
டாக்டர் கண்மணி கணேஷ் MD,DGO.
திருமணம் ஆகும் தம்பதியர் சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
காப்பர்-டி என்பது இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான கருத்தடை முறைகளில் சிறந்தது. காப்பர்-டி பாதுகாப்பானது என்றும் 99 சதவீதம் கருத்தடைக்கு உகந்தது என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே அகற்றிவிடலாம் என்பது இன்னுமொரு சிறப்பு.மாதவிடாய்ச் சுழற்சி முடிந்தவுடன் மருத்துவமனையிலேயே ஐந்து நிமிடங்களில் காப்பர்-டியை அகற்றிவிடலாம்.எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.
காப்பர்-டி குறித்த மூடநம்பிக்கைகள்
1.காப்பர்-டி பொருத்தும்போது முதல் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு சில பெண்களுக்கு ரத்தப்போக்கு சற்று அதிகமாக இருக்கலாம். பிறகு அது ஒரு வரைமுறைக்கு வந்துவிடும்.அதற்குள் பயந்துகொண்டு காப்பர்-டியை அகற்ற வேண்டியதில்லை.
2. காப்பர்-டி யில் இணைக்கப்பட்டிருக்கும் நூல் கருப்பையின் வெளியே லேசாகத் தொங்கும். இதனாலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.குறிப்பாக உறவின்போது, இதனால் எந்தத் தொந்தரவும் கணவனுக்கு ஏற்படாது.உறவுக்கும் காப்பர்-டிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
3. லட்சத்தில் ஒருவருக்கு காப்பர்-டி சரியாகப் பொருந்தாமலோ காப்பர்- டியின் காலாவதிக்குப் பிறகும் மாற்றாமல் இருந்தாலோ சிலநேரம் காப்பர்-டி கருப்பையை விட்டு விலக வாய்ப்புள்ளது. இது வெகு அபூர்வம்.
4. காப்பர்-டி போட்டால் எடை கூடிவிடும் என்ற கருத்தும் தவறானது.காப்பர்-டிக்கும் எடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கர்ப்பத்தின் போது உடல் எடை கூடுகிறது. பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவை மூலம் உடல் எடையைக் குறைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் குழந்தைக்குப் பால் கொடுப்பதாலும் பிரசவம் ஆகியுள்ளது என்று அதிகமாக ஓய்வெடுப்பதாலும் சரியாகத் தன்னைத் தானே கவனித்துக்கொள்ளாததாலும் உடல் எடை தானாகவே கூடுகிறது.
5. காப்பர்-டியை மாதவிடாய்ச் சுழற்சி முடிந்தவுடன் பொருத்துவது அல்லது எடுப்பது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அந்த நாட்களில் கருப்பையின் வாய் லேசாகத் திறந்திருக்கும். எனவே, பொருத்துவதும் அகற்றுவதும் எளிது. அந்தப் பெண் காப்பர்-டியைப் பொருத்தும்போது கர்ப்பம் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்வதற்காகவும் மாதவிடாய்ச் சுழற்சி முடிந்ததும் அதைப் பொருத்துகிறார்கள். கர்ப்பம் இருப்பது தெரியாமல் காப்பர்- டி போடக் கூடாது. காப்பர்-டியை எடுத்த பிறகு அடுத்த மாதமேகூட கர்ப்பம் தரிப்பதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு கர்ப்பம் தரிப்பதால் எந்தப் பாதிப்பும் குழந்தைக்கு ஏற்படாது.

