசலம் பேசியதாவது:

மாற்று மருத்துவர்கள் பாதுகாப்பதற்காக பல்வேறு சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.மாற்று மருத்துவர்கள் வருமானத்தை மட்டும் பார்ப்பதில்லை. பொதுமக்களின் நோய் நொடி இல்லாத வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல்,நாங்கள் பெற்ற மருத்துவ சிகிச்சை அனுபவங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக,தமிழ்நாடு முழுவதும் மக்கள் மன்றம் என்ற பெயரில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

மக்களை சந்திப்பது அவர்களோடு உடல் நலம் பற்றி உரையாடுவது,நல வாழ்வு,சத்தான உணவு, பல்வேறு சிகிச்சை முறைகள் வணிக நோக்கத்தோடு கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவ நிறுவனங்கள், ஹோமியோபதி, அக்குபஞ்சர்,சித்தா,யோகா,பாரம்பரிய வாழ்க்கை முறை,நமது உணவு முறை இதை பற்றி எல்லாம் விரிவாக கலந்துரையாடுகிறோம்.

மக்கள் தங்களது துயரங்களை, பாதிப்புகளை மனம் விட்டு பேசுகிறார்கள். அவர்களுக்கு எங்களால் முடிந்த நல்ல தீர்வுகளை முன் வைக்கிறோம்.

சுகாதாரம் மக்களின் அடிப்படை உரிமையாகும். லட்சக்கணக்கான மருத்துவர்கள்,எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மருத்துவமனைகள்,புதிய புதிய கருவிகள்,விலை உயர்ந்த மருந்துகள்…எல்லாம் இருந்தும் மக்களுக்கு முழுமையான சரியான மருத்துவ வசதி கிடைப்பதில்லை.

நமது வாழ்க்கை முறை, வேலை செய்யும் முறை, உணவு முறை,குடும்ப அமைப்பு எல்லாமே மாறிவிட்டது,பல்வேறு நோய் பாதிப்புகள்…ஒரு நோய்க்கு மருந்து எடுத்தால் வேறு பல நோய்கள் வந்து சேர்கின்றன. எப்படித்தான் நலமாக வாழ்வது? நமது நாட்டில் மருத்துவச் செலவால் கடனாளி ஆனவர்கள் ஏராளம்.

உலகத்திலேயே இரண்டாவது பெரிய மருத்துவ முறை ஹோமியோபதி. ஹோமியோபதி மருந்துகள் எளிமையானவை, விலை மலிவானவை.வாயில் போட்டவுடன் வேலை செய்யத் தொடங்கிவிடும். குழந்தை கூட ருசித்து சாப்பிடும்

சமீபகாலமாக பேலியோ டயட் பற்றி அதிகம் பேசுகிறார்கள்.அந்தக் காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த மனிதனின் உணவு முறை வேறு.இன்று கம்ப்யூட்டர் காலம் .ஆடாமல் அசையாமல் பல மணி நேரங்கள் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் 5000,10,000 கலோரிகள் உள்ள உணவை சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் ஜீரணமாகுமா?பொருளாதார வசதி தான் இடம் கொடுக்குமா? ஆதி மனிதன் சாப்பிட மாதிரி இன்றைய மனிதன் சாப்பிட முடியாது. நடைமுறை சாத்தியமும் இல்லை.

உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டை சிறு தானியங்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. நமது அன்றாட வாழ்வில் சிறு தானியங்களை பெரும் அளவில் பயன்படுத்த தொடங்குவோம்.நமது பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதை தவிர்த்து,நமது பாரம்பரிய கடலை மிட்டாய்,எள்ளு உருண்டை பனைவெல்லம், நாட்டுச்சக்கரை பயன்படுத்திய தின்பண்டங்களை எல்லோருக்கும் வாங்கி கொடுத்து பயனடைவோம்   என்றார் டாக்டர். வெங்கடாசலம்.

சித்த மருத்துவர் டாக்டர். அருண் சின்னையா பேசியது :

சித்த மருத்துவத்தில் உணவே மருந்து,மருந்தே உணவு என்பதை நமது முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றுள்ளார். சித்த மருத்துவத்தில் உணவு அறிவியலை தனி பிரிவாக வளர்த்து எடுக்க வேண்டும். 

நமது முன்னோர்கள் தண்ணீரைக் கூட மருந்தைப் போல் ஆராய்ந்து பயன்படுத்தி உள்ளனர்.ஆற்றுத் தண்ணீர்,அருவி தண்ணீர், ஓடை தண்ணீர் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆராய்ந்து அதனை மருந்தாக பயன்படுத்தி உள்ளனர்.

நமது சமீபத்திய உணவு பழக்கங்கள் நோயை உற்பத்தி செய்வதாக உள்ளது. ஒரு வாரம் பத்து நாட்களுக்கு தேவையான மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வருகிறோம். இது ஆரோக்கியமானது அல்ல.எங்கு பார்த்தாலும் பிரியாணி கடைகள் பல்கி பெருகிவிட்டன.உணவு விடுதிகளில் பழைய சுட்டஎண்ணையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நமக்கு உணவு சார்ந்த விழிப்புணர்வு தேவை என்றார் டாக்டர்.அருண் சின்னையா.

டாக்டர்கள் எம்.ராமலட்சுமி, ராஜேந்திரன், வெ.ஆவடேஸ்வரி, மகாவிஷ்ணு, பாஸ்கர்,எஸ். ரவி ஆகியோர் பேசினார்கள் கூடுவாஞ்சேரி நகர்மன்ற உறுப்பினர் இரா. கலைச்செல்வம்,வாழ்த்தி பேசினார்.

மருத்துவர்கள் வீதியில் இறங்கி மக்களோடு மக்களாக கலந்து பேசி உரையாடுவது, நல்ல வாழ்க்கை முறையை சொல்லித்தருவது  பாராட்டிற்குரியது.இந்த முயற்சிகளில் பங்கேற்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.

-குணா