– டாக்டர் ஜி. ராஜமோகன்

ச்சத்தை விதைத்து அன்பையும் அமைதியையும் அறுவடை செய்ய முடியுமா?

நாம் பேசும் அன்பான, அக்கறையான வார்த்தைகள் தான் அருமருந்து.இனிய சொற்கள் இதயத்திற்கு இதமாக இருக்கும்;மனசுக்கு வருடி கொடுக்கும்; சுகமாக இருக்கும். நல்ல வார்த்தைகள் ஒருவரை வாழவைக்கும். கொடிய,விஷம் தடவிய வார்த்தைகள் ஒருவரை காயப்படுத்தும்; வீழ்த்தும்; கொல்லும்.

சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட கொடூரமான,விஷம் தடவிய சொற்களால் பேசும்போது… வார்த்தை முற்றி கொலையில் கூட முடிவது உண்டு.பத்து ரூபாய் சமாச்சாரம் படுகொலையில் முடிவதை… அடிக்கடி செய்தித்தாளில் படிக்கிறோம்.

ஏன் இப்படி நடக்கிறது?

வன்முறை என்ற சொல்லைக் கேட்டதும் நம் மனதில் தோன்றும் பிம்பங்கள் என்னென்ன ?ரத்தம் சொட்டும் வரை ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது,காயப்படுத்துவது… வெட்டுவது…கத்தி போன்ற ஆயுதங்களால் தான் வன்முறை செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால்,விரலைக் கூட அசைக்காமல் வன்முறை செய்யலாம். பார்வையாலோ,முக பாவனையாலோ, பேசும் சொற்களாலோ வன்முறை நிகழ்த்த முடியும்.இவற்றை வாய்மொழி வன்முறை,சாத்வீக வன்முறை, மென்மையான வன்முறை என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

இந்த வாய்மொழி வன்முறைகளை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.

அச்சத்தை விதைத்து அன்பையும் அமைதியையும் அறுவடை செய்ய முடியாது.

நம் எண்ணம், உணர்வு,பேச்சு… இவை எல்லாவற்றிலும் விழிப்புணர்வு தேவை. வார்த்தைகளில் வெளிப்படாவிட்டாலும் உடல் மொழி காட்டிக் கொடுத்து விடும்.எப்போதும் சொல்வது போல அடுத்தவர்களை நல்வழிப்படுத்த முனைவதற்கு முன்னர் நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் வழிகளை கண்டறிந்து அதன்படி நடக்க வேண்டும்.

திருவள்ளுவர்…

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

நெருப்பு சுட்ட புண் கூட ஆறிவிடும்.ஆனால், வெறுப்புக் கொண்டு திட்டிய,விஷம் தடவிய சொற்கள் விளைவித்த துன்பம் ஆறவே ஆறாது.