
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால் நரம்புகள் பாதிக்கப்படுவது சகஜம்.சர்க்கரை நோய் தொடர்ந்து கடுமையாக இருக்கும்போது உடலில் உள்ள புறநரம்புகள் (Peripheral Nerves) எல்லாமே பாதிக்கப்படலாம். அதற்கு ‘டயபடிக் நியுரோபதி’ (Diabetic Neuropathy) என்று பெயர்.தமிழில் இதை ‘நரம்பு வலுவிழப்பு நோய்’ என்கிறார்கள்.மற்ற நரம்புகளை ஒப்பிடும்போது, கால் நரம்பு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். அப்போது கீழ்க்காணும் அறிகுறிகள் ஏற்படும்:
* கால் மரத்துப்போகும்.
* காலில் எரிச்சல் ஏற்படும்.
* மதமதப்பு உண்டாகும்.* ஊசி குத்தும் வலி உண்டாகும்.
* எரிச்சலும் வலியும் இரவில் அதிகமாக இருக்கும்.
* பஞ்சு மேல் நடப்பதுபோலிருக்கும்.
* பாதங்கள் குளிர்ந்திருக்கும்.
* செருப்பு கழன்று போவதுகூட தெரியாத அளவுக்கு உணர்வு குறைந்து போகும்.
என்ன காரணம்?
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை எகிறும்போது,அந்தச் சர்க்கரையானது ‘சார்பிட்டால்’ எனும் வேதிப்பொருளாக மாறி, புறநரம்புகளில் படியும். அப்போது அது நரம்பிழைகளைப் பாதிக்கும்.காலில் ஏற்படுகின்ற தொடு உணர்வு, வெப்ப உணர்வு, வலி உணர்வு, அதிர்வு போன்றவற்றை மூளைக்கு எடுத்துச் சென்று நமக்கு உணர்த்துவது புறநரம்புகள்தான்.இந்த நரம்புகளை ‘சார்பிட்டால்’ பாதிக்கும்போது நரம்பு செல்களில் செய்திகள் கடத்தப்படும் வேகம் குறைகிறது.இதன் விளைவாகக் கால் மரத்துப் போகிறது. மதமதப்பு ஏற்படுவதும், பஞ்சு மேல் நடப்பது போலிருப்பதும் இதனால்தான்.
மேலும், இவர்களுக்கு ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படுவதால் நரம்பு செல்களுக்குத் தேவையான ரத்தமும் கிடைப்பது இல்லை. முக்கியமாக, நரம்பு முனைகளுக்கு ஊட்டச்சத்து,ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால் முதலில் எரிச்சலும், அதைத் தொடர்ந்து ஊசி குத்தும் வலியும் உண்டாகின்றன.பாதம் குளிர்ந்தும் போகிறது.
என்ன சிகிச்சை?
பாத எரிச்சலைக் குணப்படுத்த வேண்டுமானால்,முதலில் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை டாக்டர் யோசனைப்படி மறுபரிசீலனை செய்து, அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்.ரத்தச் சர்க்கரை அளவு, உணவு உண்டபின் 140 மி.கிராம். இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தொடர்ந்து ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் வைத்திருந்தால் மட்டுமே கால்வலி, எரிச்சல், மதமதப்பு போன்ற தொல்லைகள் குறையும். மேலும் உடலில் காணப்படும் மற்ற காரணங்களுக்கும் சிகிச்சை பெற வேண்டும். அதுவரை அந்த அறிகுறிகளைக் குறைப்பதற்கென்றே இருக்கிற நரம்பூட்ட மாத்திரைகளையும் கால் எரிச்சலைக் குறைக்கும் மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். நரம்பூட்ட ஊசிகளையும் போட்டுக்கொள்ளலாம். பாதங்களில் தேய்த்துக்கொள்ளவும் தற்போது களிம்புகள் கிடைக்கின்றன.
டாக்டர் கு.கணேசன்.

