
நன்றியுடன்
டாக்டர் ஜி.ராஜமோகன்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்.கல்வி வளர்ச்சியில்,இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ் நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.காலை உணவு திட்டம், சத்துகள் நிறைந்த மதிய உணவு, கட்டணம் இல்லாத நோட்டு, புத்தகங்கள், படிப்பதற்கான நல்ல சூழ்நிலை என்று அடிக்கிக் கொண்டே போகலாம்.
இவை அனைத்தையும் தாண்டி கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் மன நல நல்லாதரவு மையங்களை உருவாக்கி விரிவு படுத்த வேண்டும்.
படிப்பில் கவனம் இன்மை, போதைப் பொருள் பயன்பாடு,செல்போன் அடிமைத்தனம், வன்முறை கலாச்சாரம், தேவையில்லாத இளம் வயது கர்ப்பம்,சாதிய மோதல்கள் உட்பட மாணவர்களை நல்வழிப்படுத்த சரியான திட்டமிடல் தேவைப்படுகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், தேவையேற்படின் உளவியல் ஆலோசகர்களை உள்ளடக்கி ஒரு அமைப்பை ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தலாம்.
இந்த அமைப்பில் இருப்பவர்களுக்கு மாவட்ட அளவில், மாநில அளவில் பல்வேறு வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம்.
மனநலன் தொடர்பான விழிப்புணர்வையும், மனநலப் பிரச்சினைகளின் தன்மைகளையும் அதன் தாக்கங்களையும், ஆரம்ப கட்ட வெளிப்பாடுகளையும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும். பெற்றோர்களுக்கும் இந்த மையத்தின் வழியாக தொடர்ச்சியாக வழி காட்டலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், மானுட அறங்கள், மதிப்பீடுகள்,கற்றல் தாண்டிய மாணவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை இந்த மையம் ஒருங்கிணைக்க வேண்டும்.
மாணவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான தன்னிச்சையான, சுதந்திரமான மனநல பாதுகாப்பு அமைப்பாக இந்த மையங்களை பள்ளிகள் உருவாக்கிட வேண்டும்.இந்த அமைப்பு என்பது மாணவர்களை புரிந்து கொள்ளக்கூடிய, இணக்கமாக செல்லக்கூடிய ஒன்றாக இருந்திட வேண்டும். குறிப்பாக மாணவர்களின் பிரச்சினைகளை எந்த முன் முடிவுகளுமற்று அவர்களின் கற்றலுக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் அணுகும் வகையிலும் இந்த அமைப்பின் செயல்பாடு இருக்க வேண்டும்.
இளம் வயதினரிடம் அதிகரித்து வரும் மன நல பிரச்சனைகளை தடுப்பதற்குண்டான வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.எதிர்கால சமுதாயம் சிறப்பாக அமைய இன்றே அடித்தளம் அமைக்க வேண்டும்.

