
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் அமைப்பைச் சேர்ந்த சென்னை கிளீனிகல்ஸ் மருத்துவமனை, அரிதான மற்றும் சிக்கலான விழுங்குதல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட இரு முதியவர்களுக்கு மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சை முறைகள் மூலம் வெற்றிகரமாகச் சிகிச்சையளித்துள்ளது.
இதில் எபிஃப்ரெனிக் டைவரடிகுலத்திற்கான D-POEM சிகிச்சையானது, தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவரால் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற முதல் செயல்முறை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர்,கடந்த மூன்று ஆண்டுகளாக உணவையும் திரவங்களையும் விழுங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். அவருக்கு அச்சலேசியா குறைபாட்டுடன் மிகப்பெரிய எபிஃப்ரெனிக் டைவர்டிகுல பாதிப்பும் இருந்த நிலையில், டைவர்டிகுலார் பெரோரல் எண்டோஸ்கோபிக் மயோடமி (D-POEM) சிகிச்சை மூலம் வெற்றிகரமாகக் குணப்படுத்தப்பட்டார்.
எபிஃப்ரெனிக் டைவர்டிகுலத்திற்கு D-POEM சிகிச்சையை மேற்கொண்ட தமிழ்நாட்டின் முதல் மருத்துவர் டாக்டர் பி.மகாதேவன் ஆவார்.
கடந்த இரண்டு மாதங்களில் அந்தப் பாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. திரவ உணவுகளைக் கூட உட்கொள்ள முடியாமல் சிரமப்பட்டதோடு, அடிக்கடி வாந்தியும் ஏற்பட்டு,கணிசமாக உடல் எடையும் குறைந்தது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அச்சலேசியா குறைபாட்டுடன் மிகப்பெரிய எபிஃப்ரெனிக் டைவர்டிகுல பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.இது இந்தச் சிகிச்சையை மேலும் சிக்கலானதாக மாற்றியது.
அவருக்குச் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இதயத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டென்ட் உள்ளிட்ட பல உடல்நலக் பிரச்சினைகளும் இருந்தன.
2026,மார்ச் 30 அன்று,டாக்டர் பி. மகாதேவன் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் முற்றிலும் ஓரல் வழியாக மட்டுமே செய்யப்படும் அதிநவீன எண்டோஸ்கோபி சிகிச்சை முறையான D-POEM நுட்பத்தைச் வெற்றிகரமாகச் செய்தனர். வெளிப்புற அறுவை சிகிச்சை காயங்கள் எதுவும் இன்றி,தசையில் ஏற்பட்ட இயல்பற்ற இறுக்கத்தையும் டைவர்டிகுலம் பாதிப்பையும் சரிசெய்ய இந்தத் தொழில்நுட்பம் மருத்துவக் குழுவிற்கு உதவியது.
சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பாட்டி விரைவாகக் குணமடைந்து, மூன்று நாட்களுக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.ஒரு மாதத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனையின் போது,அவர் உணவை விழுங்குவதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மீண்டும் செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவரது விழுங்கும் திறன் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் எண்டோஸ்கோபி பரிசோதனையில் அவரது உணவுக்குழாய் எவ்விதப் பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக அடைபட்டு, குணமடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
மற்றொரு நிகழ்வில், இந்தியாவில் வசித்து வரும் பெல்ஜியத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர்,கடந்த 10 ஆண்டுகளாக அனுபவித்து வந்த ஜென்கர்ஸ் டைவர்டிகுலம் பாதிப்பிலிருந்து, மாற்றியமைக்கப்பட்ட செப்டோடமியுடன் கூடிய ‘இஸட்-போயம்’ (Z-POEM with modified Septotomy) நுட்பம் மூலம் வெற்றிகரமாகக் குணமடைந்துள்ளார்.
செரிக்கப்படாத உணவு மீண்டும் வாய்க்கு வருதல், இருமல் மற்றும் தொண்டையில் தொடர்ந்து ஏற்படும் ஒருவித சத்தம் ஆகிய அறிகுறிகளால் அவர் பல ஆண்டுகளாக அவதியுற்று வந்தார்.இந்த பாதிப்புகள் அவரது தூக்கத்தையும் உணவருந்தும்
வழக்கத்தையும் கடுமையாகப் பாதித்தன.மேலும், கடந்த ஆறு மாதங்களில் அவர் 5 கிலோ எடையையும் இழந்திருந்தார்.
பரிசோதனையில், அவரது தொண்டைப் பகுதியில் செரிக்கப்படாத உணவுத் துகள்களுடன் கூடிய 5 செ.மீ அளவிலான பெரிய ஜென்கர்ஸ் டைவர்டிகுலம் இருப்பது கண்டறியப்பட்டது. 2025,ஜூலை 7 அன்று,டாக்டர் மகாதேவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இன்றி எண்டோஸ்கோபி வாயிலாக மாற்றியமைக்கப்பட்ட செப்டோடமியுடன் கூடிய ‘இஸட்-போயம் சிகிச்சையைச் செய்து முடித்தனர்.
சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனையில், அந்தப்பை போன்ற அமைப்பு சுருங்கி இயல்பு நிலைக்கு வந்ததும்,உணவு தடையின்றிச் செல்வதும் உறுதி செய்யப்பட்டது. உணவு மீண்டும் வாய்க்கு வருதல், இரவு நேரத் தொந்தரவுகள் மற்றும் தொண்டையில் ஏற்பட்ட சத்தம் ஆகியவற்றிலிருந்து தமக்கு முழுமையான நிவாரணம் கிடைத்துள்ளதாக நோயாளி தெரிவித்தார்.
உணவு குழாய் குறைபாடுகளுக்கு சரியான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நமது இதழ் சார்பாக வாழ்த்துகள்!
-ஷைலஜா, ஹெல்த் அண்ட் பியூட்டி.

