– பிரியங்கா பாஸ்கர், மன நல ஆலோசகர்
 
நினைவுகளின் ஓசைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. ஒவ்வொருவருக்கும் பிறந்தது முதல் எத்தனையோ நினைவுகள்.. நம் வாழ்நாளில் பாதியை நம் நினைவுகளே ஆட்கொண்டிருக்கிறது.. அவை இனிப்பு, கசப்பு ,சோகம் சந்தோஷம் என்று எல்லாமே கலந்து இருக்கிறது.. எந்தெந்த  நிலையில் எதை எதை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நமக்கே தெரியாது.  நினைவுகளாலேயே சூழப்பட்டு இருக்கிறோம்… குழந்தைப் பருவத்தில் சில, பள்ளிப்பருவத்தில் சில, வேலையில் சில, திருமண வாழ்வில் சில, முதுமையில் பல பல நினைவுகள் என்றே ஓடிக்கொண்டிருக்கிறோம். இவை அத்தனையும் சேமித்து வைத்துக் கொண்டிருக்கும் நமது மூளைக்கும் இதயத்திற்கும் என்றும் ஓய்வே கிடையாது போல.. இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா, கிடைத்தால் தவற விட்டதை மீண்டும் பிடித்து விடுவேன் என்று நம்முடைய ஏதோ ஒரு அழகான நினைவுகளின் நூல் இழையை பிடித்துக்கொண்டே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
 
 இதமான காற்றின் போதும், சுகமான ராகத்தின் போதும், சில நினைவுகள் நம்மை அழகாக வருடிக்கொடுத்து சென்று கொண்டிருக்கிறது… சிலவற்றில் இருந்து நம்மை மீட்டெடுக்க தவிக்கிறோம்… இது நடந்திருக்கக் கூடாது, மீண்டும் இதை மாற்றி விட முடியுமா? என்று கதறுகிறோம்..
 
 இதையெல்லாம் தாண்டியும் நம்முடைய இலக்குக்காக ஓடிக் கொண்டேதான் இருக்கிறோம் இன்னும்.. பார்ப்பவர்களுக்குத் தெரியாத வரை  நினைவுகளோடு பயணிக்கலாம். மற்ற கண்களுக்கு மாற்றம் தெரிகிறது என்றால் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு மீண்டு வர வேண்டும்.. எது நம்மை பெரிதும் வாட்டம்  கொடுக்கும்? நிச்சயமாக நாம் விரும்பிய  உயிர்களின் இறப்பும், இழப்பும்தான்.. ஆனால் அதிலேயே மூழ்கிக் கிடக்காமல் பிறப்பும் இறப்பும் எதார்த்தம் என்பதை புரிந்து மேலே வந்து தான் ஆக வேண்டும். வேறு வழி கிடையாது.
 
 நம்மால் மாற்ற முடியாத ஒரு நினைவு என்றால் இது மட்டும்தான்.. சொல்பவர்களுக்கு சுலபமாகத் தான்  இருக்கும்.. அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே வலியும் வேதனையும் புரியும்.. பல நேரங்களில் மனம் வெறுத்து விடுகிறது… என்னடா வாழ்க்கை இது என்று. இருந்தும் இந்த வாழ்க்கையை ரசித்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
 
கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன் நம் மனம் என்றுமே சுகமான நினைவுகளை தவிர சோகமான நினைவுகளை சுமந்து  சென்றுகொண்டிருக்கிறது. சுகம் நிறைய நிறைந்திருந்தாலும்.. எதனால் இப்படி, இவற்றை எல்லாம் மாற்ற முயற்சிக்காமல்  நமக்காகவே நேரமில்லாமல், இல்லாத ஒன்றை தேடி திரிந்து கொண்டிருக்கிறோம்… எதார்த்தத்தை புரிந்துக் கொள்வதும், இருப்பதை  ரசிப்பதும், இல்லாததை மறப்பதும், மனம் விட்டு சிரிப்பதும்தான் இந்த மாற்றத்திற்கான  மருந்து…
 
நம் மன அமைதியை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்தால் மீண்டும் தேவையில்லாத நினைவில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்… மாற்றத்தை உருவாக்க முயற்சியுங்கள். அது நம்மிடமிருந்தே உருவாகட்டும்.. அழகழகான நினைவுகளோடு மீண்டும் பயணிப்போம்.. நன்றி..
 
இப்படிக்கு உங்கள் பிரியங்கா பாஸ்கர்
 
மனநல ஆலோசகர்
தகவல் தொடர்புக்கு
63698 32399